தெஹ்ரானின் கிரான்ட் பஸார். எப்போதும் வணிகம் களைகட்டும் ஈரானின் இதயத் துடிப்பு.

அரிசி, வாசனைத் திரவியங்கள், அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே இங்கு கிடைக்கும். ஆனால், சமீப வாரங்களில், கையில் பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை உருவானது. விலைகள் கண்மூடித்தனமாக உயர்ந்தன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக மக்கள் வரிசையில் நின்ற அனுபவம் நினைவுக்கு வரலாம். பொருளாதார நெருக்கடி, ஒரு சமூகத்தின் பொறுமையை எவ்வாறு சோதிக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு அது.

டிசம்பர் 28. கிரான்ட் பஸார் வர்த்தகர்கள் கடைகளை மூடினர். ‘இப்படியே போனால் எதுவும் செய்ய முடியாது’ என்ற குரல் எழுந்தது.

வணிகர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவர்களின் கோரிக்கை தெளிவானது: ‘பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து. பொருளாதாரத்தை சீர்செய்’.

ஆரம்பத்தில் இது ஒரு பொருளாதாரப் போராட்டம். ஆனால், காலப்போக்கில் அதன் இயல்பு மாறியது.

வீதிகளில் இருந்து வன்முறைக்குள்

கிரான்ட் பஸாரைத் தாண்டி, 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கினர். அந்தக் கூட்டங்களில் இருந்து சில கும்பல்கள் பிரிந்து, கட்டடங்கள், வாகனங்கள் ஆகியவற்றை எரிக்கத் தொடங்கின.

கோஷங்கள் மாறின. ‘உணவுக்கு காசில்லை’ என்ற குரல், ‘சர்வாதிகாரி ஒழிக’ என்ற அரசியல் கோஷமாக உருமாறியது.

சீருடை அணிந்த படைவீரர்கள் பாதுகாப்பளித்துக் கொண்டிருந்த சூழல், மோதல்களாக மாறியது.

ஆயுதம் தாங்கிய படைகள் வீதிகளில் இறங்கின.

இவ்வாறே, ஈரானிய நெருக்கடி உருவானது.

அதன் அடிப்படை காரணம் பொருளாதாரம் தான். நூறு சதவீதத்தை நெருங்கும் பணவீக்கம்.

ஆட்சி – ஆதரவு – அரசியல் சமநிலை

கிரான்ட் பஸார் வர்த்தகர்கள், ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெய்னியின் பாரம்பரிய ஆதரவாளர்கள்.

அவர்களது கரிசனைகளை ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஏற்றுக் கொண்டு, ‘பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

அமைதியான முறையில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்வது, ஈரானிய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை என அரசாங்கம் வலியுறுத்தியது.

ஆனால், இந்த அரசியல் சமநிலை நீடிக்கவில்லை.

வீதியிலிருந்து திரைக்கு: பிரசாரப் போர்

மோதல்கள் தொலைக்காட்சித் திரைகளுக்கு நகர்ந்தன.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி, அரசுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கோஷமிடும் காட்சிகளை ஒளிபரப்பியது.

மேலைத்தேய ஊடகங்கள், படைகள் இளைஞர்களை சுடும் காட்சிகளை முன்னிறுத்தின.

இந்நிலையில்தான், போராட்டம் தகவல் யுத்தமாக மாறியது.

ஈரானிய அரசு, ஆர்ப்பாட்டங்களில் இருந்து மொசாட் உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.

மேலைத்தேய ஊடகங்கள், ‘அப்பாவிப் பொதுமக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்’ என்ற கதையை முன்வைத்தன.

யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பத்தில் உலகம் சிக்கியது.

உண்மையா? பொய்யா? – சாகர் எற்றிமாடி விவகாரம்

சாகர் எற்றிமாடி என்ற யுவதி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக கொல்லப்பட்டதாக மேலைத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஈரானின் பிரஸ் ரீவி , சாகர் உயிருடன் இருப்பதாக அறிவித்தது. யுவதியின் தாயும், ‘பொய்களை நம்ப வேண்டாம்’ என்று கோரினார்.

ஈரான் ஏன் கொந்தளிக்கிறது?

