பாகிஸ்தானுக்கு எதிரான போரில்  இந்தியா வென்ற பிறகு, பிரதமர் இந்திரா காந்தியின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.

அவரது ஆட்சியிலோ, விலைவாசி விண்ணை முட்டியது; பணவீக்கம் படுமோசமாக இருந்தது; வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது;

ஜெயப்பிரகாஷ் நாராயண்!

ஊழல் பெருக்கெடுத்தது. அதனால், இந்திரா காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. அந்தக் காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்திக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார், சோஷலிஸ்ட் தலைவரான `ஜே.பி’ எனப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண்!

ஜே.பி-யுடன் தி.மு.க நெருக்கம்!

1973, 1974 ஆகிய ஆண்டுகளில், குஜராத்திலும் பீகாரிலும் காங்கிரஸ் அரசுகளுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினர்.

அந்தப் போராட்டங்களுக்கு ஜே.பி வழிகாட்டினார். அதனால் ஆத்திரமடைந்த இந்திரா காந்தி, ‘ஃபாசிஸ்ட்’ என்று ஜே.பி-யை விமர்சித்தார்.

அப்படிப்பட்ட ஜே.பி-யுடன் கருணாநிதி நெருக்கம் காட்டினார்; ஜே.பி-யின் கருத்துகளை ஆதரித்துப் பேசினார்.

மாநில சுயாட்சித் தீர்மானம் கொண்டுவந்ததால், தி.மு.க-மீது அதிருப்தியில் இருந்த இந்திரா காந்திக்கு, ஜே.பி-யுடன் கருணாநிதி நெருங்கியது கோபத்தை அதிகரித்தது.

அந்த நேரத்தில், ஜே.பி-யை தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்தார் கருணாநிதி.

தி.மு.க அரசு சென்னையில் ராஜாஜிக்கு நினைவகம் எழுப்பியிருந்தது. அதைத் திறந்துவைக்க வருமாறு ஜே.பி-க்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

1975, மே 5-ம் தேதி ராஜாஜி நினைவகத்தை ஜே.பி திறந்துவைத்தார். தமிழகத்துக்கு ஜே.பி வந்து சென்ற ஒரு மாதத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்தத் தீர்ப்பு, ஒட்டுமொத்த தேசத்தையும் புரட்டிப்போட்டது.

1971 தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.

‘அந்தத் தேர்தலில் இந்திரா காந்தி முறைகேடு செய்தார்’ என்று அவரை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜ் நாராயண் வழக்கு தொடர்ந்தார்.

‘அந்த வழக்கில், இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் 1975, ஜூன் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

உடனே, ‘பிரதமர் பதவியை இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ‘பிரதமர் பதவியில் இந்திரா காந்தி நீடிக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் ஏதாவது வாக்கெடுப்பு நடைபெற்றால், அதில் அவர் பங்கேற்கக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கினார்.

அடுத்த சில மணி நேரத்தில், குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்தார் இந்திரா. நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது!

 

பேரம் நடத்திய இந்திரா!

நாடு முழுவதும் 1975, ஜூன் 25-ம் தேதி அவசரநிலை, பிரகடனம் செய்யப்பட்டது. உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி, பீகார், உத்தரப்பிரசேதம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் மோசமான சூழல் நிலவியது.

தமிழ்நாட்டில் ஏழு மாத காலம் ஜனநாயக உரிமைகளுக்குப் பெரிய அச்சுறுத்தல்கள் இல்லை.

அந்த நேரத்தில், அவசரநிலைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் தி.மு.க தொடர்ந்து குரல் எழுப்பியது.

பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் தொடர்ச்சியாக நடத்திவந்த தி.மு.க., அவசரநிலைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியது.

`அந்தத் தீர்மானங்களை வாபஸ் பெறுங்கள்… தி.மு.க ஆட்சியை ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கிறோம்’ என்று முதல்வர் கருணாநிதிக்கு தூது அனுப்பி, பேரம் நடத்தினார் இந்திரா. அதற்கு கருணாநிதி உடன்படவில்லை.

அதன் பிறகு, தி.மு.க தனது ஆட்சியையே பறிகொடுத்தது. 1976, ஜனவரி 31-ம் தேதி, கருணாநிதி அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினுக்குத் திருமணம் நடைபெற்று சில மாதங்களே ஆகியிருந்தன.

நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த ஸ்டாலின், ஒரு நாடகப் பயிற்சிக்காக மதுராந்தகத்துக்குச் சென்றிருந்தார்.

அந்த நேரத்தில்தான், தி.மு.க அரசு திடீரென கலைக்கப்பட்டது. அதைக் கேள்விப்பட்டு அவர் சென்னைக்குத் திரும்பினார்.

கி.வீரமணியின் அதிர்ச்சி!

பிப்ரவரி 1-ம் தேதி. ‘ஸ்டாலின் வந்துவிட்டார்’ என்று கருணாநிதியே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸ் வந்து ஸ்டாலினைக் கைதுசெய்தது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இரவு 12 மணி வரை வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினை, அதன் பிறகு சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதற்கு முன்பே, தி.மு.க-வின் பல முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தங்கள் தலைவரின் மகன் ஸ்டாலினை அங்கு கண்டதும், தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் எம்.ஆர்.ராதா உள்ளிட்டோரும் மிசாவில் கைதுசெய்யப்பட்டு அந்தச் சிறையில் இருந்தனர்.

