எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர், நாட்டின் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சேவை 11 மாவட்டங்களில் நிகழ்நிலையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி அனுமதிப் பத்திரங்களை உடனடியாக வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு மாதத்திற்குள் சாரதி அனுமதிப் பத்திரம்

அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறைமை முழுமையாக நடைமுறைக்கு வந்த பின்னர், சாரதி அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பிப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த தாமதங்கள் குறையப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அச்சிடல் தொடர்பான செலவுகள்

கடந்த ஆண்டு சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ. 184 மில்லியன் செலுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,
இந்த ஆண்டு ரூ. 28 மில்லியன் செலவில் புதிய நிறுவனத்தின் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கி, நேரடியாக அச்சிடும் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் செலவுகளை குறைத்து, சேவையை விரைவாகவும் திறமையாகவும் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply