திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் – புத்தூரில் நடந்த சம்பவம் நம்மை உலுக்கும் அளவுக்கு மோசமானது, “பூஜை” என்ற பெயரில் 16 வயது சிறுமியை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அத்துமீறியதாக முராரி தந்திரி என அழைக்கப்படும் ராஜன் பாபு என்ற பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது அறையில் இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த “பூஜை அறை” உண்மையில் ஒரு பெட் ரூம் என்றும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த குழந்தை தனியாக அடைக்கப்பட்டிருந்தாள் என்றும் தாயின் எதிர்ப்பை கூட, குற்றவாளியின் மனைவியும் தாயும் சேர்ந்து சமாதானப்படுத்த முயன்றார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளா மாநிலம் கொல்லத்தை அடுத்த அரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் முராரி தந்த்ரி என்ற ராஜன் பாபு. இவருக்கு 54 வயது ஆகிறது.

பிரபல ஜோதிடர். இவரிடம் ஜோதிடம் பார்க்க சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அவரது ஜோதிட நிலையத்துக்கு வருவது வழக்கமாக உள்ளது.

அதுபோல சம்பவத்தன்று கொல்லம் புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் ராஜன் பாபுவிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், பேயை ஓட்ட மந்திரவாதம் நடத்தலாம் எனவும் கூறினாராம்.

இதை நம்பிய அந்த பெண் நேற்று முன்தினம் தனது மகளை ஜோதிடர் ராஜன் பாபுவின் ஜோதிட நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை மட்டும் ஜோதிடர் தனி அறைக்குள் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த சிறுமி வெளியே வராததால் சிறுமியின் தாய் அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கிறார்.

அப்போது அந்த சிறுமி அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மகளிடம் என்னவென்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி தன்னை பாலியல் ரீதியாக ஜோதிடர் அத்துமீற முயன்றதாக கூறினார். இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஜோதிட நிலையத்தை முற்றுகையிட்டனர்.

உடனே ஜோதிடர் ராஜன்பாபு ஜோதிட நிலையத்தின் பின்புறம் வழியாக தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன்பாபுவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பரணிக்காவு கோவிலில் வைத்து ராஜன்பாபுவை போலீசார் போக்சோ பிரிவில் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share.
Leave A Reply