2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 251 பேரில் எஞ்சியிருந்த இறுதி பணயக் கைதியான ரான் கிவிலி (Ran Gvili) என்பவரது உடலை இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் உள்ள ஒரு மயானத்திலிருந்து மீட்டுள்ளன.
24 வயதான ரான் கிவிலி விசேட அதிரடிப்படை வீரர் (Yamam) ஆவார். ஒக்டோபர் மாதம் 07 தாக்குதலின் போது போரிட்டு உயிரிழந்த இவரது உடலை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் இவரது உடல் மீட்கப்பட்டது. “நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்; இறுதி பணயக் கைதி வரை அனைவரையும் மீட்டுவிட்டோம்,” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள அமைதித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாம் கட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
காசாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச பாதுகாப்புப் படை (International Stabilization Force) நிலைநிறுத்தப்படும். இந்தப் படைக்கு அமெரிக்க ஜெனரல் ஜஸ்பர் ஜெஃபர்ஸ் (Jasper Jeffers) தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறும்.
இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான பிரதான எல்லையான ரஃபா (Rafah) எல்லைக் கடவை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்களின் நடமாட்டத்திற்குப் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


