பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய சந்தேகநபர்கள் கைது

கைதுசெய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் தனிப்பட்ட செயலாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும், பாதாள உலக கும்பல் தலைவர் “கொன்ட ரன்ஜித்” என்பவரின் நெருங்கிய சகாவான “சூட்டி மல்லி” என்பவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல் தலைவர் “புன்சா” என்பவரின் சகாவும் இந்த கைது நடவடிக்கையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பெண் ஒருவரும் கைது

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

கைதுசெய்யப்பட்ட மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கொண்ட விசேட பொலிஸ் குழு டுபாய்க்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply