கடந்த சனிக்கிழமை அதிகாலை அமெரிக்க வான்படையினரும் தரைப்படையினரும் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் வெனிசுவேலா அமெரிக்காவிடம் வீழ்ந்தது என்பது உண்மை.
அமெரிக்கப் படையினர் தமக்கு அளிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றும் வகையில், வெனிசுவேலா ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப்பிடித்து முதலில் விமானந்தாங்கிக் கப்பலுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் கொண்டு சென்றனர்.
ஒரு செல்வவளம் கொழிக்கும் நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மதுரோ மறுத்திருக்கிறார். அவருக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்பட்டுவிடும்.
இதேசமயம் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் டல்சி ரொட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் தான் ஒத்துழைத்து பணியாற்றத் தயார் என்று கூறி இருக்கிறார். அவருக்கு இதைத்தவிர வேறு வழியுமில்லை. மறுத்தால் என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.
கடந்த புதன் இரவு வெளியான தகவல்களின் பிரகாரம் வெனிசுவேலா உற்பத்தி செய்யும் உயர்ரக எண்ணெய், 30 முதல் 50 மில்லியன் பீப்பாய், அமெரிக்காவுக்கு தரப்படும் என வெனிசுவேலா அரசு கூறியிருக்கிறது. ஒரு சுதந்திரமான நாட்டை நசுக்கி, தன் இஷ்டப்படி அமெரிக்கா ஆட்டுவித்து வருகிறது என்பதற்கான சாட்சியங்களாக இவற்றை நாம் கொள்ளலாம்.
மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட காட்சியையும், கேள்விகளுக்கு அவர் நிதானமாக பதிலளித்ததையும் பார்த்தபோது சதாம் ஹுசைனின் நினைவு பலருக்குள் வந்திருக்கலாம்.
தாக்குதல் நடைபெற்றதற்கு சில தினங்களுக்கு முன்னர் மதுரோ சீனத் தூதுக் குழுவொன்றைச் சந்தித்தார். சீனா பெருமளவு மசகு எண்ணெய் வாங்கும் நாடு என்பதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் யுவானிலேயே நடைபெறுகிறது.
முன்னர் சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உலகளவில் நடைபெறும் எண்ணெய் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் அமெரிக்க டொலர்களிலேயே நடைபெற வேண்டும். ரஷ்யா அதை தற்போது நிராகரித்து விட்டது.
மதுரோவும் அதை நிராகரித்து யுவானை பயன்படுத்துகிறார். பஸ் சாரதியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த நிக்கலஸ் மதுரோ, இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகிறார். இடதுசாரி தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு உழைக்கிறார். இடதுசாரி அரசியலே அவரை உச்சத்துக்கு கொண்டு வருகிறது.
தனது நாட்டுக்கு அண்மையில் எண்ணெய் வளத்தில் சிறந்திருக்கும் ஒரு நாடு இடதுசாரி சிந்தனையும் கம்யூனிச நாடுகளுடன் உறவும் கொண்டிருக்கும் போது அதை ட்ரம்ப் எப்படி சகித்துக் கொள்வார்?
இரண்டாவது விடயம், பிரிக்ஸ் கூட்டமைப்பு ரஷ்யாவையும் உள்ளடக்கியது. சீனா, ஈரான், இந்தியா, ஐக்கிய அமீரகம், தென்னாபிரிக்கா என்பனவும் அங்கத்துவ நாடுகள். இதில் சேர வெனிசுவேலாவும் விண்ணப்பித்துள்ளது.
இந்த நாடுகளை எடுத்துக் கொண்டால், உலகப் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தை உள்ளடக்கிய அமைப்பாக இது மாறும் என்பதோடு, இந்த உறுப்பு நாடுகளின் மொத்த சனத்தொகை 4.45 பில்லியன்களாக உள்ளது.

BRICS
இதனால்தான் யூரோவைப் போல பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவது தொடர்பாக அந்த அமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இது சாத்தியமானால் உலக அளவில் டொலருக்கு உள்ள கிராக்கி வீழ்ச்சியடைந்து விடும். பெட்ரோ டொலர் என்ற கீர்த்தி படிப்படியாக மடியத் தொடங்கும். இதனால்தான் பிரிக்ஸ் நாணயம் சாத்தியப்படக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.
சூட்டோடு சூடாக கிறீன்லாந்து பற்றியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்க பாதுகாப்புக்கு கிறீன்லாந்து இன்றியமையாதது என்றும், அது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் டென்மார்க்கை அவர் கேட்டிருக்கிறார். அவசியமானால் படைபலம் பயன்படுத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க் அதிபர் இதைக் கடுமையாக எதிர்த்திருப்பதுடன், ஐரோப்பிய சமூக நாடுகளும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
ட்ரம்பின் அமெரிக்காவை ஒரு ஒக்டபசோடுதான் ஒப்பிட வேண்டியிருக்கிறது. கொலம்பியாவுக்கும் மெக்சிகோவுக்கும் கூட அவர் எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்.
“கோரிக்கைகளுக்கு அடிபணியாவிட்டால் தாக்குவோம், கபளீகரம் செய்வோம்” என்பது ஒரு பேட்டைச் சண்டியனைத்தான் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்பது ட்ரம்பின் சிந்தனை. தொடர்ந்தும் அமெரிக்காவே இராணுவ, பொருளாதார மற்றும் உலகளாவிய செல்வாக்கு கொண்ட நாடாகத் திகழ வேண்டும். அதற்கான சகலதையும் அமெரிக்கா செய்ய வேண்டும் என்பது ட்ரம்பின் கொள்கை.
இதனால் ஏனைய நாடுகள் தமது உரிமைகளையும், சுதந்திரத்தையும் இழக்க விடலாமா? என்பதில் அந்நாட்டுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.
