கிறீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாக அறியப்படுகிறது. இது வட அமெரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
பரப்பளவில் சுமார் 21.66 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட இந்த தீவு, ஆஸ்திரேலியாவை விட பெரியது,
ஆனால் தீவு என வகைப்படுத்தப்படுகிறது. கிறீன்லாந்தின் பெரும்பாலான பகுதி பனிப்பாறையால் மூடப்பட்டுள்ளது,
இது உலகின் இரண்டாவது பெரிய பனிப்பாறையாகும் (அண்டார்டிகா பனிப்பாறைக்கு அடுத்தது). இந்த பனிப்பாறை சுமார் 1.7 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது மற்றும் சராசரியாக 1.5 கிலோமீட்டர் தடிப்பானது.
கிறீன்லாந்தின் புவியியல் அமைப்பு மிகவும் தனித்துவமானது. இது ஆர்க்டிக் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது, மேலும் அட்லாண்டிக் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
தீவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் மட்டுமே மக்கள் வசிக்கக்கூடியவை, ஏனெனில் உட் பகுதி முழுவதும் பனி மூடியுள்ளது.
காலநிலை மிகவும் குளிர்ச்சியானது; சராசரி வெப்பநிலை -10 பாகை செல்சியஸ் வரை இருக்கும். கோடை காலத்தில் கூட வெப்பநிலை 10 பாகை செல்சியஸைத் தாண்டுவது அரிது. இந்த கடுமையான காலநிலை காரணமாக, தீவின் மக்கள் தொகை வெறும் 56,000 பேர் மட்டுமே, அதில் பெரும்பாலானோர் தலைநகரான நூக் (Nuuk) கில் வசிக்கின்றனர்.
கிறீன்லாந்தின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. இன்யூட் (Inuit) மக்கள் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறினர்.
அவர்கள் ஆர்க்டிக் பகுதியின் பூர்வீக குடிகள். 10ஆம் நூற்றாண்டில், நார்ஸ் (Norse) வைக்கிங்கள் ஐரோப்பாவிலிருந்து வந்து இங்கு குடியேற்றங்களை உருவாக்கினர்.
எரிக் த ரெட் (Erik the Red) என்பவர் இந்த தீவுக்கு “கிறீன்லாந்து” என்ற பெயரை வைத்தார், ஏனெனில் அவர் அதை பசுமையான நிலமாக விளம்பரப்படுத்த விரும்பினார்,
ஆனால் உண்மையில் அது பனியால் மூடப்பட்ட தீவு. காலநிலை மாற்றம் மற்றும் இன்யூட் மக்களுடனான மோதல்கள் காரணமாக நார்ஸ் குடியேற்றங்கள் 15ஆம் நூற்றாண்டில் மறைந்துவிட்டன.
18ஆம் நூற்றாண்டில், டென்மார்க் இந்தத் தீவை தனது காலனி நாடாக்கியது. 1953ஆம் ஆண்டு வரை அது டென்மார்க்கின் காலனியாக இருந்தது.
பின்னர், அது டென்மார்க்கின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு, கிறீன்லாந்துக்கு உள்நாட்டு ஆட்சி (Home Rule) வழங்கப்பட்டது,
மேலும் 2009ஆம் ஆண்டு, சுயாட்சி (Self-Government) அந்தஸ்து கிடைத்தது. இப்போது, கிறீன்லாந்து டென்மார்க் ராஜ்ஜியத்தின் கீழ் உள்ள சுயாட்சி பிரதேசமாக உள்ளது.
வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நாணய கொள்கைகள் டென்மார்க்கால் கையாளப்படுகின்றன, ஆனால் உள் விவகாரங்கள் கிறீன்லாந்து அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. கிறீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்- பிரெடெரிக் நீல்சன் போன்ற தலைவர்கள் தீவின் சுயாட்சியை வலியுறுத்துகின்றனர்.
கிறீன்லாந்தின் மக்கள் தொகை சிறியது, ஆனால் கலாசாரம் வளமானது. பெரும்பாலானோர் இன்யூட் வம்சாவளியினர், மற்றும் கிறீன்லாந்து மொழி (காலாலிசுட் – Kalaallisut) அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. டேனிஷ் மொழியும் பயன்படுத்தப்படுகிறது.
அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை மீன்பிடித்தல், வேட்டை மற்றும் கலைகளை அடிப்படையாகக் கொண்டது.
