;கறுப்பு, சிவப்புக் கொடி கட்டிய காரில் அண்ணா செல்கிறார். ஓர் இடத்தில் கார் நிற்கிறது. அங்கே இருந்த சிலர், கறுப்பு, சிவப்புக் கொடியைப் பார்த்துவிட்டு, ‘நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியா?’ என்று அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள். ‘ஆமாம்’ என்று அண்ணா புன்னகைக்கிறார்.
அதை அவர் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். ‘தன்னை மிஞ்சி ஒருவரா..?!’ என்று எம்.ஜி.ஆரை அண்ணா பார்க்கவில்லை!
தி.மு.க என்றால் எம்.ஜி.ஆர்., கறுப்பு சிவப்பு என்றால் எம்.ஜி.ஆர் என்ற அளவுக்கு தி.மு.க-வின் முகமாக எம்.ஜி.ஆர் விளங்கிய காலம் அது.
1971 தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார் எம்.ஜி.ஆர். ஒருமுறை நடிகர் தேங்காய் சீனிவாசனை உடன் அழைத்துச்செல்கிறார். காரில் செல்லும்போது தேங்காய் சீனிவாசன் நெளிந்துகொண்டேயிருக்கிறார். ‘
என்ன சீனிவாசன் உடம்பு சரியில்லையா?’ என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர். ‘அதெல்லாம் இல்லை. காலடியில் ஒரு மூட்டை இருக்கிறதே… அது என்ன?’ என்று கேட்ட சீனிவாசனிடம், ‘பிரித்துப் பாருங்களேன்…’ என்று எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
மூட்டையைப் பிரித்தால், ஒரே ஆச்சர்யம். அவ்வளவும் ரூபாய் நோட்டுகள். தேங்காய் சீனிவாசன் அதிர்ந்துபோகிறார். ‘ஒன்றுமில்லை. இரண்டு நாள்களில் மூன்று மாவட்டங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.
ஐம்பது கூட்டங்களுக்கு மேல் பேசவேண்டியிருக்கிறது. இந்தப் பணமெல்லாம் கட்சி செலவுக்காகத்தான். தேர்தலில் நாம் அதிக இடங்களைப் பெற வேண்டுமல்லவா…’ என்று எம்.ஜி.ஆர் கண்சிமிட்டுகிறார்.
இப்படி, மூட்டைகளில் பணத்தை எடுத்துச் சென்று கட்சிக்குச் செலவு செய்பவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.
1971 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க பெறுகிறது. கருணாநிதி அமைச்சரவையில் எம்.ஜி.ஆர் இடம்பெறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
எம்.ஜி.ஆரும் தனக்கு ‘மெடிக்கல் மினிஸ்டர்’ பதவி வேண்டும் என்று கருணாநிதியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை.
‘நடிப்புத் தொழிலில் இருப்பதால், அமைச்சர் பதவி உங்களுக்குக் கொடுப்பதில் சட்டச் சிக்கல் இருக்கிறது. உங்களை அமைச்சர் ஆக்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்…’ என்று கருணாநிதி தெரிவிக்கிறார். ஆனால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை.
தி.மு.க-வுக்குள் உருவான புயல்!
கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே புகைச்சல் உருவாகிறது. அந்தச் சூழலில், தி.மு.க-வின் செங்கல்பட்டு மாநாடு 1972, ஏப்ரல் 8, 9 தேதிகளில் நடைபெற்றது.
மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவால் உருவாக்கப்பட்ட நமது கழகத்தில் பூசலை உண்டாக்கப் பார்க்கிறார்கள். பிளவை உண்டாக்கப் பார்க்கிறார்கள். நடக்குமா..?’ என்று ஆவேசப்பட்டார்.
அடுத்ததாக, திருக்கழுக்குன்றத்தில் அண்ணா பிறந்தநாள் விழா. எம்.ஜி.ஆர் என்ன பேசப்போகிறாரோ என்று எல்லோரும் பரபரப்புடன் காத்திருந்தனர்.
ஆட்சியிலும் கட்சியிலும் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடம்பரமான பங்களாக்களும் கார்களும் மிகக்குறுகிய காலத்தில் எப்படி வந்தன என்று மக்கள் கேட்கிறார்கள்.
