அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் விரைவில் நடத்துவோம் என்று கூறுகிறார்கள், இன்னொரு பகுதியினர் புதிய புதிய காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் கடந்த அரசாங்கங்கள் எப்படி காலத்தைக் கடத்தினார்களோ அதே போலவே ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் அரசாங்கமும் இழுத்தடிப்பு செய்கிற சூத்திரத்தை அறிய முடியாமல் இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலின்போதும், பொதுத் தேர்தலின் பிரசார மேடைகளிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என வாக்குறுதிகளை அள்ளி வழங்கியவர்கள் தேர்தல் இடம்பெற்று பல மாதங்கள் கடந்தபோதும் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் விரைவில் நடத்துவோம் என்று கூறுகிறார்கள், இன்னொரு பகுதியினர் புதிய புதிய காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்போர் அரசாங்கத்துக்கு இடித்துரைத்து வருவதும், இராஜதந்தரிகளும், மற்றும் தலைவர்களும் தேர்தலை நடத்துங்கள் என எடுத்துக் கூறியும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காலத்தில் மகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படுமென்ற வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியிருந்தது.
ஆனால், அந்த வாக்குறுதிகள் மந்திரமாக உச்சரிக்கப்பட்டபோதும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைக்கப்பட்டு பல மாதங்கள் வருடமாக மாறியபோதும் தேர்தல் நடத்தப்படவுமில்லை,
நடத்தப்படுவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறவில்லை. அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் உடனடியாக நடத்தப்படுவதற்குரிய சாத்தியமில்லையென பகிரங்கமாக கூறிவருகிறார்கள் இவ்வாறு அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் மாகாணசபை தேர்தல் தொடர்பான முன்பின் முரணான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
மாகாண சபைகளின் ஆட்சிக்காலம்
மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து சுமார் 7 வருடங்கள் கழிந்து விட்டன. கிழக்கு மாகாணசபை, சப்ரகமுவ, மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பருடனும், வடக்கு மாகாணம், வட மேல் மாகாணம் மத்திய மாகாணங்களின் ஆட்சிக்காலம் 2018 ஏப்ரலுடனும், ஏனைய மாகாணங்களான, தென் மாகாணம் மேல் மாகாணம் ஊவா மாகாணத்தின் ஆட்சிக்காலம் 2019 செப்டெம்பருடனும் முடிவடைந்து விட்டது.
இது ஒரு புறமிருக்க, வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆட்சிப்பருவம் பல தடவைகள் நடந்தபோதும் வட மாகாண சபையின் ஆட்சி 2013 தொடக்கம் 2018 வரை ஒரு தடவை மட்டுமே ஆட்சி இடம் பெற்றிருக்கிறது.
அதுவும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வட மாகாண சபை தேர்தலை நடத்தியிருந்தார். இதேவேளை, இணைந்த மாகாணங்களாக இருந்த வடக்கு கிழக்கு 2006 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டும் 2012 ஆம் ஆண்டும் இரு தேர்தல்கள் கிழக்கில் நடத்தப்பட்டிருந்தது. இணைப்பை உச்ச நீதிமன்ற ஆணைப்படி பிரித்தெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர்.
மாகாணசபை தேர்தல் நடத்தப்படமைக்கான காரணங்கள்
13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். மேற்படி திருத்தத்தில் விததந்துரைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில்,
இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் போதுமானதல்ல என்ற விமர்சனங்களும், அந்த அதிகாரங்களை கொள்வதற்கான அழுத்தங்களும் அடிக்கடி முன்வைக்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் யாப்பை வரைவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதிலும் பல தடங்கல் கொண்டு வரப்பட்டு இடை நிறுத்தப்பட்டது.
இதேவேளை, மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சில சட்டச்சிக்கலகள்; உருவாகியிருந்தன. 2017 ஆண்டு மாகாணசபைத் தேர்தல் முறையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது.
1988 ஆம் ஆண்டிலிருந்து முற்று முழுதான வடிவமான விகிதாசார முறையில் நடத்துப்பட்டு வந்த மாகாண சபைத் தேர்தலை 50 வீதம் தொகுதி முறை கொண்டதாகவும், 50 வீதம் விகிதாசார முறையுடையதகவும் கலப்பு முறை கொண்ட தேர்தல் முறையாக மாற்றப்பட்டது.
இவ்வாறு மாற்றப்பட்டதற்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டபோது, இந்த எல்லை நிர்ணயம் முழுதாக சிறுபான்மையினரை பாதிக்கிறது என்ற காரணம் காட்டப்பட்டு, எல்லை நிர்ணய அறிக்கையை அனைத்து தரப்பினரும் ஏகமனதாக எதிர்த்ததன் நிமித்தம் புதியதொரு எல்லை நிர்ணயத்தை தயாரிக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
ஆனால், தயாரிப்பதற்கான முன்னெடுப்புகளை நல்லாட்சி அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை. 2018 ஆம் ஆண்டுக்குப்பின் நல்லாட்சி அரசாங்கத்தின் உள் நிலை முரண்பாடுகள் ஆட்சிக்கு தளம்பல் நிலையையும் தடுமாற்று நிலையையும் உண்டாக்கியிருந்தது.
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்புதான் தேர்தலை நடத்த முடியும்.
ஆனால், காலம் நீண்டதாக காணப்படுமென எடுத்துக் கூறப்பட்டது. மறுபுறம் பழைய முறையில் தேர்தலை நடத்துவதாயின் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டு இது சாதாரண வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டபின் தேர்தலை நடத்த முடியுமென சட்டவல்லுனர்கள் கூறினார்கள்.
2020 இல் கோட்டாபய ஆட்சியில் இந்த முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டபோதும் 2023 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனி நபர் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
பலர் இப்பிரேரணையை வரவேற்றபோதும் அரச தரப்பினர் ஆதரிப்பதற்கு தயாராகவிருக்கவில்லை.
இது கடந்து போனபோதும் பழைய முறையில் தேர்தலை நடத்த உதவியாக தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராச மாணிக்கம் சாணக்கியன் , ஒரு தனி நபர் பிரேரணையை 2025 ஆம் ஆண்டு கொண்டு வந்தபோதும் அதை நிறைவேற்ற பாராளுமன்றம் ஒத்துழைக்கவில்லை.
இதன் நிமித்தம் பழைய முறையா, புதிய முறையா என்ற பட்டி மன்ற விவாதம் நடத்தப்படுகிறதே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள மேற் கொள்ளப்படாமல் தட்டிக்கழிக்கும் போக்குக் கொண்டதாகவே தேசிய மக்கள் அரசாங்கம் நடந்து கொள்கிறது.
நடத்தப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கைகள்
மாகாணசபைத் தேர்தலை காலதாமதப்படுத்தாமல் விரைவில் நடத்துவோம் மக்களின் கையில் ஒப்படைப்போம் என வாக்குறுதி நல்கிய தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தல் நடைபெற்று பெற்று சுமார் 25 மாதங்கள் கடந்த நிலையலும் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
2026 முன் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடந்த ஜனவரி மத்தியில் கூறியிருந்தபோதும், அதற்கான முன் னெடுப்புக்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு தலைவரும் இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களையே முன்வைத்துவருகிறார்கள்.
உதாரணமாக, பிரதமர் ஹரணி அமர சூரிய 2026 ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன் தேர்தலை நடத்துவோம். தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணய அறிக்கை அரசு சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளது.

ரில்வின் சில்வா
ஆகவே அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறியிருந்தார். இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதமளவில் யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில் பழைய முறையில் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது.
புதிய முறைக்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு தேர்தலை நடத்துவது நன்று என்று கூறியது மட்டுமல்ல, மாகாண சபை முறைமையானது புதிய அரசியல் அமைப்பு நடை முறைக்கு வரும் வரை செயற்படும்.
13 ஆவது திருத்தத்தின் மூலம் முன் மொழியப்பட்ட மாகாணசபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியல் சாசனத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை கிடைக்கவும் வழிவகுப்போம் என கூறினார். இவரின் கருத்துப்படி மாகாணசபை முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர் எனத் தெரியவருகிறது.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைவாக மாகாணசபை முறைமையை கொண்டுவர எத்தனித்த சமயம், அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் பெரும் போராட்டத்தை நடத்தியதை மறந்துவிட முடியாது.
மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலை நடத்த நல்லாட்சி அரசாங்கமோ அதன்பின் கோட்டாபய அரசோ தொடாந்து ஆட்சியை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணிலோ முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தமிழ்தேசியப் பரப்பினர் பல அழுத்தங்களை நேரடியாகவும் இந்தியா மற்றும் இராஜதந்திரிகள் ஊடகவும் கொடுத்தபோதும், எதுவும் நடக்கவில்லை.
2022 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதி நிதிகள் தேர்தல் ஆணைக்குழுவைச் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தார்கள். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மே மாதமளவில் தேர்தலை இழுத்தடிக்காமல் பழைய முறையில் நடத்துவதற்காக ஒரு தனி நபர் பிரேரணையை பாராளுமன்றில் சுமந்திரன் கொண்டு வந்தார் இப்பிரேரணை திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டது.
மிக அண்மையில் (2026 ஜனவரி) தேசியப்பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகப் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெகுவிரைவில் மகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடு என தெரிவித்திருந்தார். இதே கருத்தை சுவிட்ஸர்லாந்து உயர் ஸ்தானிகர் சிறி வோல்ட்டும் வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து முதல் வெளிநாட்டுப்பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்ற வேளை (16.12.2024) பாரதப் பிரதமர் மோடி தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவும், அதேவேளை அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்தவும் வேண்டுமென நட்பு முறையில் பிரதமர் எடுத்துக் கூறியிருந்தபோதும், காரியம் கவனிக்கப்படவில்லை.
தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை (6.1.2026) அரசாங்கம் முன்வைத்துள்ளது. 12 பேர் கொண்ட இக்குழு தேர்தலை என்ன முறையில் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது.
மாகாணசபை தேர்தலை இழுத்தடிக்கும் தந்திரோபாயமாகவே விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியப்பரப்பிலுள்ள கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன.
மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கும் உபாயத்தில் அரசாங்கம் செயற்படுகிறது. இதை முறையடிப்பது எப்படி என தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசியக் கூட்டணியும் யாழ்ப்பாணத்தில் கூடி (16.1.2026) ஆராய்ந்துள்ளது. வாழையடி வாழையைப் போல் இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றுங் கைங்கரியத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் ஏமாற்றங்களே எஞ்சி நிற்கின்றன.
திருமலை நவம்