இன்றைய ஈரானிய நெருக்கடிக்கு இரண்டு காரணங்கள்: முதலாவதாக உள்நாட்டு ஆர்ப்பாட்டங்கள். அடுத்து வெளித்தரப்பு அச்சுறுத்தல்கள்

இவை இரண்டும் ஈரானுக்கு புதிதல்ல.

2022 இல் மாஷா அம்னி மரணத்தைத் தொடர்ந்து எழுந்த பெரும் ஆர்ப்பாட்டங்களை நினைவுகூரலாம்.

அதேபோல், பொருளாதாரத் தடைகள், பிராந்திய அரசியல் அழுத்தங்கள், ஆட்சி கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சிகள்— இவை ஈரானிய வரலாற்றில் தொடர்கதையாக நீடிப்பவை.

சர்வதேசமயமாக்கப்படும் உள்நாட்டு நெருக்கடி

கடந்த ஆண்டு, ஈரானின் அணு நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும் இந்த அழுத்தத்தின் தொடர்ச்சியே.

இம்முறை, கிரான்ட் பஸார் ஆர்ப்பாட்டங்கள், வெளிநாட்டு சக்திகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கின.

‘ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்பட்டால் அவர்களை மீட்க அமெரிக்கா தயார்’ என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியமை இந்த நெருக்கடியை சர்வதேச மேடைக்கு இழுத்துச் சென்றது.

புலனாய்வு – ஊடகம் – செயற்கை நுண்ணறிவு

Iran’s Revolutionary Guard

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையணி (ஐ.ஆர்.ஜி.சி.) கூறுவது போல, இந்த நெருக்கடியை சர்வதேசமயப்படுத்த மூன்று கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

அவை, புலனாய்வு, ஊடகம், செயற்கை நுண்ணறிவு ஆகியவையாகும்.

2022 ஆர்ப்பாட்டங்களில் 20 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அமைப்புகள் தலையிட்டதாக ஐ.ஆர்.ஜி.சி.) கூறுகிறது.

மொசாட், சி.ஐ.ஏ. போன்ற அமைப்புகள் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறது.

பழைய காணொளிகள் புதியதாக காட்டப்படுதல்,கோஷங்களுக்கு வேறு குரல்கள் டப் செய்யப்படுதல், சமூக வலைதளங்களில் திட்டமிட்ட பரவல்— இவை அனைத்தும் தகவல் யுத்தத்தின் ஒரு பகுதியாக விளக்கப்படுகின்றன.

புவிசார் அரசியல் பார்வை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் யுத்தம், வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ மீது அமெரிக்க அழுத்தங்கள், ஈரானை நோக்கிய அணுகுமுறை— இவற்றுக்கு இடையில் ஒரு நேர்கோட்டை வரைய முடியும்.

உலகளாவிய ஆதிக்கம் சவாலுக்கு உள்ளாகும் போது, ‘வல்லரசு’ என்ற தோற்றத்தை தக்கவைக்க எடுக்கப்படும் முயற்சிகள் தான் இவை என ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிடுகிறார்.

ஈரான் – புரட்சியின் விளிம்பிலா?

அல்ஜீரியா, இலங்கை போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகள், பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தின.

ஆனால், ஈரானில் நிலை வேறு.

அங்கு அரசியல்–இராணுவ–நிர்வாக நிறுவனங்கள் ஒன்றிணைந்தே செயல்படுகின்றன. வெளித்தரப்பு அழுத்தங்களுக்கு மத்தியில், ஆட்சிக் கட்டமைப்பில் பிளவு இல்லை.

ரெஸா பஹ்லவி சமூக வலைதளங்களில் புரட்சி பேசினாலும், ஈரானிய மக்கள் அவரை ஒரு அரசியல் மாற்றாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே.

ஈரானிய நெருக்கடியை முழுமையாக புரிந்துகொள்ள, மேலைத்தேய ஊடகங்கள் என்ற நிறந்தீட்டப்பட்ட கண்ணாடிகளைக் கொண்ட சாளரத்திற்குள் மட்டுமே நின்று பார்ப்பது போதாது.

உண்மை எது, பிரசாரம் எது என்பதை பிரித்தறிவது கடினம். ஆனால், அந்த உண்மை வெளிப்படும் நாள், தொலைவில் இல்லை என்பதே இன்றைய நிலை.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Share.
Leave A Reply