வேலைக்காரி, ஓர் இரவு போன்ற படங்களின் மூலம் அண்ணா ஆரம்பித்து வைத்த பரப்புரை பாதையைத் திராவிட கொள்கை பரப்புக்கான ராஜபாட்டையாக மாற்றிக்கொண்டவர் கருணாநிதி.

எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்குக் கருணாநிதி எழுதிய வசனங்கள் ஒரு முக்கிய காரணம்.

அதிமுகவை தொடங்குவதற்கு முன்னர் எம்ஜிஆர் திமுகவில் முக்கிய அங்கம் வகிக்காமல் வெற்றிகரமான நடிகராக மட்டுமே இருந்திருந்து கட்சி தொடங்கியிருந்தால் அரசியல் வெற்றி சாத்தியப்பட்டிருக்குமா?

எம்ஜிஆரின் அரசியல் வெற்றியில் சினிமா கவர்ச்சியின் பங்கு என்ன ?

அவருக்கு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த அல்லது நுழைய முயன்ற நடிகர்களால் அவர் அடைந்த வெற்றியை தொட முடியாமல் போனதன் காரணங்கள் என்ன ?

வருங்காலத்தில் ஒரு சினிமா நடிகரின் அரசியல் வெற்றிவாய்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் ?

எனும் கேள்விகளுக்கு,

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் அரசியல் ஆருடங்கள் அலசப்பட்டு கொண்டிருக்கும் சூழலில்,

எம்ஜிஆரின் அரசியல் எழுச்சியையும் வெற்றியையும் அடிப்படையாக கொண்டு விடைகள் தேடும் முயற்சியே இந்த குறுந்தொடர்.


எம்ஜிஆர் – அண்ணா

அமைச்சர்கள் தங்களின் சொத்து கணக்குகளை கட்சியின் பொதுக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என எம்ஜிஆர் பேசியதை காரணமாக்கி, 1972ம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே அதிமுக எனும் புதிய கட்சியை தொடங்குகிறார் எம்ஜிஆர்.

அதற்கு அடுத்த வருடம் வெளியாகும் அவரது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அன்றைய திமுக அரசினால் பல்வேறு தடைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறது.

அதே வருடம் திண்டுக்கல் தொகுதி எம்.பி.யான திமுக-வைச் சேர்ந்த ராஜாங்கம் மரணமடைய, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அந்த தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றிபெறுகிறார்.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைத்த பல்வேறு சின்னங்களில் ஒன்றான இரட்டை இலையை தேர்வு செய்து, வெற்றிக்குறியாக தோன்றும் இரட்டை இலை சின்னத்தை மக்களிடையே எளிதாக கொண்டு சேர்க்கவும் முடியும் என எம்ஜிஆரை சம்மதிக்க செய்தவர் இந்த மாயத்தேவர் தான் !

திண்டுக்கல் இடைத்தேர்தலில் தொடங்கி தமிழகம் முழுவதையும் ஆக்கிரமித்தது எம்ஜிஆரின் வசீகரம் ! 1973ம் ஆண்டில் எம்ஜிஆர் எனும் வசீகரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு தோன்றிய அதிமுகவை எம்ஜிஆர் இருந்த வரையிலும் ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க முடியவில்லை !

அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவை தன் இரும்புப்பிடிக்குள் கொண்டு வந்த ஜெயலலிதா புரட்சி தலைவருக்கு மாற்றாக, புரட்சி தலைவி என தன்னையே முன்னிறுத்திக்கொண்டு எம்ஜிஆரை முழுவதுமாக இருட்டடிப்பு செய்தார்.

அதிமுக எனும் கட்சியின் மேல்மட்டத்தில் எம்ஜிஆர் பிம்பம் திட்டமிட்டு மறைக்கப்பட்டாலும் பாமர மக்களுக்கு இரட்டை இலை என்றாலே வெள்ளைத்தொப்பி கறுப்பு கண்ணாடி சகிதம் சிரிக்கும் எம்ஜிஆர் தான் !

எம்ஜிஆர் எனும் பொதுவெளி பிம்பத்தின் மீதான பாமர மக்களின் ஈர்ப்பு இன்னும் மிச்சமிருக்கும் அதே வேலையில் அவரது நிழல் திமுகவை மட்டுமல்லாமல் அவர் தோற்றுவித்த அதிமுகவையும் சேர்த்தே இன்று வரையிலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

சினிமாவின் வாயிலாக மற்றுமொரு எம்ஜிஆர் உருவாகிவிடக்கூடாது என்ற பயம் இந்த இரண்டு திராவிட கட்சிகளிடமும் நிரந்தரமாகவே குடிகொண்டுவிட்டது !

இந்த பயத்தின் விளைவாக, சமூக அக்கறையை அதிகம் வெளிப்படுத்தும் உச்ச நடிகர்கள் ஆளும் வர்க்கத்தின் கோப பார்வைக்கு உள்ளாவதும்,

ஆளும் கட்சியின் அரசியலைச் சாடும் அவர்களின் படங்கள் பல்வேறு திட்டமிட்ட சிக்கல்களைச் சந்திப்பதும் தமிழ் நாட்டில் சகஜமாகிவிட்டாலும் 1973ம் ஆண்டின் அரசியல் ரசவாதம் மீண்டும் ஒரு முறை அரங்கேறவில்லை.

ஆனாலும், மீண்டும் ஒரு நட்சத்திரம் நாடாளும் என்பது பாமர எதிர்பார்ப்பு என்பதையும் தாண்டி, தமிழக ஊடகங்களின் ஆருடங்களாகவும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது !

2019-ம் ஆண்டு பிகில் ரிலீஸ்.

திராவிட அரசியலும் தமிழ் சினிமாவும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விலக்கிவிட்டு மற்றொன்டின் வரலாற்றை எழுத இயலாது.

சினிமா எனும் ஊடகத்தைத் திராவிட இயக்கம் தன் வளர்ச்சிக்கான பரப்புரை சாதனமாக பயன்படுத்திக்கொண்ட அளவுக்கு உலகின் வேறெந்த அரசியல் இயக்கமும் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.

வேலைக்காரி, ஓர் இரவு போன்ற படங்களின் மூலம் அண்ணா ஆரம்பித்து வைத்த பரப்புரை பாதையைத் திராவிட கொள்கை பரப்புக்கான ராஜபாட்டையாக மாற்றிக்கொண்டவர் கருணாநிதி. எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்குக் கருணாநிதி எழுதிய வசனங்கள் ஒரு முக்கிய காரணம்.

அண்ணாவின் அரவணைப்பில் அடைக்கலமானதிலிருந்தே தன் அரசியல் வளர்ச்சிக்கான பாதையை வெகு துல்லியமாகக் கணக்கிட்டு வளர்ந்த கருணாநிதியின் முதல் சறுக்கலாக அமைந்தது எம்ஜிஆரின் எழுச்சி.

எம்ஜிஆர் தமிழ் நாட்டு அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் ஆழமானது மட்டுமல்லாது தனித்துவமானது. அவரது அரசியல் ஆசான்களான காமராஜர், பெரியார், அண்ணா போன்றவர்கள் கொள்கைகளை முன்னிறுத்தி வளர்ந்த சூழலில், வள்ளல் குணம், ஏழைப் பங்காளன் போன்ற தனிமனித விழுமியங்களின் மீது மிகக் கவனமாக கட்டமைக்கப்பட்ட தனது சொந்த பொதுவெளி பிம்பத்தை கொள்கைகளுக்கு ஈடாக முன்னிறுத்தி வெற்றிகண்டவர்

எம்ஜிஆர் – சிவாஜி

அவரது தாய்க்கழகமான திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களை அந்த இயக்கத்தின் வழிவந்த கட்சிகளே மறந்துவிட்ட நிகழ்காலத்திலும், திராவிட கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலிலும் எம்ஜிஆர் எனும் பிம்பத்தின் கவர்ச்சி குறையவில்லை.

