பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பவுன்சர்களிடம் (Bouncer) பேசிய சேலம் த.வெ.க மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன், தளபதிக்காக வெயிலில் 6 மணி நேரம் உணவு, தண்ணீர் இன்றி உழைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பிப்.13-ம் தேதி சேலத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார். இதையொட்டி பவுன்சர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் த.வெ.க மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தல் வழங்கினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

த.வெ.க. கூட்டத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள நூற்றுக்கணக்கான பவுன்சர்களைச் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், வெயில்ல நிக்கணும்.. நிப்பியா? 5 மணி நேரம் இல்ல, 6 மணி நேரம் தளபதிக்காக நிக்கணும். தண்ணி குடிக்க முடியாது, சாப்பாடு சாப்பிட முடியாது.. ஸ்ட்ரென்தா இருப்பியா? என கேள்வி எழுப்ப, பவுன்சர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “நிப்போம்” என ஆக்ரோஷமாகப் பதிலளித்தனர்.

தொடர்ந்து பேசிய தமிழன் பார்த்திபன், “நமக்கு முக்கியம் மக்கள் பாதுகாப்பு. ஆர்வக்கோளாறால் பொதுமக்கள் தளபதியைப் பார்க்க மலை மீது ஏறக்கூடும்,

அவர்களைத் தடுத்துப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பணியின்போது தளபதியின் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது” எனத் தொழில்முறை ஒழுக்கத்தை வலியுறுத்தினார்.

மேலும், மருத்துவ உதவிக்காக 20 மருத்துவர்கள், 40 செவிலியர்கள், 10 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் ‘மக்கள் சந்திப்பு கூட்டமாக‘ நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், போதிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், போலீசார் 51 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க ‘மக்கள் சந்திப்பு’ என்பதற்குப் பதிலாக ‘நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்’ என மாற்றப்பட்டுள்ளது. பிப். 13 மதியம் 12:00 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 3:00 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் பரவாசுதேவன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்திற்கு வர முடியாத தொண்டர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் இந்நிகழ்ச்சி முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே, தொண்டர்கள் வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சியைக் காணலாம் என மாவட்டச் செயலாளர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Polimer News (@polimernews)

Share.
Leave A Reply