கலைஞரின் அரசு, அண்ணாவின் கொள்கைகளை அமல்படுத்தவில்லை. ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்… சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால், அதற்குக் கணக்கு காட்டு…’ என்று சரவெடியாக வெடித்தார்
எம்.ஜி.ஆர். அடுத்தபடியாக சென்னை லாயிட்ஸ் காலனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதே சரவெடி. தி.மு.க-வுக்குள் `திகுதிகு’வெனப் புயல் உருவானது.
எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் விவாதிக்கப்பட்டது.
1972, அக்டோபர் 9-ம் தேதி தி.மு.க-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அக்டோபர் 14-ம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
அந்த அறிவிப்பு வெளியானதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கொந்தளித்தனர். ‘எம்.ஜி.ஆர் வாழ்க…’, ‘கருணாநிதி ஒழிக…’ என்ற முழக்கம் தமிழகமெங்கும் ஒலித்தது. தி.மு.க கொடிமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பேருந்துகள் ஓடவில்லை.
புரட்சித்தலைவரானார்!
1972, அக்டோபர் 17-ம் தேதி, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சி தோன்றியது. கறுப்பு சிவப்புக்கு நடுவில் அண்ணாவின் உருவம் பொறித்த கொடி உருவானது.
‘புரட்சி நடிகர்’ என்று அழைக்கப்பட்டுவந்த எம்.ஜி.ஆர்., ‘புரட்சித்தலைவர்’ ஆனார்.
அப்போது, கருணாநிதியின் எதிர்வினை என்ன தெரியுமா… ‘அவர் என்ன விரும்பினாரோ, எதற்காகத் திட்டமிட்டாரோ அது நடந்திருக்கிறது.
தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் கணக்கு தீர்க்க விரும்பினாரே அல்லாமல், கணக்கு பார்க்க விரும்பவில்லை’ என்றார் கருணாநிதி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க பக்கம் சாய்ந்தது. தி.மு.க அமைச்சர்கள்மீது ஊழல் குற்றம்சாட்டி, குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் எம்.ஜி.ஆர் புகார் மனு அளித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரமும் தி.மு.க-வுக்கு எதிரான புகார் மனுவைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தார்.
சட்டமன்ற சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன், அ.தி.மு.க பக்கம் சாய்ந்திருந்தார். 1972, நவம்பர் 13-ம் தேதி சட்டமன்றம் கூடியது. எம்.ஜி.ஆர் எழுந்து, ‘மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த அமைச்சரவை நீடிப்பது சரியா?’ என்று கேள்வி எழுப்பினார்.
உடனே, ‘சட்டசபையைக் கலைத்துவிட்டு, மறு தேர்தலுக்கு மக்களைச் சந்தியுங்கள்’ என்று முதல்வர் கருணாநிதியைப் பார்த்துக் கூறிவிட்டு, டிசம்பர் 2-ம் தேதிக்குச் சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் மதியழகன்.
சட்டமன்றத்தில் இரு சபைகள்!
1972, டிசம்பர் 2-ம் தேதி. ஒரு விநோதக் காட்சியை தமிழக சட்டமன்றம் கண்டது. ஒரே நேரத்தில் இரண்டு சபைகள் நடைபெற்றன.
சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தி.மு.க கொண்டுவந்தது. அவை முன்னவர் நெடுஞ்செழியன் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்துக்கு, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
‘சட்டசபைக்குத் துணை சபாநாயகர் தலைமை தாங்கலாம் என்று சபை தீர்மானிக்க வேண்டும்’ என்று நெடுஞ்செழியன் கூறினார். பெரும்பான்மை இருந்ததால், அந்தத் தீர்மானத்துக்குச் சபை ஒப்புதல் அளித்தது.
அதையடுத்து, சபாநாயகர் மதியழகன் நாற்காலிக்கு அருகில் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார் துணை சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன்.
அமைச்சரவை மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்மீது எம்.ஜி.ஆர் பேசலாம்’ என்று சபாநாயகர் மதியழகன் கூறினார். உடனே, மைக் அணைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. ஆனாலும், அவர் பேசிக்கொண்டிருந்தார்
. அதேநேரம், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை நடத்திய பெ.சீனிவாசன், 176 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது என்று அறிவித்தார்.
அதன் பிறகு, சபையிலிருந்து எம்.ஜி.ஆரும் மதியழகனும் வெளியேறுகிறார்கள். அவர்மீது காலணி வீசப்படுகிறது. ‘சட்டசபை செத்துவிட்டது’ என்று எம்.ஜி.ஆர் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
பெரியாருக்கு அரசு மரியாதை!
தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆளுமை செலுத்திய இரு பெரும் தலைவர்கள் அடுத்தடுத்து மறைந்தார்கள்.
1972, டிசம்பர் 25-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் ராஜாஜி காலமானார். பெரியாரும் ராஜாஜியும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், அவர்கள் இணைபிரியாத நண்பர்கள்.
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு வரை சென்று கண்ணீர்மல்க தன் நண்பருக்கு விடைகொடுத்தார் பெரியார். அடுத்த ஓராண்டில் அதே டிசம்பரில் பெரியாரும் காலமானார்.
1973, டிசம்பர் 24-ம் தேதி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அரசு மரியாதையுடன் பெரியாரின் இறுதிப் பயணம் நடைபெற வேண்டும் என்று முடிவுசெய்தார் முதல்வர் கருணாநிதி.

ஆனால், ‘அரசுப் பொறுப்பு எதிலும் இல்லாத ஒருவருக்கு அரசு மரியாதை அளிக்க, சட்ட விதிமுறைகளின் படி வழி இல்லை’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே,
‘காந்தி எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்?’ என்று அதிகாரிகளிடம் கேட்டார் முதல்வர் கருணாநிதி. ‘பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட வேண்டும்’ என்று முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,
இதற்கென்று தனியாக அரசிதழ் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் துக்க நாளாக அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங் களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பெரியாரின் இறுதி ஊாவலம்
தேசியக்கொடி இரண்டு நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கப்படவிடப்பட்டது.
அறையைப் பூட்டிய மாமியார்!
1973, அக்டோபர் 14-ம் தேதி. அலகாபாத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாடு. அதில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி சொன்ன ஒரு கதை, சிக்கலை உண்டாக்கியது.
அதாவது, ‘வீட்டு வாசற்படியில் கவலையுடன் அமர்ந்திருக்கிறாள் மருமகள். அடுத்த வீட்டுக்காரி வந்து, ‘என்ன கவலையாக இருக்கிறாய்… சமைக்கவில்லையா?’ என்று கேட்கிறாள். அதற்கு ‘இல்லை’ என்றாள் மருமகள். ‘
ஏன், சமைப்பதற்கு அரிசி, கோதுமை இல்லையா?’ என்றாள் அடுத்த வீட்டுக்காரி. ‘எல்லாச் சாமான்களும் இருக்கின்றன’ என்றாள் மருமகள்.
‘பிறகென்ன, அடுப்பெரிக்க விறகு இல்லையா?’ என்று அவள் கேட்டாள். ‘விறகு இருக்கிறது’ என்றாள் மருமகள். ‘பிறகு ஏன் கவலையோடு இருக்கிறாய்?’ என்று பக்கத்து வீட்டுக்காரி கேட்டாள். அதற்கு, ‘எல்லாம் இருக்கின்றன.
ஆனால், எல்லாவற்றையும் அறையில் பூட்டிவைத்து, சாவியை எடுத்துச் சென்றுவிட்டாள் என் மாமியார்’ என்று பதில் சொன்னாள் மருமகள். இப்படித்தான், மருமகள்களாக மாநிலங்கள் இருக்கின்றன.
மத்திய சர்க்கார் மாமியாராக இருக்கிறது. அந்த மாமியாரைப் பார்த்து சாவியைக் கொடு என்று கேட்கிறோம். அதற்குப் பெயர்தான் மாநில சுயாட்சி’ என்றார் கருணாநிதி.
அவ்வளவுதான். ‘கொடூரமான மாமியாராக மத்திய சர்க்காரை கருணாநிதி சித்திரிக்கிறார். பிரதமர் இந்திரா காந்தியைத்தானே அவர் கொடூர மாமியார் என்கிறார்…’ என்கிறரீதியில் காங்கிரஸார் கொதித்தனர்.
காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்குமான உறவில் விரிசல் விழத் தொடங்கிய வேளையில், இந்தியாவை இருள் சூழ்ந்தது!
(இன்னும் அறிவோம்)
அண்ணா, புற்றுநோயால் காலமானார்: முதல்வர் பதவியை கருணாநிதி ஏற்றார். -. (தமிழக தேர்தல் வரலாறு-10)

