மாநாட்டின் மிக முக்கியமான தருணமாக அமைந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகை. பொதுவாக அரசியல் மேடைகளில் சம்பிரதாயமாக நடக்கும் தலைவர்களுக்கு மத்தியில், இன்று முதல்வர் ஸ்டாலின் சற்றே வித்தியாசமான ரூட்டில் இறங்கினார்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியில் இன்று திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் திமுகவின் பலத்தை பறைசாற்றும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உற்சாகப்படுத்திய ‘ரேம்ப் வாக்’
மாநாட்டின் சிறப்பம்சமாக, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் தனது மாநாடுகளில் பின்பற்றும் பாணியைப் போல, தொண்டர்களுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட மேடையில் நடந்து சென்றார். இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞரணித் தொண்டர்களுக்கு கை அசைத்தும், வணக்கம் கூறியும் உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உறுதிமொழியைத் தெரிவித்தார்.
“நமது இலக்கு 200 தொகுதிகள். மீதமுள்ள 60 நாட்களில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் அனைவரும் அரசின் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மாநாட்டின் முக்கிய அம்சங்கள்:
தென் மண்டலத்தில் அதிமுக – டிடிவி தினகரன் கூட்டணி மீண்டும் வலுவடைந்து வரும் சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டிப் பைகள் (குடிநீர், ஜூஸ், கடலை மிட்டாய்) வழங்கப்பட்டன. மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மட்டன் பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாடு, தேர்தல் களத்தில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் திமுகவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


தென் மண்டல கழக இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கள வீரர்களாகக் குழுமி இருக்கும் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக விழா தொடங்கியது!