அந்த பிம்பம் இன்றுவரையிலும் விமர்சனத்துக்கு அப்பால்தான் இருந்துவருகிறது ! இத்தனைக்கும் எம்ஜிஆரின் டூயட் பாடல்களில் கவர்ச்சி கொடிகட்டிப் பறந்தது !

கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்த பேச்சுகள் உடனடி கண்டனங்களையும் விமர்சனங்களையும் சந்தித்த அதே காலகட்டத்தில், அதே திராவிட வழி வந்த எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு திராவிட சித்தாந்தங்களை பற்றியெல்லாம் பெரிதாக பேசாதது பெரிய வாதங்கள் எதையும் எழுப்பவில்லை.

இருவரது தனிப்பட்ட வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட, கருணாநிதி விமர்சிக்கப்பட்ட அளவுக்கு எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுமக்களிடையே பெரிதாக விவாதிக்கப்படவில்லை !

அதே எம்ஜிஆர் திமுகவில் இல்லாதிருந்தால் தான் கட்டமைத்த தன்னுடைய அப்பழுக்கற்ற பொதுவெளி பிம்பத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியலில் வென்றிருக்க முடியுமா ? எம்ஜிஆரின் அரசியல் வெற்றியில் திமுகவின் பங்கு என்ன ? ஆகிய கேள்விகளுக்கான விடையை தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் நடுநிலையோடும் யதார்த்த அரசியல் கண்ணோட்டத்தோடும் அன்றைய அரசியல் நிகழ்வுகளை அலச வேண்டியது முக்கியம்.

கருணாநிதி, எம்ஜிஆர்

எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்ததற்கு கருணாநிதி அவரை திமுகவிலிருந்து நீக்கியதே முக்கிய மூல காரணமாக முன்வைக்கப்படுகிறது. இதுவே தமிழ்நாட்டின் வெகுஜன கருத்தாகவும் இருந்து வருகிறது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக,

“அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்கு தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்ஜிஆருக்கு இருந்ததில்லை.

சினிமாவில் தன் ஆதிக்கம் போய்விடக் கூடாது, அரசியலில் தன் பிடி நழுவிவிடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட அவர் விரும்பவில்லை. ஆனால் அவரை வலுக்கட்டாயமாக ஒரு தலைவராக்கியது கருணாநிதிதான்.”

என கண்ணதாசன், அவர் எழுதிய ‘நான் பார்த்த அரசியல்’ நூலில் கூறியிருப்பதை குறிப்பிடலாம்.

எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட காரணமாக இருந்த பேச்சு ஏற்கனவே முழுவதும் நிரம்பியிருந்த குவளையை வழிய வைக்க காரணமாகிப் போன கடைசி துளிதான்.

ஒரே கட்சியில் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் அன்றைய கருணாநிதி, எம்ஜிஆர் எனும் இருபெரும் பிரபல ஆளுமைகளுக்கிடையே பல பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் அன்றைய பத்திரிக்கைகள் அவ்வப்போது எழுதியிருக்கின்றன.

எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்ததற்கு கருணாநிதி ஒரு முக்கிய காரணம் என்பது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதோ அதே அளவுக்கு,

“அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்கு தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்ஜிஆருக்கு இருந்ததில்லை.”

எனும் கருத்தும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டிய ஒன்று!

இதை விவாதிக்க, கருணாநிதி எம்ஜிஆர் ஆகிய இருபெரும் சினிமா மற்றும் அரசியல் ஆளுமைகளை உளவியல் ரீதியாக அணுக வேண்டும் !

– தொடரும்

காரை அக்பர்

Share.
Leave A Reply