மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை, கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் சந்திக்கச் சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தகத் தொகுதியொன்றில் அமைந்துள்ள உணவகத்தில் இவ்வாறு சந்தித்துள்ளதுடன், பின்னர் சந்தேகநபர் குறித்த நபருக்கு இரகசியமாக மருந்து மாத்திரைகளை அருந்தச் செய்து, அவர் நினைவிழந்த பின்னர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் அவரது வங்கிக் அட்டையிலிருந்து 258,000 ரூபா பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் குறித்த தனியார் வங்கி உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 28 வயதுடைய இந்தச் சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து பணத்தை அறவிடும் இயந்திரம் ஒன்று, 05 போதை மாத்திரைகள் மற்றும் சில பணத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரி ஒருவரையும் போதையேற்றி, அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

Share.
Leave A Reply