ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறந்த கிளப்… அங்கு நேரத்தை நன்றாகக் கழிக்க, பேசி மகிழ மட்டுமே முடியும். ஐ.நா-வின் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள்’’ என்று செல்லும் இடமெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
தற்போது, ஐ.நா-வுக்கு இணையாக `அமைதி வாரியம்’ (போர்டு ஆஃப் பீஸ்) என்றொரு புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைமைப் பொறுப்பில் தானே அமர்ந்துகொண்டிருக்கிறார்!
இந்த அமைதி வாரியம், உண்மையிலேயே உலக அமைதிக்காகத் தொடங்கப்பட்டதா… அல்லது உள்நோக்கம் கொண்டதா..?
விதிகளும்… `வீட்டோ’ பவரும்..!
ஆரம்பத்தில் காஸாவில் அமைதியை உண்டாக்கி, போர் பாதித்த பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான ஒரு தற்காலிக அமைப்பாகத்தான் அமைதி வாரியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், மெல்ல மெல்ல இதை ஐ.நா-வுக்குப் போட்டியான அமைப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். `
உலகளாவிய மோதல்களைத் தீர்க்கும் சக்தி இந்த வாரியத்துக்கு உண்டு. உலக நாடுகளுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உண்டாக்கும் வல்லமை படைத்தது இந்த அமைப்பு’ என்கிறார் ட்ரம்ப்
.அமைதி வாரியத்துக்கென சில விதிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்படும் நாடுகள், கட்டணமின்றி மூன்று ஆண்டுகள் வரை உறுப்பினராக இருக்கலாம்.
அமைதி வாரியத்தின் நிரந்தர உறுப்பினராக வேண்டுமென்றால், ஒவ்வொரு நாடும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய ரூபாயில் சுமார் ரூ.9,000 கோடி) கட்டணமாகச் செலுத்த வேண்டுமாம்.
`அமைதி வாரியத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில், உறுப்பு நாடுகளுக்கு வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், இறுதி முடிவெடுக்கும் வீட்டோ அதிகாரம் படைத்தவராக வாரியத்தின் தலைவரே இருப்பார்’ என்கின்றன வாரிய விதிமுறைகள்.
ஐ.நா-வில், நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால், சில சமயங்களில் அமெரிக்கா தான் நினைத்ததைச் செய்ய முடியாமல் போயிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்த வாரியத்தில் தன் வசம் மட்டுமே வீட்டோ அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.
அமைதி வாரியத்தின் தலைவருக்கான பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் என்பதெல்லாம் விதிகளில் குறிப்பிடப்படவில்லை.
அதேநேரம், `தற்போதைய தலைவரான ட்ரம்ப் கை காட்டுபவரே வாரியத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார்’ என்கின்றன விதிகள்.
இந்த வாரியத்தின் செயலாளர்களாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்க்கோ ரூபியோ, ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
எதிர்க்கும் இடதுசாரிகள்… தயங்கும் இந்தியா?
அமைதி வாரியத்தில் இணைய இந்தியா, சீனா, ரஷ்யா எனப் பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, சீனா உள்ளிட்ட நாடுகள், `இது ஐ.நா-வின் மாண்பைச் சீர்குலைக்கும் செயல்’ எனச் சொல்லி அமைதி வாரியத்தில் இணைய மறுப்புத் தெரிவித்துவிட்டன.
கத்தார், துருக்கி, பாகிஸ்தான், இஸ்ரேல், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரியத்தில் இணைந்திருக்கின்றன.
“59 நாடுகள் அமைதி வாரியத்தில் இணையச் சம்மதம் தெரிவித்துவிட்டன’’ என்கிறார் ட்ரம்ப். ஆனால், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில், அமைதி வாரியத்தில் இணைய 19 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
இந்தியா உட்பட சில நாடுகள் இன்னும் இது பற்றிய முடிவுகளைப் பொதுவெளியில் தெரிவிக்காமல் இருக்கின்றன.
இந்திய வெளியுறவுத்துறை, இந்த விவகாரத்தில் முடிவெடுப்பது தொடர்பாகச் சற்றுக் குழம்பிப் போயிருப்பதாகவே தெரிகிறது.
“உலகளாவிய அமைதி முயற்சியில் இந்தியா ஒதுங்கியிருக்கக் கூடாது. இது மத்திய கிழக்கில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்த உதவும்’’ என ஒரு சில குரல்கள் ஆதரவாக எழுந்திருக்கின்றன.
ஆனால், “பாரம்பர்யமாக ஐ.நா-வின் அமைதிப் பணிகளை ஆதரிக்கும் இந்தியா இதில் இணையக் கூடாது’’ என்ற எதிர்க் குரல்களே பரவலாக இருக்கின்றன.
