சுதாகர்..1970-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்திய வெள்ளி விழா நாயகன்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ உட்பட இவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, வசூலை வாரிக் குவித்தன.

தெலுங்கு சினிமாவிலும் தடம் பதித்து அங்கேயே செட்டிலானவர், சினிமாவிலிருந்து ஓய்வெடுப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார்.

‘நோ ஆக்டிங், நோ இன்டர்வியூ’ என உறுதியுடன் இருந்தவரை, நீண்டதோர் உரையாடலுக்குச் சம்மதிக்கவைத்து, ஹைதராபாத்திலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

‘‘எனக்கு முகவரி கொடுத்தது, தமிழ் சினிமாவும் என் குருநாதர் பாரதிராஜா சாரும்தான். அதுக்காக என் குடும்பத்துல கடைசி தலைமுறையினர் இருக்குறவரைக்கும் நன்றியுடன் இருப்போம்!’’ – உணர்ச்சிப் பெருக்குடன் ஆரம்பித்தவருக்கு,

உடல்நலனில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும், உற்சாகம் குறையாமல் தன் நினைவடுக்குகளில் பொதிந்திருக்கும் சினிமாச் சுவடுகளை சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்.

‘‘என் பூர்வீகம் ஆந்திர மாநிலம், கர்னூல் ஏரியா. என் அண்ணன் விஜயகுமாருக்கு நான் சினிமாவுல நடிக்கணும்னு ஆசை.

சென்னை, தரமணியிலே இருக்கிற ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல அவர்தான் என்னைச் சேர்த்துவிட்டார்.

அந்த இன்ஸ்டிட்யூட்ல ரஜினி சார் எனக்கு சீனியர்; சிரஞ்சீவி சார் எனக்கு ஜூனியர். அந்தக் காலகட்டத்துல, ஒரு ஹோட்டல்ல பாரதிராஜா சாரும் நானும் யதேச்சையா சந்திச்சுக்கிட்டோம்.

பலமுறை உத்துப் பார்த்தவர், என்னைப் பத்தின விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, ‘நீ சினிமாவுல நடிப்பியா?’னு கேட்டார்.

நான் தயங்கினேன். ‘நான் பார்த்துக்கிறேன்’னு நம்பிக்கையூட்டியவர், தமிழ் கத்துக்குடுத்து, நடிப்பு சொல்லிக்குடுத்து அவர் மகனைப்போல என்னைப் பார்த்துக்கிட்டார்.

ராதிகாவுக்கும் அதுதான் அறிமுகப்படம். எம்.ஆர்.ராதா சாரோட மகள்னு தெரிஞ்சதும், ராதிகா மேல எனக்கு மரியாதை கலந்த பயம் ஏற்பட்டுச்சு.

ஆனா, அவங்க என்னைக் கிண்டல் பண்ணி, தமாஷ் பண்ணுவாங்க. அப்போ எனக்கு 18 வயசு. என் தலைமுடி ரொம்ப அடர்த்தியா இருக்கும்.

அந்தப் படத்துல மொட்டையடிச்சு, கழுதைமேல என்னை ஊர்வலமா கூட்டிட்டுப்போற சீன் வரும். அதுக்காக, நான் நிஜமாவே மொட்டையடிக்கணும்னு சொன்னார் பாரதிராஜா சார்.

நான் வருத்தப்பட்டேன். ‘கவலைப்படாதடா. உன்னோட இந்த முதல் படமே ஒரு வருஷம் ஓடும்’னு ஊக்கப்படுத்தினார்.

அவர் சொன்ன மாதிரியே ‘கிழக்கே போகும் ரயில்’ ஒரு வருஷத்துக்கும் மேல ஓடி, அந்தப் படம் பெரிய ஹிட்டாச்சு!’’ – முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர், முன்னணி நாயகனாகச் சில ஆண்டுகள் பட்டொளி வீசினார்.

‘‘என் ரெண்டாவது படம் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’. ‘கிழக்கே போகும் ரயில்‘ படத்தோட கதையாசிரியரான ஆர்.செல்வராஜ் சார் டைரக்ட் பண்ண முதல் படம் அதுதான்.

அதுல, சரிதா தன் வாயால என் கால் நகத்தை கட் பண்ற காட்சி வரும். அந்த சீன்ல நான் ரொம்பக் கூச்சப்பட்டேன்.

‘இது படம்தானே… தயங்காதீங்க’னு எனக்கு தைரியம் குடுத்தாங்க சரிதா. அந்தப் படத்துல வர்ற ‘ஓரம்போ… ஓரம்போ… ருக்குமணி வண்டி வருது’ பாட்டு ஒலிக்காத கிராமங்களே அப்போ இல்லை.

