பனி படர்ந்த ஆர்க்டிக் பிராந்தியமானது இன்று உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் வியூகம், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது வெறும் நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்லாமல், எதிர்கால எரிசக்தித் தேவைகள், கடல்சார் போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு சிக்கலான விவகாரமாக உருவெடுத்துள்ளது.

பூர்வீகக் குடிகளும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பும்

தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கு முன்பதாக இதன்ங வரலாற்று நிலையை உற்றுநோக்க வேண்டியுள்ளது. சர்வதேச அரசியல் ஆய்வாளர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டுவது போன்று, கிரீன்லாந்தின் உண்மையான உரிமையாளர்கள் அங்கிருந்த பூர்வீக ‘எஸ்கிமோ’ (இனுயிட் – Inuit) பழங்குடியினர் ஆவர்.

இவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதியிலிருந்து பெரிங் நீரிணை ஊடாக இந்தத் தீவுகளுக்குப் புலம் பெயர்ந்த மங்கோலிய இனத்தவர்கள். குளிருக்குத் தம்மை பொருத்திகொண்டு கொண்டு, மீன்பிடித்தல் மற்றும் விலங்கு வேட்டையாடுதல் மூலம் தங்களின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாத்து வந்தனர்.

இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டுகளில் நிலைமை மாற்றமடைந்தது. ஐரோப்பிய நாடுகளின் கடல்சார் ஆதிக்கம் வளர்ந்தபோது, நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இந்தப் பகுதிகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன.

குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டில் டென்மார்க் தனது அதிகாரத்தை இங்கு நிலைநாட்டியது. ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இதே காலகட்டத்தில் இந்த டேன்ஸ் எனப்படும் டனிஷ் ஆட்சியாளர்கள் இலங்கைக்கும் வந்திருந்ததாக சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகிறார்.

திருகோணமலையை மையப்படுத்தி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதுடன், இலங்கையின் முத்துக்கள் மற்றும் யானைகளை டென்மார்க்கிற்குக் கொண்டு சென்றனர். இன்று கோபன்ஹேகன் அருங்காட்சியகங்களில் இவற்றுக்கான சான்றுகள் உள்ளன என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டுகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் படைகள் டென்மார்க்கைக் கைப்பற்றியவுடன், கிரீன்லாந்து ஹிட்லரின் வசமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்தது.

அக்காலத்தில் வானிலை தரவுகளைப் பெறுவதற்கு கிரீன்லாந்து மிக முக்கியமான இடமாக இருந்தது. அந்தச் சூழலில் கனேடிய மற்றும் அமெரிக்கப் படைகள் கிரீன்லாந்தில் நிலைகொண்டன. போர் முடிந்த பின்னர், ஐஸ்லாந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்றாலும், கிரீன்லாந்து ஒரு ‘டொமினியன்’ அந்தஸ்துடன் டென்மார்க்கின் வெளியுறவுக் கொள்கையின் கீழ் இருந்து வருகிறது.

தற்போது அமெரிக்கா மீண்டும் இந்தப் பிரச்சனையைத் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. இதற்கு மூன்று பிரதான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள்

பருவநிலை மாற்றத்தினால் கிரீன்லாந்தின் 80 வீதமான பகுதியை மூடியுள்ள பனிப்படலங்கள் உருகத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, பனியின் அடியில் மறைந்துள்ள அபூர்வ வகை கனிமங்கள் (Rare Earth Elements), தங்கம், வைரம் மற்றும் பாரிய எண்ணெய் வளங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பனி உறைந்த நிலையில் இவற்றை எடுப்பது செலவு மிக்கது, ஆனால் பனி உருகும் போது இது மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பாக மாறுகிறது.

புதிய கடல்வழிப் பாதைகள்

ஆர்க்டிக் பனி உருகுவதால், சைபீரியா வழியாக ஐரோப்பாவை இணைக்கும் புதிய கடல்வழிப் பாதைகள் திறக்கப்படுகின்றன. இது உலக வர்த்தகத்தின் திசையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

மேலும் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. “இது எங்கள் கண்டம், எங்கள் பிராந்தியம்” என்ற அமெரிக்காவின் ‘மண்ரோ கோட்பாடு’ (Monroe Doctrine) போன்ற அணுகுமுறையை ட்ரம்ப் இங்கு கையாள்கிறார்.

இந்நிலையிலேயே அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் போன்ற முக்கிய தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஆலோசனைகளின்படி, அமெரிக்கா மூன்று விதமான யோசனைகளை முன்வைத்துள்ளது:

விலைக்கு வாங்குதல்

முன்பு ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவையும், பிரான்சிடமிருந்து லூசியானாவையும் அமெரிக்கா வாங்கியது போன்று, கிரீன்லாந்தை 7 பில்லியன் டொலர்களுக்கு விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. அங்கிருக்கும் 57,000 மக்களுக்கும் தலா ஒரு இலட்சம் டொலர்கள் என்ற அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மூலோபாயக் கூட்டணி

இரண்டாவது பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில தீவுகளைப் போன்று, கிரீன்லாந்தை ஐக்கிய நாடுகள் சபையில் தனி உறுப்பினராக வைத்திருந்தாலும், அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு முடிவுகளை அமெரிக்காவே எடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குதல்.

மேற்குறித்த இரண்டும் இல்லாவிடின் இராணுவ நடவடிக்கை ஊடாக கிரீன்லாந்தை எடுப்பது காணப்படுகிறது. இது ஒரு தீவிரமான முடிவாகும். டென்மார்க்கை வெளியேற்றிவிட்டு அமெரிக்க இராணுவத்தை அங்கு நிலைநிறுத்துவதை இது குறிக்கிறது.

அந்தவகையில் அமெரிக்கா இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பது நேட்டோ அமைப்பிற்குள் பாரிய விரிசல்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“அமெரிக்கா இராணுவ ரீதியாக கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயன்றால், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வரும்” என சர்வதேச அரசியல் ஆய்வாளர் சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகிறார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த நகர்வை வன்மையாக எதிர்க்கின்றன.

எப்படியிருப்பினும் ட்ரம்ப் முன்வைக்கும் ஒரு வாதம் மிகவும் முக்கியமானது. “300 ஆண்டுகளுக்கு முன்பு படகில் வந்த டேனிஷ் ஆட்சியாளர்கள் எஸ்கிமோக்களை அடிமைப்படுத்தியதால் மட்டும் இந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது.” இந்த வாதம் ஒரு வகையில் நியாயமானதாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் இருப்பது பூர்வீகக் குடிகளின் மீதான அக்கறையல்ல என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதன்படி கிரீன்லாந்து விவகாரம் என்பது இன்று உலக அரசியல் அதிகாரப் போட்டியின் உச்சகட்டமாக மாறியுள்ளது.

ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என நான்கு முனைகளில் இந்தப் போட்டி விரிவடைந்துள்ளது. இறுதியில் கிரீன்லாந்து ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

பனிப்பாறைகள் உருகுவது இயற்கைக்கும் பூமிக்கும் ஆபத்தாக இருந்தாலும், வல்லரசுகளுக்கு அது புதிய அதிகாரக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்த அதிகாரப் போட்டியில் கிரீன்லாந்தின் உண்மையான உரிமையாளர்களான இனுயிட் மக்கள் தங்களின் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது.

ரொபட் அன்டனி

Share.
Leave A Reply