ஈழத்தில் தமிழ் பௌத்தர்கள்’ என்னும் தலைப்பு, ஈழத் தமிழர்களில் பலருக்கு வியப்பாகவும், இன்னும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே வரலாற்று உண்மை.
இந்த ஆய்வின் நோக்கம்,
”சிலருக்குத் தெரிந்தும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்தாலும், பெரும்பாலோரால் உள்வாங்கத் தயங்கப்படும் ‘எமது மூதாதையர் பௌத்த மதத்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்’
என்ற உண்மையை வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் விளக்குவதாகும்.
ஆய்வின் நோக்கம்
‘எமது மூதாதையர் பௌத்த மதத்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்’ என்ற உண்மையைச் சான்றுகளுடன் விளக்குவது.
ஆய்வுச் சிக்கல்
இன்றைய சூழலில், தமிழரும் சிங்களவரும் எதிரும் புதிருமாக விளங்கும் இரு இனக் குழுமங்களாகக் காணப்படுகின்றனர். ஆனால், ஒரு காலத்தில் இந்த இரு இனங்களும் ‘பௌத்தம்’ என்னும் ஒரே மதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்களாக வாழ்ந்திருந்தனர் என்பது இன்று மறக்கப்பட்ட நிலையில் உள்ளது.
வரலாற்று ஆவணங்களும் தொல்லியல் அகழாய்வுச் செய்திகளும் இந்த உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளன. இருப்பினும், சிங்கள இன அடையாளத்தை ‘பௌத்தம்’ என்ற பெயருடன் இணைத்து, தமிழ் இனத்துக்கு எதிரான வன்மம் வளர்க்கப்பட்டுள்ள சூழலில், இக்கருத்தை உள்வாங்குவதும், உள்வாங்க வைப்பதும் ஒரு சிக்கலாக உள்ளது.
கருதுகோள்
பண்டைக் காலத்தில் தமிழர்கள் இலங்கையில் பௌத்த மதத்தவர்களாக வாழ்ந்திருந்தனர் என்பது கருதுகோள்.
சான்றுகள்
• வரலாற்று ஆய்வு நூல்கள்- பேராசிரியர் சிவ. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் வரலாறு பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்களின் நூல்கள்
இலக்கியங்கள்
• மணிமேகலை
• பெரியபுராணம் முதலியன
• தொல்லியல் ஆய்வு அறிக்கைகள்
ஆய்வியல் நெறி
• சமூகவியல்
• வரலாற்றியல்
• தொல்லியல்
வரலாற்றுப் பின்னணி
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை மொழிகள். மனிதன் தன் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தும் கருவியே மொழி ஆகும்.
சைவம், பௌத்தம், சமணம், ஆசீவகம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியவை மதங்கள் அல்லது சமயங்கள்.
உலக வரலாற்றில், கிமு 6-ஆம் நூற்றாண்டு தத்துவ எழுச்சிக் காலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் வடஇந்தியாவில் வேதங்களை மறுத்தும், வேள்விகளை எதிர்த்தும், வைதீகக் கொள்கைகளுக்கு மாற்றாக சமணம், ஆசீவகம், பௌத்தம் போன்ற தத்துவ இயக்கங்கள் தோன்றின.
தத்துவ இயக்கங்களாகத் தொடங்கிய இவை, காலப்போக்கில் மதங்களாக உருமாற்றம் பெற்றன. மகாவீரர் ஜைன மதத்தையும், மற்கலி கோசாலர் ஆசீவக மதத்தையும், கௌதம புத்தர் பௌத்த மதத்தையும் நிறுவினர்.
இந்த ஆய்வில், பௌத்த மதம் தொடர்பான தகவல்களே முதன்மையாக எடுத்துரைக்கப்படுகின்றன.
கௌதம புத்தர், வேதங்களையும் வேள்விகளையும் மறுத்து, வைதீகக் கொள்கைகளுக்கு எதிராக தத்துவ அடிப்படையில் போராட்டம் நடத்தினார். துறவறம் மேற்கொண்டு ஞானம் பெற்ற பின் ‘புத்தர்’ என அழைக்கப்பட்டார்.
கிமு 6-ஆம் நூற்றாண்டில் பௌத்தம் ஒரு தத்துவ இயக்கமாகத் தோன்றியது; பின்னர் அது ஒரு மதமாக உருவெடுத்தது.
அசோகச் சக்கரவர்த்தி
அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் (கிமு 3-ஆம் நூற்றாண்டில்) பௌத்த மதம் வடக்கில் இமய மலைக்கு அப்பாலும், தெற்கில் தமிழகம் வழியாக ஈழம் (இன்றைய இலங்கை) மற்றும் பல தெற்காசிய நாடுகளிலும் பரவியது. ஒருகாலத்தில் தெற்காசியா முழுவதும் பின்பற்றப்பட்ட முக்கிய மதமாக பௌத்தம் இருந்தது.
ஆனால் பின்னர், இந்தியாவிலேயே பௌத்த மதம் இருந்ததற்கான தடயங்கள் தெரியாமல் மறைந்த நிலை ஏற்பட்டதை நாம் பார்க்கிறோம்.
மௌரிய பேரரசர் அசோகன், தனது காலத்தில் இந்திய துணைக்கண்டத்தின் சுமார் மூன்றில் இரண்டு பகுதிகளை ஆட்சி செய்தான். மேற்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் முதல், கிழக்கில் வங்காளதேசம் வரை, தெற்கில் கலிங்கம் வரை அவனது ஆட்சி பரவியிருந்தது.
