எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும், அந்த நம்பிக்கையை எந்நிலையிலும் சிதறடிக்கமாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் நேற்று (15) நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களின் பங்கு

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
“நாட்டு மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து செயல்பட்டனர். அவர்களின் ஆதரவுடன் உருவான அரசாங்கமே இன்று நாட்டை முன்னோக்கி நகர்த்தி வருகிறது” என கூறினார்.

மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களே புதிய அரசாங்கத்தை மக்கள் எம்மிடம் கையளிக்க காரணமாக அமைந்ததாகவும், அந்த நம்பிக்கையை ஏற்று பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்

யாழ் மாவட்ட மக்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர்,
“யாழ் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்நிலையிலும் சிதறடிக்க மாட்டோம். இந்தப் பொங்கல் நாளில் அதனை உறுதியாக கூறிவைக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

வதந்திகளுக்கு இடமில்லை

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இதனைப் பொறுக்க முடியாத சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.

எம்மோடு இணைந்திருங்கள்

மேலும் அவர்,
“தமிழ் மக்கள், குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள். அவர்களின் நம்பிக்கையை சிதறடிக்காமல் பலப்படுத்துவோம். நீங்களும் எம்மோடு இணைந்திருங்கள்” என அழைப்பு விடுத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

குறித்த நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் எம். பிரதீபன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply