சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு இன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது.

5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் இந்த நிகழ்விற்கு காவல்துறையின் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அனுமதிச் சீட்டு பெறாத கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “என்னை வீட்டை விட்டு வெளியே வா, பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள்.

அவர்களுக்கு என் வீடு எது, எங்கு இருக்கிறது என தெரியுமா? தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் மொத்தம் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள். அனைவரும் என் உறவு, என் சொந்தம்” எனக் கூறினார்.

“நான் வாக்குகள் கேட்டு மட்டும் வரவில்லை நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்காக நீதி கேட்க வந்தேன், இப்போது உங்களிடம் நீதி கேட்டு நிற்கிறேன். மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி மற்றும் இடம் கொடுப்பார்கள்,

ஆனால் நமக்கு கொடுக்க மறுக்கிறார்கள், கொடுக்கவும் விடமாட்டார்கள். அனுமதி கேட்டால் நமக்கு மட்டும் ஸ்டாலின் சார் வழிகாட்டு நெறிமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அப்படி இருந்தால் போராட்டங்கள் ஏன் நடக்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடியும் என கேட்கிறார்கள். பணத்தை கொள்ளையடிப்பதை தவிர அவர்களுக்கு வேறு அனுபவம் இருக்கிறதா?. கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை” என்று பேசினார்.

Share.
Leave A Reply