இது புதிய ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஜோர்ஜ்புஷ் முன்னர் புதிய உலக ஒழுங்கை (New World Order) அறிமுகம் செய்தார். ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மற்றொரு சண்டித்தன உலக ஒழுங்கை உருவாக்குமோ என அச்சப்பட வேண்டியிருக்கிறது.
இதன் பிரகாரம், ரஷ்யா உக்ரேனை விழுங்கலாம். தாய்வானை சீனா விழுங்கலாம். சிறிய நாடுகளை பெரிய நாடுகள், அரசர் காலத்தைப் போலவே கபளீகரம் செய்வது புதிய உலக ஒழுங்காகிவிட்டால், எந்த நாடும் பாதுகாப்பானதாக இருக்க முடியாதே!
ட்ரம்ப்தான் சண்டித்தனம் செய்கிறார் என்று எவரும் கருதிவிடக் கூடாது, அது அமெரிக்காவுக்கு கைவந்தகலை.
வாசகர்களுக்கு நினைவு இருக்குமானால், அமெரிக்கா பனாமா மீது படையெடுத்தது நினைவுக்கு வரலாம்.
1989 டிசம்பர் 20ஆம் திகதி அமெரிக்கப் படைகள் விமானப் பாதுகாப்புடன் பனாமா மீது படையெடுத்தன. அந்நாட்டின் தலைவரான மெனுவல் நொரீகாவை அமெரிக்கா சிறைப்பிடித்தது.
பனாமாவிலிருந்து போதைப் பொருட்கள் அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாகக் கூறியே ஜோர்ஜ்புஷ் அரசு பனாமாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
ஈராக் அணுவாயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா தனது நேசநாட்டு இராணுவங்களின் பக்கபலத்துடன் படையெடுத்து அந்நாட்டை அழித்தொழித்தது.
அமெரிக்கா தனது நலன்களுக்காக எதையும் செய்யக்கூடிய நாடு என்பதை அது வெனிசுவேலாவின் மீதான படையெடுப்பின் மூலம் நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் இந்தப் படையெடுப்பு, இரண்டு விஷயங்களை நியாயப்படுத்துவதாகத் தெரிகிறது.
முதலாவது, போர்ப் பிரகடனம் செய்யாமலேயே ஒரு நாட்டின் சுயாதிபத்தியத்தைத் தாண்டி, அந்நாட்டினுள் நுழையலாம். அதன் ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து தனது நாட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குட்படுத்தலாம் என்ற புதிய அரசியல் நியாயம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, ஒரு நாட்டைத் தன் விருப்பப்படி அடிமைப்படுத்தி அதன் வளங்களைச் சுரண்டலாம் என்ற நியாயமாகும்.
இந்த வெனிசுவேலா மீதான தாக்குதல் இரண்டு வகையாக பார்க்கப்பட முடியும். பெரும்பாலான நாடுகள் ஒரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பாகவும், அதன் இறைமையை துச்சமாக மதிக்கும் செயலாகவும் கருதுகின்றன.
அரசர்கள் அக்காலத்தில் எதிரி நாட்டு அரசனின் மனைவியை அடைவதற்காகவும் படை நடத்தியிருக்கிறார்கள். முதலாம் இரண்டாம் மகா யுத்தங்களும் போதுமான காரணங்களின்றி, சிறிய விடயத்தில் ஆரம்பித்து உலகப் போராக மாறியவை ஆகும்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இந்தப் பார்வையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் வெனிசுவேலா மீதான தாக்குதலும், அதிபர் கைதும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்ற அறிவிப்பும், பலம் பொருந்திய எல்லா நாடுகளும் பக்கத்து நாடுகளை தமது நலன்களின் பொருட்டு ஆக்கிரமிப்பது சரியானதுதான் என்பதான ஒரு அச்சமூட்டும் சூழலை உலகில் ஏற்படுத்தியுள்ளதாக பல நாடுகள் கருதுகின்றன.
பலம் பொருந்திய நாடுகள் கருதுவது வேறு விதமாக. தமது நாடு அமைந்திருக்கும் பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார அணுகுமுறைகள் தமக்கு சார்பானதாக, தமது பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் எனக் கருதுகின்றன.
1962ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு மூன்றாம் உலகப் போரைத் தொடும் அளவுக்கு உரசல் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அயலில் அமைந்திருக்கும் கியூபாவில் ரஷ்யா தன் ஏவுகணைத் தளங்களை அமைக்கத் தொடங்கியது.
இதை அறிந்த அன்றைய அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி, இதைத் தடுத்தேயாக வேண்டுமெனக் கருதினார். கியூபாவை எந்த ரஷ்ய கப்பலும் அணுக முடியாதவாறு கடற்படை வலயத்தை அமைத்தார். ரஷ்ய ஆயுதக் கப்பல் வந்தபோது அமெரிக்கக் கப்பல்கள் அதைச் சுற்றிவளைத்தன. இறுதியில் ஏவுகணைத் தளங்களை அகற்ற ரஷ்ய அதிபர் குருஷேவ் இணங்கினார்.
உக்ரேன் நேட்டோவில் இணைந்தால் தன் வாசல் முற்றத்தில் நேட்டோவின் ஏவுகணைகள் நிறுவப்பட முடியும் என்பதை ரஷ்யா உணர்ந்ததையடுத்தே உக்ரேன் போர் வெடித்தது.எனவே, பலம் பொருந்திய நாடுகளின் சில விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை சூழவுள்ள நாடுகள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் வெனிசுவேலா மீதான தாக்குதல் எமக்கு உணர்த்தி நிற்கிறது.

