எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான் என பெருந்தோட்ட மக்கள் தங்களது நெகிழ்ச்சியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நுவரெலியா – அட்டன் பிரதான வீதி நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தோட்டப்பகுதிக்கு சென்று அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி குறித்த தோட்டப்பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்கள் அவரை மிகவும் உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

தமக்கான சம்பளத்தை அதிகரித்தமைக்காக இதன்போது தொழிலாளர்கள் ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தொழிலாளர்கள், “எங்களது சம்பளத்தை உயர்த்தியது மட்டுமன்றி, எங்களது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்” எனத் தெரிவித்தனர். தங்களைச் சந்திக்க வந்த முதல் ஜனாதிபதி இவரே என அவர்கள் இதன்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

Share.
Leave A Reply