மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் முதல்வரின் உதவியாளர் மணிமாறன் ஆகிய இருவர் மீதும் 108 BNS என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவியின் காதலை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள கல்லூரி முதல்வரின் உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென் மாவட்டங்களை அதிர வைத்த மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன?
தென் மாவட்டங்களை அலறவிட்ட கல்லூரி மாணவி சோலை ராணியின் தற்கொலை விவகாரம்.
காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டதை கண்டித்ததால் விபரீத முடிவு. மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கல்லூரி முதல்வர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்ததா? சிவகாசியில் நடந்தது என்ன?
சிவகாசி, ஆசாரி காலனியைச் சேர்ந்த பாண்டியராஜன் – முருகேஷ்வரி தம்பதியின் மகள் 19 வயதான சோலைராணி.
பாண்டியராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் முருகேஸ்வரி தூய்மை பணி மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தனது மகளான சோலைராணியை சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் படிக்க வைத்தார்.
மாணவி சோலைராணி 2ஆம் ஆண்டு பி.சி.ஏ பயின்று வந்த நிலையில் கடந்த ஆண்டு இதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புகைப்படம் சக மாணவ-மாணவியர் மத்தியில் வைரலானதன் தொடர்ச்சியாக கல்லூரி முதல்வரின் உதவியாளர் மணிமாறன் மூலமாக கல்லூரி முதல்வரின் பார்வைக்கு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த 20ஆம் தேதி மாணவி மற்றும் மாணவியின் தாய் முருகேஸ்வரியை நேரில் அழைத்த கல்லூரி நிர்வாகம் இருவரையும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து அலைக்கழித்ததாகவும்; அதன் பின்னர் முதல்வர் அசோக், மாணவியை இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என கண்டித்து அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
அதில் மிகவும் வருத்தத்திற்கு உள்ளான மாணவியை வீட்டிற்கு சென்றதும், அவரது தாய் முருகேஸ்வரியும் கடுமையாக கண்டித்து படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளார்.
இதில் மன உளைச்சலடைந்த சோலைராணி, அன்றைய தினம் 20ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மாணவியின் காதலை கண்டிப்பதாக அவரை மன உளைச்சலாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக், முதல்வரின் உதவியாளர் மணிமாறன், மணிமாறனுக்கு மாணவியின் புகைப்படத்தை அனுப்பிய சக மாணவி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

