இலங்கை விமானப்படைக்கு, அமெரிக்கா 10 புதிய ஹெலிகொப்டர்களை வழங்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை நினைவிருக்கலாம்.
அந்த ஹெலிகொப்டர்கள் இப்போது இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன, ஆனால், அவை புதியவை அல்ல.
அமெரிக்க கடற்படையினால் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்டவைதான் அவை. இதுதான் உண்மை.
இலங்கை விமானப்படைக்கு பயிற்சி மற்றும் பேரிடர் மீட்பு, உதவிப் பணிகளை, மேற்கொள்வதற்கு உதவியாக அமெரிக்கா 10 TH-57 ஹெலிகொப்டர்களை கொடையாக வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுபற்றி பேசப்பட்டு வந்தது.
உண்மையில் இந்த ஹெலிகொப்டர்கள் கடந்த ஆண்டில் விமானப்படையின் கைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். அவ்வாறுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தாமதமாக கடந்த ஜனவரி 7ஆம் திகதியே இவை இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
அவை பாகங்களாக பிரிக்கப்பட்டு, பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவை இந்த மாத தொடக்கத்தில் கொழும்பை வந்தடையும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹெலிகொப்டர் களின் பெறுமதி எவ்வளவு என்று இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதனை அமெரிக்கா கொடையாகவே வழங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நிறுவனம் பெல் ஜெட் ரேஞ்சர்- 206 என்ற ஹெலிகொப்டர்களை தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கியிருந்தது.
அது அமெரிக்க இராணுவப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கவில்லை, ஆனால், வர்த்தக ரீதியாக அது வெற்றி பெற்றது.
இலங்கை விமானப்படை இந்த வகை ஹெலிகொப்டரை 1969 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தியது.
பெல் ஜெட் ரேஞ்சர் 206 ஹெலிகொப்டரின் இராணுவ பயன்பாட்டு வடிவமாக உருவாக்கப்பட்டதே TH-57 ரக சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர் ஆகும்.
இது அமெரிக்க கடற்படை மரைன் படையினர் மற்றும் கடலோர காவல்படையினரால், விமானிகளுக்கான பயிற்சி, போக்குவரத்து, பேரிடர் பதிலளிப்பு, கடல் சார் மீட்பு, தேடுதல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு – 1968 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஹெலிகொப்டர்களை அமெரிக்கா தனது படைகளில் இருந்து முற்றாக வெளியேற்றி இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு இதனை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டுடன் முழுமையாக அமெரிக்கப் படைகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு நீக்கப்பட்ட 10 ஹெலிகொப்டர்களை தான் இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியிருக்கிறது.
இவை முன்னர் அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் படைப்பிரிவினரால் பயன்படுத்தப்பட்டவை.
ஆயினும் இந்த ஹெலிகொப்டர்கள் எவ்வளவு காலம் பாவிக்கப்பட்டவை, எப்போது தயாரிக்கப்பட்டவை. இவற்றின் பெறுமதி என்ன, இவற்றின் ஆயுள்காலம் எவ்வளவு என்பன போன்ற விரிவான எந்த தகவல்களும் இலங்கை விமானப்படையினராலோ அல்லது அமெரிக்காவினாலோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா தனது படைகளின் தேவைக்கு பயன்படுத்தப்படும் போர்க் கருவிகள் மற்றும் உபகரணங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பின் சேவையில் இருந்து அகற்றுகிறது.
நவீன கருவிகளை படைகளில் சேர்த்துக் கொள்ளும் போது, பழுதடைந்த மற்றும் காலம் கடந்தவற்றை படைகளில் இருந்து நீக்குவது அமெரிக்காவின் வழக்கம்.
அவ்வாறான நிலையில் மேலதிகமாக உள்ள – படையினரின் தேவையில் இருந்து கழிக்கப்பட்ட போர்த்தளவாடங்களை, அமெரிக்கா தமது நட்பு நாடுகளுக்கு கொடையாகவோ அல்லது குறைந்த விலைக்கு விற்கின்ற வழக்கத்தையோ கொண்டிருக்கிறது.
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (Defence Security Cooperation Agency) என்ற ஒரு பிரிவு உள்ளது.
அதுதான் U.S. Excess Defence Articles (EDA) program என்ற, மேலதிக போர்க்தளபாடங்களை பிற நாடுகளுக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.
அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் கழிக்கப்பட்ட போர்த்தளபாடங்களை கொடையாக பெற்றுக் கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது.
2013 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய தரவுகள் அதிகாரபூர்வமாக பதிவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் பெரும் பகுதி இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டவை.
அமெரிக்க கடலோர காவல்படையிலிருந்து நீக்கப்பட்ட ரோந்துக் கப்பல்கள் இலங்கைக்கு, வழங்கப்பட்டது தொடர்பான தகவல்களும் அந்த தரவுகளில் இருக்கின்றன.
இந்த மாதம் ஹெலிகொப்டர்களை வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அமெரிக்க கடலோர காவல்படையின் பயன்பாட்டில் இருந்த, USCGC Decisive என்ற ரோந்துக் கப்பலை அமெரிக்கா கொடையாக வழங்கியிருந்தது.
இது இலங்கை கடற்படைக்கு, அமெரிக்கா கொடையாக வழங்கிய நான்காவது கப்பல் ஆகும்.
இந்தக் கப்பல் அங்கு புதுப்பிக்கப்பட்டு, இலங்கை கடற்படை மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், சில மாதங்களில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தனது பழைய, காலாவதியான பாதுகாப்பு தளவாடங்களை தலையில் கட்டி விடுகின்ற நட்பு நாடுகளில் இலங்கையும் ஒன்றாக மாறியிருக்கிறது.