‘நிறம் மாறாத பூக்கள்’, ‘எங்க ஊர் ராசாத்தி’, ‘இனிக்கும் இளமை’னு நிறைய படங்கள்ல பிஸியா நடிச்சேன்.

`இனிக்கும் இளமை’தான் விஜயகாந்த் சாரின் அறிமுகப்படம். ராதிகாவும் சரிதாவும் எனக்கு ஜோடியா பல படங்கள்ல நடிச்சாங்க.

பாக்யராஜ் சார் டைரக்ட் பண்ண முதல் படமான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ வெற்றியைத் தொடர்ந்து,

அந்தப் படத்தோட தெலுங்கு ரீமேக்லயும் நானேதான் ஹீரோவா நடிச்சேன். கமல்ஹாசன் சார், ‘மீண்டும் கோகிலா’ படத்துல, `ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்றீங்களா?’னு கேட்டார்.

அவரோட அன்புக்காக சந்தோஷமா நடிச்சுக் கொடுத்தேன். நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்து, என்னைப் பாமர மக்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை, இளையராஜா சாருக்கு நிறையவே உண்டு…’’ – நன்றி மறவாமல் ஃப்ளாஷ்பேக் சொன்னவர்,

சில பாடல்களைப் பாடிக்காட்டிக் கலகலப்பைக் கூட்டினார்.

1980, 90-களில் நூற்றுக்கும் மேற்பட்ட காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்றார் சுதாகர்.

‘அதிசய பிறவி’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காரணத்தையும் விவரித்தார்.

‘‘தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமாலவுதான் எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் கிடைச்சது. ‘ஹீரோவா நடிச்சுட்டு, காமெடியனா பண்றீங்களே?’னு ஏகப்பட்ட கேள்விகள் வந்துச்சு.

மக்களைச் சிரிக்க வெக்கிறது கஷ்டம். அந்த பாக்கியம் எனக்குக் கிடைச்சது. குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் என் காமெடியை ரசிச்சாங்க.

தெலுங்கு சினிமால பிஸியா நடிச்சுக்கிட்டிருந்ததால, சென்னையிலருந்து வந்து ஹைதராபாத்ல குடியேறினேன்.

சிரஞ்சீவியுடன் நிறைய படங்கள்ல நடிச்சதால, நாங்க நெருங்கின நண்பர்களா இருந்தோம். அவரை ஹீரோவா வெச்சு நான் தயாரிச்ச ‘யமுடிகி மொகுடு’ படம் பெரிய ஹிட்டாச்சு.

அந்தப் படத்தைத் தமிழ்ல ‘அதிசய பிறவி’னு ரீமேக் பண்ணாங்க. அதுல ரஜினி சார் ஹீரோவா நடிக்க, நான் காமெடியனா நடிச்சேன்.

பல வருஷங்கள் கழிச்சு என்னைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், ‘நீங்க காமெடியனா?’னு அதிர்ச்சியா கேட்டாங்க. அதுக்கப்புறமா, ‘காதல் அழிவதில்லை’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்கள்ல மட்டும்தான் நடிச்சேன்.

மத்தபடி, தமிழ்ல எனக்கு வாய்ப்புகளே வரலை. இது தெரியாம, நான் தமிழ் சினிமாவை மறந்துட்டேன்னு பலரும், பலவிதமா பேசினாங்க’’ என்று ஆதங்கத்துடன் சொன்னவரின் உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்திகள் வெளியாகின்றன.

அது குறித்த உண்மைநிலையை விளக்கினார் அவரின் ஒரே மகன் பென்னி. ‘‘2010-ம் வருஷம் அப்பாவுக்கு பிரெயின் ஸ்ட்ரோக் வந்துச்சு.

அதுலருந்தே நிறைய உடல்நல பாதிப்புகள். இவரோட தோற்றமும் ரொம்பவே மாறிட்டதால, நடிக்கிறதைக் குறைச்சுக்கிட்டார்.

நடிகர் ஜெகபதி பாபு சார், அப்பாவுக்கு நெருக்கமான ஃபிரெண்டு. அவர் அப்பப்போ வந்து அப்பாவைப் பார்த்துட்டுப் போவார். மத்தபடி, சினிமா நிகழ்ச்சிகள், வெளியிடங்களுக்குனு அப்பா எங்கயுமே போறதில்லை.

இந்தக் காரணமெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. வெளியிடங்களுக்கு அப்பா அரிதா போறப்போ, அவரோட தோற்றத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைவாங்க.

