கேரள மாநிலம் கோழிக்கோட்டில், வாகன நெரிசலைத் தவிர்க்க நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரை தடுத்து நிறுத்திய பிரபாவதி அம்மாளின் துணிச்சலுக்கு கேரள மோட்டார் வாகனத் துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
நடைபாதையில் வாகனத்தை ஓட்டிய நபரை தடுத்து நிறுத்திய பிரபாவதி அம்மாளின் துணிச்சலுக்கு கேரள மோட்டார் வாகனத் துறை பாராட்டு தெரிவித்தது.
விதிமீறிய ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
நெரிசல் மிகுந்த சாலைகளில், விரைவாக செல்ல இருசக்கர வாகன ஓட்டிகள் நடைபாதையில் ஓட்டிச்செல்வதை அன்றாடம் நாம் கடந்து செல்கிறோம். அவ்வாறு தான், சமீபத்தில் கேரள மாநிலம் எரஞ்சிபாலம் பகுதியில் சாலை நெரிசலை தவிர்க்க ஒருவர் நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.
அப்போது, எதிரே மூதாட்டி ஒருவர் ”நடைபாதை என்பது நடப்பதற்கு” என்ற வகையில் வாகனத்தை தடுத்து நிறுத்தி சாலையில் செல்லுமாறு கூறினார்.
ஆனாலும், இருசக்கரத்தை ஓட்டி வந்த நபர் தொடர்ந்து முன்செல்ல முயன்றபோது, அந்த மூதாட்டி தனது செல்போன் மூலம் படம் பிடிக்க முயன்றார்.
இதையடுத்து, அந்த இருசக்கர வாகன ஓட்டி திரும்பி சாலைக்கே சென்றார். இந்த சம்பவத்தை தூரத்தில் ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது.
An elderly woman in Kozhikode, Kerala, bravely stopped a scooty rider from misusing the footpath and sent him back to the road.
Her civic sense and determination truly deserve appreciation. pic.twitter.com/f5XEo52l7n— MN (@NizzUtd) February 12, 2026
இதையடுத்து, மூதாட்டியின் துணிச்சலை சமூக ஊடகங்களில் பலரும் பாரட்டி வந்தனர். மேலும், துணிச்சல் மிகுந்த அந்த மூதாட்டி யார்? என கேரளா முழுவதும் தேடிய நிலையில், அவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபாவதி அம்மாள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கேரள மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கே சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்துள்ளனர்.
அதேசமயம், நடைபாதையில் வாகனத்தை இயக்கி விதிமீறலில் ஈடுபட்ட நபரின் ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகன நெரிசலை தவிர்க்க ஆபத்தை உணராமல் நடைபாதையில் வண்டியோட்டிய நபரை எவ்வித பயமுமின்றி எதிர்த்துகேள்வி கேட்ட பிரபாவதி அம்மாளின் செயல் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