இதற்காக இலங்கை பணத்தை கொடுக்க வேண்டியதில்லை , கொடையாகவே அமெரிக்கா கொடுக்கிறது.
ஆனால், இந்த ஹெலிகொப்டர்களையோ கப்பல்களையோ அமெரிக்காவில் இருந்து கொண்டு வருவதற்கான செலவுகள், பயிற்சிக்கான செலவுகள், மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தையும் இலங்கையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது இலங்கைக்கு மட்டுமான விதிமுறை அல்ல, மேலதிக போர்த்தளபாடங்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்கின்ற நாடுகள் அனைத்துக்கும் பொருந்துகின்ற விதிமுறை இது.
அமெரிக்கா இந்த போர்த்தளபாடங்களை இலங்கை மீதுள்ள பற்றினால் கொடுக்கவில்லை.
தன்னிடம் மிகையாக இருப்பதை கொடுத்து இலங்கையை தட்டிக் கொடுக்கிறது.
இந்த ஹெலிகொப்டர்களை பெற்றுக் கொள்வதன் ஊடாக, இலங்கை விமானப்படை தன்னை பலப்படுத்திக் கொள்ளலாம் என கருதுகிறது.
ஏனென்றால் இலங்கை விமானப்படையிடம் தற்போழுது போதிய ஹெலிகொப்டர்களோ விமானங்களோ இல்லை என்ற குறைபாடு கூறப்பட்டு வருகிறது.
அண்மைய பேரிடரின் போது இலங்கை விமானப்படைக்கு போதுமான ஹெலிகொப்டர்கள் இருக்கவில்லை.
இருந்த ஹெலிகொப்டர்கள் முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காகவும் போக்குவரத்து தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
பேரிடரினால் நெருக்கடி ஏற்பட்ட போது உடனடியாக முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த பேரிடர் மீட்பு பணியின் போது, லுணிவிலவில் ஒரு பெல்- 212 ஹெலிகொப்டரை இலங்கை விமானப்படை இழக்கவும் நேரிட்டது.
விமானப்படையிடம் தற்போதுள்ள பெரும்பாலான ஹெலிகொப்டர்கள் மிகவும் பழமையானவை.
நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்து வருபவை. அவை சில சந்தர்ப்பங்களில் செயலிழந்து போகின்றன, விபத்துக்குள்ளாகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழுவதை காண முடியும்.
இப்பொழுது அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ள ஹெலிகொப்டர்கள் கூட புத்தம் புதியவை அல்ல.
மிகவும் பழமையானவை, அவற்றுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு, புத்தம் புதிய ஹெலிகொப்டர் போல விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும்.
இவை விமானிகளைப் பயிற்சி அளிப்பதற்கு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும் உகந்தவையே.
இவற்றை இராணுவ சேவைகளுக்காக பெரியளவில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பெல் 212 , பெல்- 414 போன்ற ஹெலிகொப்டர்களை போல இவற்றில், இயந்திர துப்பாக்கிகளை பொருத்தவும் முடியாது.
ஒரு விமானி மற்றும் 3 பயிற்சியாளர்களை ஏற்றி செல்லக்கூடிய திறனை மாத்திரம் கொண்டது இது.
அமெரிக்க இராணுவம் மற்றும் கடற்படை என்பன இவற்றிற்கு பதிலாக ஒரு விமானி ஒரு துணை விமானி மற்றும் மூவர் என, ஐந்து பேரை ஏற்றிச் செல்லக்கூடிய TH-73A என்ற புதிய வகை ஹெலிகொப்டரை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
இவை அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இலங்கை விமானப்படை அடுத்த 30 ஆண்டுகளுக்கு அமெரிக்க படையினரால் கழித்து விடப்பட்டTH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களையே பயன்படுத்தக் கூடும்.
இந்த ஹெலிகொப்டர்கள்இலங்கைக்கு எந்த வகையில் பொருத்தமானவை- எந்தளவுக்கு பயன் தரக்கூடியவை என்று இப்போது கணிக்க முடியாது.
ஆனால், இதனை அமெரிக்கா ஒரு மூலோபாய திட்டமாக பயன்படுத்துகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய உச்சமாக இதனை வர்ணித்திருக்கிறது அமெரிக்கா.
இந்த பரிமாற்றத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை எடுத்துரைத்த, அமெரிக்காவின் போர் திணைக்கள துணை உதவி இயக்குநர் ஆண்ட்ரூ பையர்ஸ், இந்த நன்கொடை அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில் மற்றொரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது என்று கூறி இருக்கிறார்
முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை, ரோந்துக் கப்பலை ஒப்படைத்தல் மற்றும் ‘தித்வா’ சூறாவளிக்குப் பிறகு வழங்கப்பட்ட பேரிடர் நிவாரண உதவி உள்ளிட்ட முந்தைய ஆதரவைத் தொடர்ந்து இந்த பரிமாற்றம் இடம்பெறுகிறது.
இந்த ஹெலிகொப்டர்கள் குறிப்பாக பிராந்திய பாதுகாப்பு, பேரிடர் தயார்நிலை மற்றும் மனிதாபிமான உதவி ஆகிய துறைகளில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு புதிய திறனைக் குறிக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அமெரிக்கா இதனை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றமாக கருதுகிறது.
அப்படியானால் இந்த மூலோபாய முக்கியத்துவம் பரிமாற்றத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
இலங்கையை பலப்படுத்துவதா அல்லது இலங்கையிடம் இருந்து அமெரிக்கா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதா?
இந்த கேள்விக்கான பதிலைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிலை இருக்கும்.
-சுபத்திரா-