உடனே அப்பாவை போட்டோ எடுத்து, சோஷியல் மீடியாவுல வதந்திகளைப் பரப்பிடுவாங்க. அப்பாவுக்கு ஹெல்த் ரொம்ப முடியலை.

இவர் இறந்து போயிட்டதாக்கூட தப்பான செய்திகளைப் பரப்புறாங்க. இதனால, எங்களுக்கு வருத்தம் ஏற்படுது.’’ – ஆற்றாமையுடன் சொல்லும் பென்னி, தெலுங்கு சினிமாவில் நடித்துவருகிறார்.

‘‘டைரக்டர் விக்னேஷ் சிவன் சார், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல அப்பா நடிக்கணும்னு நேர்ல வந்து வலியுறுத்தினார்.

அதுக்கப்புறமாதான் அப்பா அந்தப் படத்துல ரம்யா கிருஷ்ணன் மேடத்துக்கு ஜோடியா நடிச்சார். என் தலைமுடியைப் பார்த்து, ‘சின்ன வயசுல உன் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருக்கு’ன்னு பலரும் சொல்லுவாங்க.

அப்பாவும் நானும் ரொம்ப ஃப்ரெண்ட்லி. அவரைப் பார்த்துதான் எனக்கும் சினிமா ஆர்வம் வந்துச்சு. தெலுங்குப் படங்கள்ல கேரக்டர் ரோல்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன்.

அப்பாவையும் என்னையும் ஒண்ணா நடிக்க வெக்கவும் ஆஃபர்ஸ் வருது. ஆனா, அப்பா ரிட்டயர்மென்ட் எடுத்துட்டதால, இனி நடிக்க மாட்டேன்னு உறுதியா இருக்கார்’’ என்றபடியே தன் அப்பாவை பென்னி பார்க்க, சாந்தமாகச் சிரிக்கிறார் சுதாகர்.

தன் மனைவி ஜெயந்தியை அறிமுகப்படுத்திய சுதாகர், குடும்ப விஷயங்கள் குறித்தும் மனம் திறந்தார். ‘‘இந்த நேரத்துல என் மனைவிக்கு நன்றி சொல்லியே ஆகணும்.

அவங்கதான் எனக்கு எல்லாமே’’ என்று நெகிழ்ச்சியானார். ‘‘என் மனைவி, எனக்கு இன்னோர் அம்மா. ஹெல்த் சரியில்லாம எனக்கு நிறைய பிரச்னைகள் வந்தும்,

எதுக்குமே சோர்வடையாம இப்ப வரைக்கும் என்னைக் குழந்தை மாதிரி பார்த்துக்கிறாங்க. எங்களுக்குக் கல்யாணமாகி 12 வருஷங்கள் கழிச்சுதான் மகன் பிறந்தான்.

அதனால, அவன்மேல ரொம்பப் பாசமா இருப்பேன். ஹெல்த் காரணமாதான் நடிக்கிறதை நிறுத்திட்டேன்.

என் பையன் தமிழ் சினிமாவுலயும் நடிக்கணும்னு ஆசைப்படறேன். தமிழ் மக்களும், தமிழ் சினிமாத்துறையினரும் எனக்குக் கொடுத்ததுபோலவே அன்பையும் ஆதரவையும் என் மகனுக்கும் கொடுக்கணும்னு வேண்டுகோளா கேட்டுக்கிறேன்’’ என்பவருக்கு, நிறைவேறாத ஓர் ஆசை இருக்கிறது.

‘‘நான் ரஜினி சார் ரசிகர். ‘அதிசய பிறவி’ படத்துல அவர்கூட நடிக்கிறப்ப என்மேல அவர் காட்டுன அன்பை மறக்கவே முடியாது.

ரஜினி சாரை என் குடும்பத்தினருடன் சந்திக்கவும், என் மகனை அவர்கிட்ட அறிமுகப்படுத்தி ஆசீர்வாதம் வாங்கவும் ஆசைப்படுறேன்.

எனக்கு இருக்கிற இந்த ஒரே ஆசையும் விகடன் மூலமா நிறைவேறினா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

என் குருநாதர் பாரதிராஜா சாருக்கு உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டேன். அவர் சீக்கிரமே குணமாகணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்…’’ – சுதாகரின் பேச்சில் ஆசையும் எதிர்பார்ப்பும் பிரவாகமெடுக்க, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மனம்விட்டுப் பேசிய மகிழ்ச்சியில் விடைகொடுத்தார்.

-விகடன்-

Share.
Leave A Reply