அநுர குமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள விகாரைகளுக்கு வழிபாடுகளுக்கு வருபவர்கள் குறித்து தெரிவித்த கருத்து நாட்டில் கடும் விமர்சனங்களுக்கு பாத்திரமானது.

பௌத்த மதத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுவதாகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மாத்திரமன்றி, பௌத்த அமைப்புகளும் தற்போது எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பௌத்த தர்ம விடயம் ஒன்று தொடர்பில் செயற்கை நுண்ணறிவு ஊடான கருத்து பரிமாற்றம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

அதாவது ‘தான் பௌத்த தம்ம பதத்தின் முதல் வரி குறித்து செயற்கை நுண்ணறிவிடம் (ChatGPT) கேட்டதாகவும் அதன்படி, உன்னதமானது மானுட அறிவா அல்லது செயற்கை அறிவா என வினவினேன். சிறிது நேரம் ஆய்வு செய்த பிறகு, உன்னதமானது மானுட அறிவு என்பதை செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொண்டது.

செயற்கை நுண்ணறிவு என்பது வரம்புகளுக்கு உட்பட்டது. இவை அனைத்திற்கும் முன்பே உன்னதமானது மானுட அறிவு என்பதை புத்தபெருமான் கூறியிருக்கிறார்’ என்று ரணில் தெரிவித்தார்.

காலியில் பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் பியசேன கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இதன் போது அங்கிருந்த பௌத்த தேரர்களை நோக்கி, ‘இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது’ என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இந்தக் கூற்றில் நேரடி அர்த்தத்தைத் தாண்டிய ஒரு ஆழமான பொருள் பொதிந்திருந்ததை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர்.

‘நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கக் கடமைப்பட்டுள்ளனர். பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் கூட, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விடயம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கேற்ப செயற்பட்டனர்.

பௌத்த மதத்திற்கு கிடைக்கவேண்டிய முன்னுரிமை இழக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து கட்சித் தலைவர்கள் மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்’ என ரணில் மேலும் தெளிவுப்படுத்தினார்.

‘இந்த பௌத்த மறுமலர்ச்சியால் பௌத்த மதம் முன்னோக்கி வந்தது. 1972ஆம் ஆண்டில் எமது அரசியலமைப்பை உருவாக்கும் போது கூட, ஜே.ஆர். ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் பௌத்த மதத்திற்கு சிறப்பு இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

களுத்துறை போதி மரத்தை வெட்டச் சென்ற சந்தர்ப்பத்தில் விக்டோரியா மகாராணி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். எனவேதான், இன்று இப்பகுதியின் சில விகாரைகளில் உள்ள 19 ஆம் நூற்றாண்டுக்குரிய சுவர் ஓவியங்களில் விக்டோரியா மகாராணியின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

அதற்கு உதாரணமாக கத்தலுவ விகாரையைக் கூறலாம்’ என்று ரணில் வரலாற்றின் ஒரு பகுதியை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தேரர்களுக்கு விளக்கினார்.

‘இலங்கையில் விகாரை வழிபாட்டுத்தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது பௌத்த மதத்திற்கு வழங்கவேண்டிய உரிய இடத்தை வழங்குவதற்காகவே ஆகும்.

அதன் மூலம் விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், ஏனைய சிங்கள வழிபாட்டுத்தலங்களுக்கு சொந்தமானவை.

அவற்றுக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக எமது பக்தர்கள் வழங்கும் தங்க ஆபரணங்கள் அனைத்தும் அந்த விகாரைக்கோ அல்லது தேவாலயத்திற்கோ சொந்தமானவை. அவற்றைத் தொட முற்பட்டால் நாட்டிற்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது’ என கூறி முடித்தார்.

பௌத்தத்திற்கு எதிரானதாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தெற்கில் பௌத்த விகாரைகளில் கூறப்பட்ட இந்த விடயங்கள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

சட்ட மாஅதிபர் விவகாரம்

அரசாங்கத்தைத் தொற்றியிருக்கும் புதிய அச்சம் சட்டமா அதிபர் குறித்ததாகும். சட்டமா அதிபரை பதவி விலகுமாறு கூறி இப்போது பெலவத்தையிலிருந்து போராட்டங்கள் தயாராகி வருவதாக எதிர்க்கட்சிகளிடையே முனுமுனுக்கப்படுகிறது.

சட்டமா அதிபரை வெளியேறுமாறு கோரி அரசாங்கம் ஏற்பாடு செய்த போராட்டத்தில் வெறும் பன்னிரண்டு பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் அங்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் ஊடகவியலாளர்கள் என்றும் கூறுகின்றனர்.

சட்ட மாஅதிபரை விரட்டும் போராட்டம் என்பது அரசாங்கத்தின் மிகப்புதிய தோல்வியாகும். ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தையிலிருந்து கொண்டு சட்டமா அதிபரை நீக்க முயற்சிப்பதற்கு முற்போக்கான தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

தேவையானதற்கும் தேவையற்றதற்கும் ஜே.வி.பி தலைமையகம் தொடர்புப்படுவது வெறுக்கதக்க செயல் என கூறப்படுகிறது.

