தரம் 6 ஆங்கிலப் பாடப் பிரிவில் ஆபாசமான ஓரினச்சேர்க்கை இணையதளத்தின் இணைப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆரம்பமான சர்ச்சை, இந்த வாரம் மேலும் தீவிரமடைந்து பல்வேறு திசைகளில் விரிவடைவதைக் காணமுடிகிறது.

பிமல் ரத்நாயக்க
இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைவதற்கு இடமளிக்காது, பிரதமர் ஹரிணி அமரசூரியவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்குமாறு ஜே.வி.பி தலைமையகம், ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக பல ஊடங்களில் செய்திகள் வெளியாகின.
பிரதமர் தொடர்பில் இவ்வாறானதொரு நெருக்கடி உருவாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் இயந்திரம் மாற்றப்பட வேண்டும் என்றும், அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட வேண்டும் என்றும் பெலவத்தையிலிருந்து முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதனை பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஜனாதிபதி அந்த முன்மொழிவை நிராகரித்ததோடு, ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர்களான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பிமலின் கருத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தனர்.
இத்தருணத்தில் அத்தகைய அமைச்சரவை மாற்றமோ அல்லது பிரதமரை நீக்குவதோ தேவையற்றது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இம்முறை ஜே.வி.பி தலைமையகத்திலிருந்து இந்த முன்மொழிவு வலுவாக முன்வைக்கப்பட்டபோது, பிரதமர் பதவிக்கு மீண்டும் பிமலின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி தனது ஆரம்ப நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்தார்.
அதாவது, இத்தருணத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும், அவ்வாறு மாற்றம் செய்ய வேண்டுமாயின் நிலவும் பூகோள அரசியல் சூழலில் அதற்குச் சிறந்த தெரிவு பிமல் அல்ல, விஜித தான் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருந்தது.
இந்த பின்னணியில், ஹரிணி அமரசூரிய தொடர்பான பிரச்சினை பல்வேறு பரிமாணங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும், எதிர்க்கட்சி தற்போது பிரதமர் தொடர்பான விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்துள்ளதையும் காணமுடிகிறது.

உலப்பனே சுமங்கள தேரர்
ஆங்கிலப் பாடப் பிரிவில் இவ்வாறானதொரு ஓரினச்சேர்க்கை இணையதள இணைப்பு உள்ளதை நாட்டிற்கு முதன்முதலில் வெளிப்படுத்தியது ஆசிரியர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலப்பனே சுமங்கள தேரர் ஆவார்.
அவர் அஸ்கிரி மகா நாயக்க தேரரைச் சந்தித்து இதனைத் தெரியப்படுத்திய போது, மகா நாயக்க தேரரின் பதில் எவரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் கடுமையானதாக இருந்தது. விடயத்தைக் கேட்டறிந்த அவர், ‘இவர்கள் நாட்டை அழிக்கிறார்கள்… இது மிகவும் ஆபத்தானதாயிற்றே… இவற்றுக்கு இடமளிக்கக் கூடாது…’ என பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இதனடிப்படையில், ஊடகங்கள் ஊடாக இந்த விடயம் வெளியானதையடுத்து, வெளியே தெரியாவிட்டாலும் மகா சங்கத்தினர், அதிபர்-ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் இந்த நிலையை மிகவும் பாரதூரமாக கலந்துரையாடுவதைக் காண முடிந்தது. குறிப்பாக எதிர்க்கட்சியும் இவ்விடயத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
ஹரிணி குறித்து அநுர இறுதி முடிவு
வியாழக்கிழமையாகும் போது பிரதமர் ஹரிணி தொடர்பாக மேலும் ஒரு விசேட தகவல் வெளியாகியது. எவ்வளவு அழுத்தங்கள் வந்தபோதிலும் எக்காரணம் கொண்டும் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பிரதமரை பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதியுடன் அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் சிலர் நடத்திய கலந்துரையாடலில், சுமத்தப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து பிரதமரைப் பாதுகாப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப்பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் அங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதன்படி எடுக்கப்பட்ட பிரதான தீர்மானம் யாதெனில், தற்போது செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதும், அவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதுமாகும்.
(லியோ நிரோஷ தர்ஷன்)

