இலங்கையின் அரசியல் பரப்பில் மாகாண சபைத் தேர்தல் என்பது நீண்டகாலமாக இழுபறியில் இருக்கும் ஒரு முக்கிய விடயமாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தேர்தலுக்கான அறிகுறி தென்படவில்லை என்ற விமர்சனம் தற்போது வலுத்துள்ளது.
குறிப்பாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுஜீவ சேனசிங்க, மற்றும் நாமல் ராஜபக்ஷ போன்ற எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளனர்.

விஜயதாச ராஜபக்ஷ
புதிய அரசியலமைப்பு ஒரு கனவா?
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கருத்துப்படி, இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு என்பது வெறும் கனவு மாத்திரமே.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவது போன்ற வாக்குறுதிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தபோதிலும், அதற்கான ஆரம்பகட்ட பிரேரணைகள் கூட இன்னும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த கால ஆவணங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறினாலும், நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். அரசியலமைப்பு மாற்றம் என்ற போர்வையில் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தட்டிக்கழிக்கிறதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கட்சிகளின் வகிபாகம் குறித்த விமர்சனம்
மாகாணசபைத் தேர்தல் தாமதத்துக்கு அரசாங்கம் மட்டுமல்லாது, தமிழ் தேசியக் கட்சிகளும் ஒரு காரணம் என விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு தேர்தல் முறைமையை மாற்றியமைக்க இந்தக் கட்சிகள் ஆதரவு வழங்கியதே இன்றைய இழுபறிக்கு அடிப்படை என்பது அவரது குற்றச்சாட்டாகவுள்ளது. இருப்பினும், சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற பிரதிநிதிகள் தேர்தலுக்காகக் குரல் கொடுத்து வரும் நிலையிலும், அவர்கள் போதுமான அளவு அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
டில்வின் சில்வாவின் இந்திய விஜயமும் இராஜதந்திர அழுத்தமும்
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தற்போது இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயம், மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் மிக முக்கியமானது.
இலங்கையின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளைச் செயற்படுத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, டில்வின் சில்வா குழுவினர் இந்தியா சென்றிருப்பது, தேர்தல் தொடர்பான இராஜதந்திர அழுத்தங்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிடுவது போல, இந்தியாவின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இந்தியாவிற்கானதாகும். இதன் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டது.
அதற்கமைய இந்தியப் பிரதமர் மோடி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆனால் 13ஆவது திருத்தத்தை நேரடியாகக் குறிப்பிடாமலேயே இது வலியுறுத்தப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நீண்டகாலமாக காலந்தாழ்த்தப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது என உறுதியளித்த அதேவேளை, அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வதாகவும் மோடி முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மாகாணசபைத் தேர்தல் முறைமையை ஆரம்பகாலத்தில் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தற்போது அரசாங்கத்தின் பிரதான அங்கமாக மாறியுள்ள நிலையில், டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரின் இந்திய விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜே.வி.பி. நீண்டகாலமாக மாகாணசபை முறைமையை ‘வெள்ளை யானை’ எனக் கூறி விமர்சித்து வந்தது.
ஆனால், இந்தியாவுடனான சந்திப்புகளின் போது, அதிகாரப் பகிர்வு மற்றும் தேர்தல் தொடர்பான இந்தியாவின் கரிசனைகளை அவர்கள் செவிமடுத்தனர். 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதும், தேர்தலை நடத்துவதும் ஜனநாயக ரீதியில் அவசியம் என்பதை இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
13ஆவது திருத்தமும் பிரக்ஞைபூர்வமான மௌனமும்
இந்திய விஜயங்களின் போது இரு தரப்புக்களும் ’13ஆவது திருத்தம்’ என்ற சொல்லை நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து,
‘அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்தல்’ மற்றும் ‘மாகாணசபைத் தேர்தல்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்தின. இது தேசிய மக்கள் சக்திக்கு உள்ளுர் அரசியலில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் குறைக்க இந்தியா வழங்கிய ஒரு இராஜதந்திர சலுகையாகவும் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த மாகாணசபைத் தேர்தல் ஒரு முக்கியமான மைல்கல். இதனை இனியும் தாமதிக்கக் கூடாது என்பதே இலங்கை தமிழர்களின் நலன் விரும்பிகளின் வலியுறுத்தலாகவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் சவாலும் மக்கள் ஆணை குறித்த அச்சமும்
அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்குப் பின்னால் ‘மக்கள் ஆதரவு குறைந்துவிடும்’ என்ற அச்சம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுஜீவ சேனசிங்க, அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால், நினைத்தால் அடுத்த வாரமே பிரேரணையை கொண்டு வந்து தேர்தலை நடத்தலாம் என்றும், நாமால் ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும் அரசாங்கம்,
ஏன் தேர்தல் தெரிவுக்குழுவுக்குத் தமது பிரதிநிதிகளின் பெயர்களை வழங்காமல் இழுத்தடிக்கிறது? என்றும் கேள்விகளைத் தொடுத்துள்ளதோடு முடிந்தால் 6 மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறும் சவால் விடுத்துள்ளனர்.
அரசாங்கம் எதிர்நோக்கும் இக்கட்டான நிலை
இந்த விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது ஒரு நெருக்கடியில் உள்ளது. தேர்தலை நடத்தினால் ஏற்படும் முடிவுகள் அரசாங்கத்தின் செல்வாக்கைச் சோதிக்கும் களமாக அமையும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் நிலைப்பாடாகவுள்ளது.
பழைய தேர்தல் முறைமையா அல்லது புதிய முறைமையா என்ற இழுபறி இன்னும் தீர்க்கப்படவில்லை. அதேவேளை குறிப்பாக இந்தியாவின் 13ஆவது திருத்தம் தொடர்பான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருகின்றது.
மாகாணசபைத் தேர்தல் என்பது வெறும் நிர்வாக ரீதியான தேர்தல் மட்டுமல்ல ; அது இலங்கையின் அதிகாரப் பகிர்வு மற்றும் ஜனநாயக உரிமையின் அடையாளமாகும்.
விஜயதாச ராஜபக்ஷ கூறுவது போல புதிய அரசியலமைப்பு என்பது வெறும் கனவாகவே இருக்குமானால், குறைந்தபட்சம் தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் தேர்தலையாவது நடத்த வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பலமான கூட்டணியை நோக்கி நகரும் வேளையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இயலாமை என்ற விமர்சனத்தைத் துடைக்க வேண்டுமானால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான துணிச்சலான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
(எம்.மனோசித்ரா)