குறிப்பாக இடதுசாரிகள் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், “ட்ரம்ப் முன்மொழிந்திருக்கும் அமைதி வாரியம், திட்டமிட்டே ஐ.நா சபையின் செல்வாக்கைக் குறைக்கப் பார்க்கிறது.
முழுக்க முழுக்க அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சர்வதேச வாரியத்தை உருவாக்க முயல்கிறார் ட்ரம்ப்.
பாலஸ்தீன உரிமைகளை மதிக்காத இந்த வாரியத்தில் இந்தியா பங்கேற்றால், அது நமது பாலஸ்தீனக் கொள்கைகளுக்கு இழைக்கும் துரோகமாகிவிடும்.
எனவே, மத்திய அரசு இந்த வாரியத்தில் இணையக் கூடாது’’ என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
`அமைதி வாரியமா… அடிமை வாரியமா?’
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அலசி ஆராயும் சிலர், “இது அமைதி வாரியம் அல்ல… ட்ரம்ப்பின் அடிமை வாரியம்.
காஸாவை தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு இடமளித்திருப்பதும், பாலஸ்தீன பிரதிநிதிகளே இல்லாமல் காஸாவை மீட்டுருவாக்கம் செய்வோம் என ட்ரம்ப் கிளம்பியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
ட்ரம்ப்பின் இந்தத் தன்னிச்சையான வாரியத்தில் இந்தியா இணைந்தால், அது நம் நாட்டின் மாண்பை உலக அரங்கில் சிதைத்துவிடும்.
ஐ.நா-வை அவமதிப்பதாகிவிடும். பாகிஸ்தானும் துருக்கியும் முந்திக்கொண்டு இணைந்திருக்கும் இந்த வாரியத்தை இந்தியா நிச்சயம் புறக்கணிக்க வேண்டும்’’ என்கிறார்கள்.
இந்த வாரியத்தில், ட்ரம்ப்பின் மகள் இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் இடம்பெற்றிருப்பதே பெரும் சர்ச்சையாகி யிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் அவர் வழங்கிய பிசினஸ் பிரசன்டேஷனில், `காஸாவில் கடற்கரைகளை ஒட்டி வானுயர்ந்த கட்டடங்கள் எழுப்பப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
`சொகுசுக் கப்பல்கள், நட்சத்திர விடுதிகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக அது மாற்றப்படும்’ என்றும் தெரிவித்திருந்தார்.
`அமெரிக்க அதிபரா… ரியல் எஸ்டேட் அதிபரா?’
அதன் பிறகு உரையாற்றிய ட்ரம்ப், “நான் மனதளவில் ஒரு ரியல் எஸ்டேட் நபர். காஸா ஒரு பியூட்டிஃபுல் பிராப்பர்ட்டி. சிறப்பாக ஜாரெட் திட்டமிட்டிருக்கிறார். காஸாவின் ஏழை மக்களுக்கு நல்ல வீடு, பள்ளிக்கூடங்கள் எனச் சிறப்பான வாழ்வு கிடைக்கப்போகிறது.
வேலைவாய்ப்புகளும் உருவாகப்போகின்றன’’ என்றார். அமெரிக்காவின் அதிபரைப்போல அல்லாமல், ரியல் எஸ்டேட் அதிபரைப்போல ட்ரம்ப் பேசியதும் பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது
சர்வதேச அரசியல் நோக்கர்களோ, “உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, தன்னகத்தே அதிகாரத்தைக் குவித்துக்கொள்ள ஒரு பவர் சென்டராகத்தான் அமைதி வாரியத்தை உருவாக்கியிருக்கிறார் ட்ரம்ப்.
அதேபோல, ட்ரம்ப் அடிப்படையில் ஒரு பிசினஸ்மேன். தனது குடும்பத்தின் ரியல் எஸ்டேட் தொழில் லாபத்துக்காகவும் அமைதி வாரியத்தை உருவாக்கி காஸாவை குறிவைத்திருக்கிறார்.
நீண்டகாலமாகவே, `காஸாவை மத்திய கிழக்கின் சொர்க்கமாக மாற்றுவேன்’ என ட்ரம்ப் சொல்லிக்கொண்டிருப்பதை வைத்தே இதன் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்’’ என்கிறார்கள்.
ஆண்டாண்டுக்காலமாக அவதிப்படும் பாலஸ்தீன மக்களின் சொர்க்கமாக காஸாவை மாற்றியமைப்பதே சரி. ஆனால், பணக்காரர்களின் சொர்க்கமாக காஸாவை மாற்றத் துடிக்கிறார் ட்ரம்ப்.
எல்லை மீறி ஆட்டம் போடும் ட்ரம்ப்புக்குக் கடிவாளம் போடுவது யார்?!,