கி.வீரமணி இருந்த அறையில் ஒரு நாள்…தொழுநோயாளிகளும், தூக்குத் தண்டனைக் கைதிகளும் அடைத்துவைக்கப்படும் எட்டுக்கு எட்டு அறையில் நாங்கள் பத்துப் பேர் அடைக்கப்பட்டிருந்தோம்.

உணவுக்கு, இயற்கை உபாதைகளுக்கு என ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே அறை திறக்கப்படும். ஒருநாள் திடீரென அறைக் கதவு திறக்கப்பட்டது.

சிறைக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஓர் இளைஞர் ரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே தூக்கி வீசப்பட்டார். என்மீது வந்து விழுந்த அந்த இளைஞரின் முகத்தைப் பார்த்தேன். எனக்குப் பேரதிர்ச்சி. அந்த இளைஞர் மு.க.ஸ்டாலின்.’ – அந்த அதிர்ச்சி அனுபவத்தை, பின்னாளில் கி.வீரமணி பல பேட்டிகளில் பதிவுசெய்திருக்கிறார்

எல்லாச் செய்திகளையும் அரசின் அனுமதி பெற்றுத்தான் பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என்ற நிலை இருந்தது.

அதனால், மிசாவில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரம் வெளியே தெரியவில்லை. அந்த நேரத்தில், அண்ணா நினைவு தினம் (பிப். 3) வந்தது. அமைதி ஊர்வலம் சென்று அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்தார் கருணாநிதி.

பிறகு, ‘மலர் வளையம் வைக்க இயலாதோர்’ என்று ஒரு பட்டியலை அவர் வெளியிட்டார். அதில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், சிட்டிபாபு உட்பட ஏராளமான பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் அனைவரும் மிசாவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சூசகமாக வெளியுலகுக்குத் தெரிவித்தார் கருணாநிதி.

‘நாங்கள் அரசியல் கைதிகள்!’

முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள்.

அதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர் தி.மு.க எம்.பி-யான சிட்டிபாபு. சிறைக்காவலர்கள் அடித்து நொறுக்கியதில் அவரது உயிரே போய்விட்டது.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சிறைக்குச் சென்ற அனுபவம் தி.மு.க-வினருக்கு இருந்தாலும், இந்த அளவுக்கான கொலைவெறித் தாக்குதல்களை மிசாவின் போதுதான் அவர்கள் எதிர்கொண்டனர்.

இந்த அனுபவம் அவர்களுக்கு மிக மிகக் கடினமாக இருந்தது.

அந்த நேரத்தில், சிறையில் அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட்டுகள் இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் சிவாஜி, தாம்பரம் முனுசாமி, சி.பி.தாமோதரன், ஹரிபட், து.ஜானகிராமன் உட்பட பலர் மிசாவில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை நேரடியாக அவர்கள் எதிர்த்தனர்.மிசா கைதிகளைச் சிறைக்காவலர்கள் தாக்கிய போதெல்லாம், ‘நாங்கள் அரசியல் கைதிகள். எங்களைக் குற்றவாளிகள்போல நடத்தக் கூடாது’ என்று சிறை அதிகாரிகளுடன் அவர்கள் கடுமையாகச் சண்டையிட்டனர்.

மேலும், சிறைக் கொடுமைகள் குறித்து அதிகாரிகளுக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். மார்க்சிஸ்ட்டுகளின் அந்த எதிர்ப்பு நடவடிக் கைகள் தி.மு.க-வினருக்கு ஆறுதலாக இருந்தன.

அ.தி.மு.க தேசியக் கட்சியாக..?

ஒருபுறம், காவல்துறையால் தி.மு.க-வினர் வேட்டையாடப்பட்டனர். இன்னொரு புறம், தி.மு.க-வுக்கு எதிரான ஊழல் புகார்களைத் தோண்டியெடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது இந்திரா காந்தி அரசு. எம்.ஜி.ஆர்., எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க அரசுமீதும், தி.மு.க அமைச்சர்கள்மீதும் ஊழல் குற்றச் சாட்டுகளைச் சுமத்தி அளித்த புகார் மனுக்களின் அடிப்படையில், சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது.

அப்போதுதான், ‘ஊழல் கட்சி’ என்ற முத்திரை தி.மு.க-மீது விழுந்தது.தி.மு.க-வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவசரநிலையைக் கடுமையாக எதிர்த்தன என்றால், அ.தி.மு.க-வும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவசரநிலையை ஆதரித்தன.

‘தி.மு.க அரசு கலைக்கப்பட்டது தைரியமான நடவடிக்கை’ என்று எம்.ஜி.ஆர் பாராட்டினார். ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒற்றை அரசியல் செயல் திட்டத்தை வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆர்வமோ, அக்கறையோ இருக்கவில்லை.

‘மாநிலக் கட்சிகளைத் தடைசெய்வது குறித்து பிரதமர் இந்திரா காந்தி ஆலோசித்துவருகிறார்’ என்று ஒரு தகவல் காற்றுவாக்கில் வந்தது. அதனால், எம்.ஜி.ஆர் அதிர்ச்சியடைந்தார்.

‘மாநிலக் கட்சியான அ.தி.மு.க-வைத் தடைசெய்துவிடுவார்களோ..?” என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. உடனே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிவிட்டார்.

அவசரநிலைக்கு ஆதரவு, தி.மு.க எதிர்ப்பு என்ற நிலைப்பாடுகள் எம்.ஜி.ஆருக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தந்தன. அது என்ன வெற்றி?

(இன்னும் அறிவோம்)

உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? -(தமிழக தேர்தல் வரலாறு-12)

 

Share.
Leave A Reply