வரலாற்றில் புகழ்பெற்ற கலிங்கப் போரில் ஏற்பட்ட பெரும் அழிவே அசோகனை பௌத்த மதத்தை ஏற்கச் செய்தது என்று நாம் சிறுவயதிலிருந்தே படித்து வருகிறோம். அசோகன் ஆட்சி செய்த காலம் கிமு 268 முதல் 232 வரை ஆகும்.
அசோகனைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும், அவன் நாடு முழுவதும் அமைத்த கல் கல்வெட்டுகள் (தூண் கல்வெட்டுகள், பாறை கல்வெட்டுகள், குகை கல்வெட்டுகள்) மற்றும் பின்னர் வந்த புராணக் கதைகள் மூலம் அறியப்படுகின்றன.
அசோகனின் கல்வெட்டுகள், அவன் ஆட்சியின் 8-ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள் வரை பொறிக்கப்பட்டவை. இவை தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவின் பல பகுதிகளில் கிடைக்கின்றன.
இந்த கல்வெட்டுகளில் அசோகன் தனது பெயரை “தேவநம்பியஸ” என்ற பட்டப்பெயருடன் குறிப்பிடுகிறான். இந்த கல்வெட்டுகள் அராமைக், கிரேக்கம், கரோஷ்டி, பிராமி போன்ற பல எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன.
பாறை கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ள செய்திகள் பெரும்பாலும் நல்லொழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில்:
-
உயிர்களை கொல்லாமல் இருக்க வேண்டும்
-
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவ வசதி செய்ய வேண்டும்
-
மருந்துச் செடிகள், பழ மரங்கள் நட வேண்டும்
-
மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் தண்ணீர் வசதி செய்ய வேண்டும்
-
நிழல் தரும் மரங்கள் நட வேண்டும்
-
நல்ல ஒழுக்கம், சமய பொறுமை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்
என்ற கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
அசோகனின் இந்த கல்வெட்டுகள் அரசாணைகள் போல இருந்ததால், அவை “அசோகன் ஆணைகள்” என்று அழைக்கப்படுகின்றன.
இவை அமைந்துள்ள இடத்தின் அடிப்படையில்:
-
பாறை கல்வெட்டுகள்
-
தூண் கல்வெட்டுகள்
-
குகை கல்வெட்டுகள்
என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அசோகரின் கிர்னார் (Girnar) இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு தமிழ்நாட்டுடனும் ஈழத்துடனும் தொடர்புபடுத்தி அதிகமாகப் பேசப்படும், மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுக் கல் வெட்டாகும்.
இக் கல் வெட்டு குஜராத் மாநிலம் கத்தியவாரில் கண்டெடுக்கப்பட்டது. இது அசோக மன்னனால் பொ.ஆ.மு. 3-ஆம் நூற்றாண்டில் அசோகன் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டதாகும்.
இக் கல் வெட்டில் இடம்பெறும் செய்திகள், பொ.ஆ.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் குறித்த அரிய வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்பதுடன், ஈழம் பற்றிய குறிப்புகளையும் வழங்குகின்றன.
இக் கல் வெட்டில் தமிழ்நாடு மற்றும் ஈழம் தொடர்பான தகவல்கள் இடம்பெறும் பகுதி வருமாறு:
-
“ஸர்வத் விஜிதம் ஹி தேவாநாம்பிரியஸ பிரியதர்சினோ ராஜோ
• ஏவமபி ப் ர சந் தேஸீ யதா சோடா, பாடா, ஸதியபுதோ,
கேதளபுதோ, தம்பபர்ணி,
• பர்ணி அந்தியோகோ யோன ராஜா, யே வாபி அந்தியோகஸ்ஸாமிநோ …”
இக் கல் வெட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடிகள்,
“தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமன்றி, அண்டை நாடுகளான சோழர் (சோடா), பாண்டியர் (பாண்டா), சத்தியபுத்திரர் (ஸதியபுதோ), சேரர் (கேதளபுதோ), இலங்கை (தம்பபர்ணி)”
எனத் தமிழ்நாட்டில் சுதந்திர அரசுகளாக இருந்த வம்சங்களுடனும், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் தொடர்புடைய குறிப்புகளை வழங்குகின்றன.
இக் கல் வெட்டு, அசோகர் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமன்றி, அண்டை நாடுகளான சேரர், சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர், கேரளபுத்திரர், தம்பபர்ணி (ஈழம்), மேலும் யோன அரசரான அந்தியோகஸ் (கிரேக்கம்) மற்றும் அவருடைய அண்டை நாடுகளிலும் இருவகைச் சிகிச்சைகள் (மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்) வழங்கப்பட வேண்டும் என்பதைக் வலியுறுத்துவதை உறுதிப்படுத்துகிறது.
இக் கல் வெட்டின் மூலம் அறியப்படுவது:
-
அசோகன் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தாண்டியும், பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான்.
-
அந்த முயற்சியில் தமிழ்நாடும் ஈழமும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இக் கல் வெட்டின் மூலம் நிறுவப்படுவது:
-
பொ.ஆ.மு. 3-ஆம் நூற்றாண்டில் “தம்பபர்ணி” என அழைக்கப்பட்ட ஈழத்திலும் பௌத்த மதப் பரப்பும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதாகும்.
இதனையே வரலாறும் உறுதிப்படுத்துகிறது. மகிந்தனும் சங்கமித்தையும் வெள்ளரசுக் கிளையுடன் இலங்கை வந்து பௌத்த மதத்தை நிறுவினர் என்று வரலாறு கூறுகிறது. எனவே, பௌத்தம் ஈழத்தில் பொ.ஆ.மு. 3-ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டது என்பது உறுதியாகிறது.

