t;பணக்கார ஆண்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களை வீழ்த்தி, அதை வீடியோவாக எடுத்து, மிரட்டிப் பணம் பறித்துவந்த கும்பலைக் கூண்டோடு கைதுசெய்திருக்கிறது சேலம் போலீஸ்.
‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பட பாணியில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம், சேலத்தையே அதிரவைத்திருக்கிறது!
சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் பூபதி (32). இவரது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆர்.சி.செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக, இருவரைக் கைதுசெய்திருக்கிறார் பூபதி. ‘
அந்த வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்’ என்ற அடையாளத்துடன், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அலமேலு (25) என்பவர் பூபதிக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பூபதியிடம் ரூ.92,000 கடனாக வாங்கியிருக்கிறார் அலமேலு.
கடனைத் திருப்பிக் கேட்டபோது, ஊமகவுண்டம்பட்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வருமாறு பூபதியை அழைத்திருக்கிறார் அலமேலு.
இரவு 11 மணிக்கு ஊமகவுண்டம்பட்டிக்குச் சென்ற பூபதியிடம் அலமேலு நெருக்கமாக நடந்து கொள்ள, ஒருகட்டத்தில் இருவரும் தனிமையில் இருந்திருக்கின்றனர்.
அப்போது திடீரென அந்த வீட்டுக்குள் வந்த நான்கு பேர்கொண்ட கும்பல், பூபதியைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததுடன், ஏற்கெனவே அவரும் அலமேலுவும் உல்லாசமாக இருந்த வீடியோவையும் காட்டி மிரட்டியிருக்கின்றனர்.
மேலும், அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ஜிபே மூலம் ரூ.27 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அலமேலுவும், அந்தக் கும்பலும் அங்கிருந்து தப்பியிருக்கின்றனர்.
இது குறித்து பூபதி அளித்த புகாரின் அடிப்படையில், தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அலமேலுவையும் அவரின் மோசடி நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்களையும் கைதுசெய்திருக்கின்றனர்.
விசாரணையில், பணக்கார ஆண்களைக் குறிவைத்து, அவர்களைத் தனது ஆசை வலையில் வீழ்த்தி அலமேலு பணம் பறிப்பதில் ஈடுபட்டுவந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “ப்ளஸ் டூ வரை மட்டும் படித்திருக்கும் அலமேலு, தன்னை வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு, சேலம் நகருக்குள் வலம்வந்திருக்கிறார்.
அப்போதுதான், இரட்டையர்களான ஜனார்த்தனன் (28), ஜன அம்சபிரியன் (28) ஆகியோருடன் அலமேலுவுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மூவரும் பணம் பறிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
அதன்படி, சேலம், ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பணம் படைத்தவர்களின் செல்போன் எண்களைச் சேகரித்திருக்கின்றனர்.
அந்த எண்களைத் தொடர்புகொள்ளும் அலமேலு, அவர்களிடம் முதலில் நட்பாகப் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்.
பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். பின்னர் ‘பணம் தேவைப்படுகிறது’ என்று கூறி, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெறுவார்.
பணத்தைத் திருப்பிக் கேட்டால், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு வீட்டுக்கு வரவழைப்பார். வந்தவர்களுடன் உல்லாசமாக இருப்பார். அப்போது, செட் பண்ணிவைத்த ஆட்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அந்த நபரைக் கட்டிப்போட்டு, ஆடைகளைக் களைந்து ஆபாசமாக வீடியோ எடுப்பார்கள்.
பின்னர் ‘வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம்’ என மிரட்டி, சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் லட்சக்கணக்கில் பணம் பறிப்பார்கள்.
இதுதான் இவர்களின் டெக்னிக். இவர்களது சதிவலையில் பலர் சிக்கிப் பணத்தை இழந்திருக்கின்றனர்.
அலுமேலுவிடம் சிக்கிய பூபதியையும் கட்டிவைத்து அடித்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலி, பணத்தைப் பறித்திருக் கின்றனர். இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் பூபதியைத் தொடர்புகொண்ட அலமேலு, ‘மேலும் ரூ.5 லட்சம் வேண்டும். இல்லையென்றால், சமூக வலைதளத்தில் உன் நிர்வாணப் படத்தை வெளியிட்டு விடுவேன்’ என மிரட்டியிருக்கிறார்.
<அதற்குப் பிறகே பூபதி அளித்த புகாரின் அடிப்படையில், அலமேலு தலைமையிலான இந்தக் கும்பலை விரட்டிப் பிடித்துக் கைது செய்தோம்.
அலமேலுவின் வலையில் விழுந்த மற்றவர்களும் புகாரளிக்க முன்வந்தால்தான், இந்தக் கும்பலின் மொத்த அட்டூழியங்களையும் கண்டுபிடிக்க முடியும்” என்றனர்.
இந்த விவகாரம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயலிடம் பேசினோம். “கைது செய்யப்பட்ட அலமேலு உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய செல்போன்களை ஆய்வு செய்துவருகிறோம்.
அவற்றில் இருந்த வீடியோக்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். வேறு யாரோடெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற அடிப்படையிலும் விசாரித்துவருகிறோம்.
அலமேலு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்கும்பட்சத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அழகும், ஆசையும், ஆபத்தும் அடுத்தடுத்த படிக்கட்டுகள்தான்… ஜாக்கிரதை!

