கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நடந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,
இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயதுடைய நபரை உள்ளூர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்பவர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்து கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்பளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.
ஜெஸ்ஸி வான் ரூட்செலரின் தாயார் (39 வயது) மற்றும் அவரது சகோதரர் (11 வயது) ஆகிய இருவர் பள்ளிக்கு அருகில் உள்ள வீட்டில் உயிரிழந்து கிடந்தனர்.
வான் ரூட்செலர் ஆணாகப் பிறந்தவர், ஆனால் அவர் ஒரு பெண்ணாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களில் 39 வயதுடைய பெண் ஆசிரியை, 12 வயதுடைய மூன்று மாணவிகள், 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவர்களும் அடங்குவர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வான் ரூட்செலர் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
வான் ரூட்செலர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டம்பளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியிலிருந்து விலகியதாக காவல்துறை தெரிவித்தது. வான் ரூட்செலர் முன்பு முறையான துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார், ஆனால் அது காலாவதியாகிவிட்டது என்றும் காவல்துறை கூறியது.
செவ்வாய்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி சுமார் 13:30 மணியளவில், டம்பளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களுக்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்,
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுப் பள்ளிக்குள் நுழைந்தனர் என்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) துணை ஆணையர் டுவைன் மெக்டொனால்ட் கூறினார்.
சில நிமிடங்களில் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடித்தனர், அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்து கிடந்தார்.
சம்பவ இடத்தில் ஒரு நீள துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகிய இரண்டு துப்பாக்கிகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
பின்னர், காவல்துறை பின்னர் பள்ளி வளாகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட இருவர் விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.
டம்பளர் ரிட்ஜ் பகுதியில் சுமார் 2,400 மக்கள் வசிக்கின்றனர். அதன் மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 12ஆம் வகுப்பு வரை 160 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் ‘தங்கள் உயிருக்காகப் போராடி வருகின்றனர்’ என தெரிவித்தார்.
டம்பளர் ரிட்ஜ் மேயர் டேரில் கிரகோவ்கா சிபிசி (CBC) செய்தி முகமையிடம் பேசுகையில், “நான் இங்கு 19 ஆண்டுகளாக இருக்கிறேன்,
நாங்கள் ஒரு சிறிய சமூகம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் எனக்குத் தெரியும்.நான் அவர்களைக் பொது மக்கள் என்று அழைக்க மாட்டேன். அவர்களை எனது குடும்பம் என்றே அழைப்பேன்” எனக் கூறினார்

