Epstein Files: பல ரஷ்ய பெண்களுடன் உடலுறவு மேற்கொண்டதால், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுக்கு பால்வினை நோய் வந்ததாக எப்ஸ்டீன் பைல்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bill Gates vs Epstein Files: எப்ஸ்டீன் பைல்ஸ் சமீப காலமாக அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறுவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி ஆவார்.
இவரின் குற்றச் செயல்கள் அடங்கிய பல லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய தொகுப்புதான் எப்ஸ்டீன் பைல்ஸ் (Epstein Files) என்றழைக்கப்படுகிறது.
இதில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பர்கள் செய்த குற்றங்களும் அடக்கம். இதில் அரசியல்வாதிகள், பெரும் பிரபலங்கள் ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
Epstein Files: பொதுவெளிக்கு வந்த எப்ஸ்டீன் பைல்ஸ்
கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்தான் எப்ஸ்டீன் பைல்ஸை ரிலீஸ் செய்வது என்ற வெடிகுண்டை அமெரிக்காவில் வீசினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் கீழவையில் Epstein Files Transparency Act என்ற சட்டம் நிறைவேறியது.
அதேநாளில் செனட் அவையும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அடுத்த நாளே இந்த சட்டத்தை நிறைவேற்றி அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த சட்டத்தின் நோக்கமே எப்ஸ்டீன் பைல்ஸை பொதுவெளிக்கு கொண்டுவருவதுதான். மேலும், எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது ஜனநாயக கட்சியனரால் ஜோடிக்கப்பட்ட ஒன்று ஆரம்பத்தில் இருந்து டிரம்ப் பேசி வந்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
Epstein Files: 3.5 மில்லியன் பக்கங்கள் வெளியீடு
அந்த வகையில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி எப்ஸ்டீன் பைல்ஸின் சிறு பகுதி அமெரிக்காவின் நீதித்துறையால் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, நேற்று (ஜன. 30) எப்ஸ்டீன் பைல்ஸின் 3.5 மில்லியன் பக்கங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 2 ஆயிரம் வீடியோக்கள், ஒரு லட்சத்து 80 ஆயிரம் புகைப்படங்கள் அடக்கம். சுமார் 6 மில்லியன் பக்கங்கள் எப்ஸ்டீன் பைல்ஸில் இருந்ததாக முன்னர் அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் இனி எப்ஸ்டீன் பைல்ஸில் இருந்து பக்கங்கள் வெளிவராது என நீதித்துறை தெரிவித்துள்ளது.
Epstein Files: பில் கேட்ஸுக்கு வந்த பால்வினை நோய்…?
தற்போது வெளியாகியிருக்கும் எப்ஸ்டீன் பைல்ஸில் பல்வேறு பிரபலங்கள் சிக்கியிருக்கும் சூழலில், அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பில் கேட்ஸூம் அடக்கம் என கூறப்படுகிறது.
பில் கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொண்டதால், அவருக்கு பால்வினை நோய் வந்தது என்றும் அதில் இருந்து அப்போதைய அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸுக்கு நோய் பரவாமல் இருக்க ரகசியமாக ஆண்டிபயோடிக் மருத்துகளை பில் கேட்ஸ் செலுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் 2013ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தனக்குத்தானே எழுதிய மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவையும் எப்ஸ்டீன் பைல்ஸில் இருந்துள்ளன. ஆனால், பில் கேட்ஸ் தொடர்பான இந்த கூற்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
Epstein Files: எப்ஸ்டீன் பைல்ஸில் உள்ளது என்ன?
தற்போது இந்த சர்ச்சைக்குரிய சம்பவம், 2013ஆம் ஆண்டு ஜூலை 18 தேதியிட்ட மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் எழுதப்பட்டு, Draft-ல் வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், அதில் சில வரிகள் பில் கேட்ஸின் அப்போதைய ஆலோசகர் போரிஸ் நிகோலிக்கின் கூற்றுகள் போல் குறிப்பிடப்பட்டுள்ளன.
பில் கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இதனால் அவர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார் என்றும் அந்த மின்னஞ்சல்களில் எப்ஸ்டீன் எழுதி உள்ளார்.
இதற்கா, மெலிண்டா கேட்ஸுக்கு ரகசியமாக கொடுக்க ஆண்டி பயாடிக்ஸை கேட்ஸ் கேட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்னஞ்சல்களை அழிக்குமாறு பில் கேட்ஸ் தன்னிடம் வற்புறுத்தியதாகவும் எப்ஸ்டீன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Epstein Files: பில் கேட்ஸ் மறுப்பு
ஆனால், இந்த கூற்றுகளை பில் கேட்ஸ் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. பில் கேட்ஸின் செய்தித்தொடர்பாளர் ஊடகத்திற்கு அளித்த விளக்கத்தில், “இந்தக் கூற்றுக்கள் அபத்தமானவை மற்றும் முற்றிலும் தவறானவை. எப்ஸ்டீனுக்கு கேட்ஸுடன் தொடர்ச்சியான உறவு இல்லை என்ற விரக்தியையும், அவரை சிக்க வைத்து அவதூறு பரப்ப அவர் எவ்வளவு தூரம் செல்வார் என்பதையும் மட்டுமே இந்த ஆவணங்கள் நிரூபிக்கின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை கைதியாக இருந்தபோது, எப்ஸ்டீன் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
அப்போதே, பில் கேட்ஸ் எப்ஸ்டீனுடனான தனது நட்புறவு குறித்து வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். மேலும் எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த வணிக உறவும் இல்லை என்றும் பில் கேட்ஸ் கூறினார்.
Epstein Files: முன்னாள் மனைவி சொன்ன விஷயம்
பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸை கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.
பில் கேட்ஸின் தவறான நடத்தையும், எப்ஸ்டீனுடனான அவரது தொடர்பும்தான் தங்களது விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்று என்று மெலிண்டா கேட்ஸ் கூறியிருந்தார். ஆனால், அதுகுறித்து கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

