அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா ஆகியோரை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளி ஒன்றை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து பின்னர் நீக்கியுள்ளார்.
ஒபாமா தம்பதிகளை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பகிர்ந்த டொனால்ட் ட்ரம்ப், கடும் கண்டனங்களுக்கு உள்ளான நிலையில் அதனை நீக்கியுள்ளார்.
அந்தக் காணொளி 2020 ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடி நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டிருந்தது.
இதன் இறுதியில் ‘த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்’ என்ற பாடலுடன், ஒபாமா தம்பதியினரை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும், அந்த காணொளியில் ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் விலங்குகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
ஆரம்பத்தில் இது வெறும் ‘இணைய மீம்’ (Internet meme) என்று தற்காத்துப் பேசிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட், விமர்சகர்களைப் பார்த்து “போலியாகக் கோபப்படுவதை நிறுத்துங்கள்” எனக் கூறியிருந்தார்.
இருப்பினும், நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர் ஒருவரின் “தவறு” காரணமாகவே இந்தப் பதிவு இடப்பட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