ஒரு ஜே.வி.பி பொலிஸ் மா அதிபர், ஒரு ஜே.வி.பி சட்டமா அதிபர், ஒரு ஜே.வி.பி பிரதம நீதியரசர் ஆகியோரை நியமித்துக் கொள்வதே அவர்களின் ஒரே கனவாக உள்ளது.

புலி, கரடி போன்ற காட்டு விலங்குகள் மனிதர்கள் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ பாய்வது தமக்குள்ள பயத்தினாலேயே என்று சொல்லப்படுவதுண்டு. அதேபோன்று ஜே.வி.பியினர் இப்போது சாதாரண மக்கள் மீது பாயத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

சுயாதீனமான சட்டமா அதிபர்களை நீக்க முயற்சிப்பது அந்த நீண்டகாலச் செயல்பாட்டின் ஒரு சிறு பகுதியாகும்.

அரசாங்கத்தின் இந்த கோழைத்தனமான செயல்பாடு எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் சட்டமா அதிபரையும் நீதித்துறையையும் அச்சுறுத்த முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்கள் அந்த மிரட்டல்களுக்கு அச்சப்படமாட்டார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

ஹரிணி – டொனால்ட் டிரம்பை சந்தித்தாரா?

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் சந்திப்பு ஒன்று புதன்கிழமை கொழும்பு – 7இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், ரணிலை நோக்கி, ‘சார், சுவிட்சர்லாந்தில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பை பிரதமர் ஹரிணி சந்தித்துள்ளார் அல்லவா?’ என்று வினவினார்.

அதற்கு ரணில் மிகவும் சாதாரணமாக, ‘ஆ… அப்படியா?’ என்று கேட்டார். அப்போது சாமர, ‘ஆம், மாற்றுப்பாலினத்தவர்கள் விவகாரம் குறித்து ஏதோ கேட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது என்றார்.

எமக்கு அதுபற்றித் தெரியாது’ என்று ரணில் மீண்டும் பதிலளித்தார். சாமர ஏதோ ஒரு தந்திரமான உள்நோக்கத்துடன் இதைக் கூறுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ரணில், அதற்குப் பதில் ஏதும் கூறாமல் மௌனம் காத்தார்.

நந்தன குணதிலகவின் மறைவு

கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு சோகமான வாரமாக அமைந்தது. பாணந்துறை தொகுதி அமைப்பாளர் நந்தன குணதிலகவின் திடீர் மறைவே இதற்குத் காரணமாகும்.

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிலைமை மோசமடைந்ததை அடுத்து ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நந்தனவின் மறைவைத் தொடர்ந்து, ‘குளம் கலங்க மீன் பிடிப்பது’ போல ஒரு கும்பல் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியது. ரணில் விக்கிரமசிங்க, நந்தனவின் வைத்தியசாலைக் கட்டணத்தைச் செலுத்துமாறு வஜிர அபேவர்தனவிடம் கூறியதாகவும், ஆனால் வஜிர அந்தப் பணத்தைச் செலுத்தவில்லை என்றும் அவதூறுகள் பரப்பப்பட்டன.

இந்த வதந்திகள் தலைவர் ரணில் மற்றும் கட்சித் தவிசாளர் வஜிர ஆகியோரை இலக்கு வைத்துப் பரப்பப்பட்டன.

உண்மை நிலை தெரியாத சில ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கூட, இதனை நம்பி வஜிர மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதன் உண்மைத்தன்மையை அறிய வஜிரவின் தொலைபேசிக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. இருப்பினும், வஜிரவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த வதந்திகளைப் பொருட்படுத்தவில்லை.

வஜிரவின் விளக்கம்

நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். அரசியல் ரீதியாக சேறு பூசுவதாக இருந்தால் என் மீது பூசுங்கள். ஆனால் நந்தன இப்போது இறந்துவிட்டார். அந்த மனிதர் மீது அவதூறு பரப்பாதீர்கள்,

அது மிகப்பெரிய பாவச் செயலாகும் என்று குறிப்பிட்டார். இருப்பினும், நெருக்கமானவர்களின் வற்புறுத்தலால் வஜிர இது குறித்து விரிவாக விளக்கமளித்தார். ‘சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகளை நான் பார்த்தேன். இந்தச் சம்பவம் நடந்தபோது நானும் தலைவரும் அனுராதபுரத்தில் இருந்தோம். கட்டணத்தைச் செலுத்தியது மட்டுமல்ல,

அவர் நோய்வாய்ப்பட்டது முதல் தலைவர் ரணில் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்தார். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு எனக்கும் அறிவுறுத்தினார்.

நான் அவற்றையெல்லாம் செய்தேன். வைத்தியசாலைக் கட்டணம் வந்தபோது, நாங்கள் அனுராதபுரத்தில் இருப்பதை நந்தனவின் சகோதரியிடம் விளக்கினோம். யாரிடம் வேண்டுமானாலும் இதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நாங்கள் அனுராதபுரத்திலிருந்து திரும்பிய உடனேயே அனைத்துக் கட்டணங்களையும் செலுத்திவிட்டோம். அதற்கான பற்றுச்சீட்டுகள் என்னிடம் உள்ளன. திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்புகிறார்கள், அதில் எனக்குப் பிரச்சினையில்லை’ என்று வஜிர தெரிவித்தார்.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply