‘பிரபாகரனின் வீடு சீரமைக்கப்பட்டு அவரது சகோதரிக்கு ஒப்படைக்கப்பட உள்ளது!’ என்ற தலைப்பு கடந்த வாரம் சகோதர மொழி நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. அந்தச் செய்தி சமூக ஊடகங்களில் தீயாய் பரவியது.
இதைவிட ஒரு படி மேலே சென்று மற்றொரு ஊடகம், ‘பிரபாகரனின் வீடு பொதுமக்கள் பார்வைக்காக மீளமைக்கப்பட உள்ளது’ என்று செய்தி வெளியிட்டது.
இச்செய்தி தொடர்பான பரபரப்பு அதிகரித்த நிலையில், முதன்முதலில் வெளியான செய்தி இணையத்தில் மெதுவாக மாற்றமடைந்து,
‘பிரபாகரனின் வீட்டை புதுப்பிப்பதற்கான வல்வெட்டி நகரசபையில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது!’ என்று பரவியது. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கி இருப்பதாக ஆதாரமற்ற செய்தி ஒன்று வெளியாகியது.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரிக்கு புனரமைக்கப்பட்ட கட்டடம் ஒப்படைக்கப்படும் என்ற கருத்தை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தியது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வல்வெட்டித்துறை நகரசபையின் திட்டத்தின் கீழ் நடக்கின்றன என்று குறிப்பிட்டு, அதன் பொறுப்பு முழுமையாக நகரசபைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீது சுமத்தப்பட்டது.
அவர் பிரபாகரனின் தூரத்து உறவினர் என்பதும் குறிப்பிடப்பட்டது. அந்த வீடு இன்றும் இருப்பது போல் தோன்றும் புகைப்படமும் செய்தியுடன் வெளியிடப்பட்டது.
ஒரு சிறிய தலைப்பாகத் தொடங்கிய செய்தி, விரைவில் ஊகங்களும், கோபமும், தவறான தகவல்களும் நிறைந்த புயலாக மாறியது.
அச்சு ஊடகத்தின் எல்லையைத் தாண்டி, கட்டுப்பாடற்ற சமூக ஊடக உலகில் நுழைந்தவுடன், ஒரு செய்தி எவ்வாறு தனக்கென ஒரு திரிபு நிறைந்த பரபரப்பை உருவாக்கிக் கொள்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்தது.
இந்த சிங்கள மொழி ஊடகச் செய்திகளின் தாக்கம், குறிப்பாக தென்னிலங்கையில் இணையத் தளங்கள் மூலம் பெரிதுபடுத்தப்பட்டு உடனடியாக வெளிப்பட்டது.
பல சந்தேகங்களையும் தகவல் வெற்றிடங்களையும் கொண்டிருந்த இந்தச் செய்திகளை, கவனமான வாசகன் கூட கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும்.
ஆனால், பிரதான ஊடகத்தில் வெளியான தலைப்புகள், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் எதிரொலிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர்களால் தீவிரமாகப் பகிரப்பட்டன.
நாட்டின் 78 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களுடன் நேரம் பொருந்தியதால், இந்தச் சர்ச்சை சிறிய விவகாரமாக இல்லாமல் பெரிதாக வெடித்தது.
“நாம் செய்த தியாகங்களின் அர்த்தம் என்ன? எல்லாம் வீணாகி விட்டதா?” என்று இலங்கை இராணுவத்தின் ஒரு மேஜர் ஜெனரல் கேள்வியெழுப்பினார்.
குறித்த செய்திகளை அவர் முழுமையாக நம்பியிருந்தார். அவற்றில் குறைந்தது இரண்டு செய்திகள், மூன்று தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதலில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளை அடிக்கடி நேர்காணும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் எழுதப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அதிகாரியின் குரலில் ஏமாற்றம் தெளிவாக தெரிந்தது. இதேவேளை, பொதுமக்கள் சமூக ஊடகங்களில் அரசைக் கடுமையாக விமர்சித்தனர்.பின்னர் தெரியவந்தது
என்னவெனில், இந்தக் கட்டுரைகள் பல தவறுகள், தவறான தகவல்கள், சில இடங்களில் வெளிப்படையான பொய்களால் நிரம்பியிருந்தன என்பதுதான்.
இது வடக்கு தொடர்பான செய்திகளைச் சரியாக கையாள முடியாத தென்னிலங்கை ஊடகங்களின் பழைய பலவீனமா? சரியான தகவல் சரிபார்ப்பு இல்லாமையா,? அல்லது திட்டமிட்ட தகவல் திரிபா? என்பது ஊகத்திற்குரியது.
.இந்தப் பின்னணியில், பல ஊடகங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரிவாக ஆராய வேண்டியது அவசியம். ஏனெனில், பத்திரிகையாளர்களுக்கும் பாரம்பரிய ஊடகங்களுக்கும் உண்மையைச் சரிபார்த்து, துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு உள்ளது. அந்தக் கடமையை சிலர் தவற விட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
சர்ச்சையின் மையத்தில் உள்ள வீடு:
இந்தச் சர்ச்சையின் மையத்தில் இருப்பது வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர் வீடு. வல்வெட்டித்துறை என்ற வடக்குக் கடற்கரை நகரில், ஆலடி லேன் என்ற அமைதியான குடியிருப்பு பகுதியில், ஐந்து பேர்ச் நிலப்பரப்பில் அமைந்திருந்த, ஒரு மாடி கொண்ட பாரம்பரிய வடக்கு வீடு அது.
இன்று ‘ரசிந்தன் மணல்’ என அழைக்கப்படும் அந்த நிலம், தற்போது இந்தியாவில் வசித்து வரும், 76 வயதான பிரபாகரனின் சகோதரி மதியாபரணம் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமானது.
பெற்றோரால் அவருக்கு சீதனமாக வழங்கப்பட்ட சொத்து அது. தற்போது, வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் நடராஜா ஆனந்தராஜ், அதிகாரப்பத்திரம் மூலம் அந்த நிலத்தை பராமரித்து வருகிறார். ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்களுக்கு மாறாக, பிரபாகரன் வளர்ந்த அந்த வீடு இன்று இல்லை.
1987 ஆம் ஆண்டு ஆயுத மோதலின்போது அது சேதமடைந்தது. அதற்கு முன்பே குடும்பம் அந்த இடத்தை விட்டு வெளியேறியது.
2010 ஏப்ரலில் வெளியான BBC தமிழ் செய்தியின்படி, அந்த வீடு பின்னர் முழுமையாக இராணுவத்தால் இடிக்கப்பட்டது.
இன்றைக்கு அங்கு வெறும் வெற்று நிலமும், ஒரு சுவர் துண்டும் மட்டுமே உள்ளன. அங்கு, பிரபாகரனின் 71 ஆவது பிறந்த நாளை வாழ்த்தும் ஒரு பதாகையும், பழைய வீட்டின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு பதாகையும் தொங்கவிடப்பட்டுள்ளன.
முன்மொழிவு என்ற பெயரில் பரவிய தவறான தகவல்:பெப்ரவரி 2 ஆம் திகதி, பிரபாகரனின் மூதாதையர் வீட்டை புதுப்பித்து அவரது சகோதரிக்கு ஒப்படைக்கும் முன்மொழிவு வல்வெட்டித்துறை நகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக பல ஊடகங்கள் கூறின.
ஆனால் உண்மை என்னவெனில், அது எந்த முன்மொழிவும் அல்ல. அது, நில உரிமையாளரான ஜெகதீஸ்வரியின் சார்பில் நடராஜா ஆனந்தராஜ் சமர்ப்பித்த ஒரு கட்டட அனுமதி விண்ணப்பம் மட்டுமே.
அதில், பழைய வீட்டை மீளமைக்க எந்த முயற்சியும் இல்லை. ஏனெனில், அந்த வீடு இன்று இல்லை. அதற்குப் பதிலாக, சமூகப் பயன்பாட்டுக்காக இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வாசிப்பு மண்டபமும் நூலகமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் பழைய வீட்டைப் போன்றதாக இருக்காது என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.சிவாஜிலிங்கம், தன்னிடம் கூறப்பட்டதாக வெளியான மேற்கோள்களை முற்றிலும் மறுத்தார்.
“அவை முழுமையாக தவறானவை. நான் எந்த முன்மொழிவையும் முன்வைக்கவில்லை” என்றார் அவர். நகரசபை பெற்ற விண்ணப்பத்தை நடைமுறைப்படி பரிசீலித்ததுதான் நடந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
வரிப்பண விவகாரம்:
இந்தத் திட்டம் வரிப்பணத்தால் மேற்கொள்ளப்படும் என்றும், பின்னர் ஜெகதீஸ்வரிக்கு ஒப்படைக்கப்படும் என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியது கோபத்தை மேலும் தூண்டியது.
ஆனால், நில உரிமையாளருக்கு நெருக்கமான வட்டாரம், இந்தக் கட்டடம் தனியார் செலவிலும் நன்கொடைகளாலும் மட்டுமே கட்டப்படும் என்றும், அரசுத் தொகை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியது.
நகரசபை உறுப்பினர் மயூரனும் இதை உறுதிப்படுத்தினார்.இந்தச் சம்பவத்தில் உண்மைகள் இப்போது தெளிவாகியிருந்தாலும், உண்மையான சேதம் அதைவிட ஆழமானது.
இத்தகைய செய்திகள், உண்மையைச் சரிபார்க்காமல், திட்டமிட்ட நோக்கங்களுக்காக பரப்பப்படும் போது, அது வெறும் தவறான தகவலாக மட்டுமல்ல சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையைச் சிதைக்கும், நல்லிணக்க முயற்சிகளை மேலும் கடினமாக்கும் செயலாகும்.