நவீன காலத்தில், கல்வி மற்றும் சுகாதாரம் மேம்பட்டுள்ளன, ஆனால் காலநிலை காரணமாக வாழ்க்கை சவாலானது. கிறீன்லாந்து கலாசாரத்தில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் எனபவற்று மிக முக்கிய இடமுண்டு.
பொருளாதார ரீதியாக, கிறீன்லாந்து மீன்பிடித்தலை சார்ந்துள்ளது. இறால் போன்ற கடல் உணவுகள் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். சுரங்கத் தொழில் வளர்ந்து வருகிறது;
தங்கம், இரும்பு, யுரேனியம் போன்ற கனிய வளங்கள் உள்ளன. சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடைந்து வருகிறது, பனிப்பாறை, ஆரோரா லைட்ஸ் (Northern Lights) போன்றவை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன.
டென்மார்க்கிடமிருந்து வருடாந்த நிதி உதவி (சுமார் 60% அரசு வரவு) கிடைக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக பனி உருகுதல், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகிறது ( உதாரணமாக புதிய கப்பல் வழிகள்) ஆனால் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகிறது.
கிறீன்லாந்து மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ளதால், ரஷ்யா மற்றும் சீனாவின் விரிவாக்கத்தை எதிர்கொள்ள உதவுகிறது.
அமெரிக்கா ஏற்கனவே துலே (Thule) விமான தளத்தை இங்கு கொண்டுள்ளது. சமீப காலங்களில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிறீன்லாந்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த தீவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அவசியமானதாகக் கூறி, டென்மார்க்கிடம் வாங்க முயற்சிக்கிறார் ட்ரம்ப். அதற்கான பல சாத்தியங்களை அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப், அறிவித்துள்ளார்,
பெப்ரவரி 1, 2026 முதல், கிறீன்லாந்து ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அதனை 25% ஆக உயர்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
இது வர்த்தகப் போரை தூண்டியுள்ளது. இது நேட்டோவை பிளவுபடுத்தம் என்று ஐரோப்பிய தலைவர்கள், எச்சரிக்கின்றனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுல் மேக்ரான், “டிரேட் பசூகா” (Trade Bazooka) என்ற கொள்கையை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்க வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டேவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum), ட்ரம்ப் இந்த விவகாரத்தை விவாதிப்பார்.
அவர் ஆர்க்டிக் வட்டத்தின் பாதுகாப்புக்காக கிறீன்லாந்தை தேவைப்படுவதாக கூறுகிறார். ஆனால், அமெரிக்க மக்களில் 75% பேர் இதை எதிர்க்கின்றனர் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அமெரிக்க உச்சநீதிமன்றம், ட்ரம்பின் வரி விதிப்புகளின் சட்டபூர்வத்தன்மையை விசாரிக்கிறது, இது அவருக்கு பின்னடைவாக அமையலாம்.
இந்தப் பிரச்சினை உலக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யா, உக்ரைன் போன்ற விவகாரங்களுக்கு ஒப்பானதாக இது பேசப்படுகிறது.
கிறீன்லாந்து மக்கள் தங்கள் சுயாட்சியை பாதுகாக்க விரும்புகின்றனர். காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பனி உருகுதல், கிறீன்லாந்தை உலக கவனத்தில் கொண்டுவந்துள்ளது. இது கடல் மட்ட உயர்வுக்கு பங்களிக்கிறது. உலகம் கிறீன்லாந்தின் எதிர்காலத்தை கவனிக்க வேண்டும்.
இந்த சமீபத்திய நிகழ்வுகள், கிறீன்லாந்தை ஒரு அரசியல் போர்க்களமாக மாற்றியுள்ளன. ட்ரம்பின் “அமெரிக்கா முதல்” கொள்கை, உலக நாடுகளை சவாலுக்கு உட் படுத்துகிறது.
ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளன. இது அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும். இந்த வர்த்தக போர், உலக பொருளாதாரத்தை மந்தமாக்கும் ஆபத்தும் உள்ளது.
கிறீன்லாந்து ஒரு இயற்கை அதிசயம் மட்டுமல்ல, அரசியல் முக்கியத்துவம் கொண்ட இடமும் கூட. அதன் எதிர்காலம், உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும்.
அரவிந்தன்

