ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய அதிகாரிகளால் கடந்த காலங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை வெளியிடுமாறு தகவல் உரிமை ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட குறித்த விபரங்களை, எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தரப்பிற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கோரப்பட்ட தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதிகளின் பதவிக் காலங்களில் நியமனம் பெற்ற அதிகாரிகளால், ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்களே இந்த உத்தரவின் கீழ் வெளியிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி தகவல் உரிமைச் சட்டத்தின் பேரில் இந்த தகவல்களை கோரியிருந்தார். எனினும், குறித்த தகவல்களை வழங்குவதில் செயலகம் தொடர்ந்து தாமதம் செய்ததாக குறிப்பிடப்படுகிறது.
தகவல் வழங்க மறுத்த காரணங்கள்
ஜனாதிபதி செயலகம், வாகனப் பதிவு எண்கள் உள்ளிட்ட விபரங்களை வெளியிடுவது தனியுரிமை மீறலாகவும், பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் எனக் கூறி தகவல் வழங்க மறுத்திருந்தது. மேலும் பல சந்தர்ப்பங்களில் செயலகம் தனது நிலைப்பாட்டை மாற்றி, தகவல் வழங்குவதைத் தொடர்ந்து மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏழு முறை அனுப்பப்பட்ட மனுக்கள்
இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் 2025 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்தார். இதன் பின்னர், ஆணைக்குழு ஏழு முறை ஜனாதிபதி செயலகத்திற்கு மனு அனுப்பியிருந்த போதும், பல தடவைகள் செயலகத்தின் பிரதிநிதிகள் முன்னிலையாகவில்லை.
ஆணைக்குழுவின் தீர்ப்பு
2026 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையில், தகவல் உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் நிலைப்பாட்டை நிராகரித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கோரப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

