ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்டதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோர்டோபா நகரை அடுத்துள்ள அடாமுஸ் அருகே மாட்ரிட் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதியதாக ரயில் சேவை வழங்கும் ஏடிஐஎஃப் (ADIF) நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்டலூசியாவின் அவசர சேவைப் பிரிவு, குறைந்தது 73 பேர் பலத்த காயமடைந்ததாகக் கூறியுள்ளது. அதே நேரத்தில், தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்டு வந்தனர்.
ஏடிஐஎஃப் (ADIF) நிறுவனத்தின்படி, உள்ளூர் நேரப்படி 18:40 மணிக்கு மாலாகாவிலிருந்து ரயில் புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக அடோச்சா, செவில்லா, கோர்டோபா, மாலாகா மற்றும் ஹுயெல்வா நிலையங்களில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட் மற்றும் அண்டலூசியாவிற்கு இடையேயான அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக முனையங்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மாலாகாவிலிருந்து ரயிலை இயக்கிய ஐரியோ என்ற தனியார் ரயில் நிறுவனம், தடம் புரண்டதை உறுதிப்படுத்தியதுடன், சுமார் 300 பயணிகள் ரயிலில் இருந்ததாகத் தெரிவித்தது.

