சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதனை முடித்த பிறகு கமல் ஹாசன் தயாரிப்பில் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

பாக்யராஜ் 50 – விழாவில் பகிர்ந்த ரஜினியின் அனுபவம்

இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜின் 50 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ரஜினிகாந்த், தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றதாக அவர் நினைவுகூரினார்.

ஜெயலலிதாவை விமர்சித்த பேச்சு

அந்த விழாவில் பேசிய போது, உணர்ச்சி வசப்பட்டு ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசிவிட்டதாகவும், அது அப்போது பெரிதாக புரியவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். பின்னர் நடிகை ஸ்ரீதேவி, “ஏன் இப்படி பேசினீர்கள்?” என்று கேட்டபோதுதான், தனது பேச்சின் தீவிரம் புரிந்ததாகவும் கூறினார்.

அதிமுக தொண்டர்கள் தாக்குதல்

விழாவுக்குப் பிறகு நடிகர்களை திறந்தவெளி வேனில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் விஜயகுமார் வரவேண்டாம் என அறிவுறுத்தியபோதும், நான் போக வேண்டும் என்று வலியுறுத்தி சென்றதாக ரஜினி கூறினார்.

அப்போது, கோபமடைந்த அதிமுக தொண்டர்கள் கற்களை வீசி தாக்கியதாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றதாகவும் அவர் கூறினார். சிலர் ஒரு பக்கம் செல்லுமாறு, சிலர் மறுபக்கம் செல்லுமாறு இழுத்ததால், அடியும் கிள்ளலும் நடந்தது தெளிவாக உணர்ந்ததாக ரஜினி உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

பாக்யராஜ் செய்த உதவி

இந்த கடினமான சூழ்நிலையில், தன்னை பாதுகாப்பாக அங்கிருந்து மீட்டது இயக்குநர் பாக்யராஜ் தான் என்றும், அவரது உதவியை எப்போதும் மறக்க முடியாது என்றும் ரஜினிகாந்த் கூறி நெகிழ்ந்தார்

Share.
Leave A Reply