– பிரபாகரன் யாழ். நகரைத் தன் கிடுக்குப் பிடியில் வைத்திருப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
– இந்திய அரசு மிகவும் காத்திரமான விதத்தில் தலையிட்டது. இந்திய விமானம் இலங்கை விமான எல்லைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளை போட்டதாகும்
……………………………………………….
கடந்த பகுதி -2 இல் பீல்;ட் மார்சல் சரத் பொன்சேகா ராணுவ மேற் படிப்பிற்காக பங்களாதேஸ் சென்றிருந்ததாக பார்த்தோம்.
கூடவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலமை மோசமாக மாறிச் செல்வதும், குறிப்பாக வட பகுதியின் தலை நகரமான யாழ். நகரத்திற்குள் ராணுவம் நுழைய முடியாத நிலையில் புறநகரங்களில் காத்திருக்க வைக்கப்பட்ட நிலை கொழும்பிலுள்ள அரசியல்வாதிகள் மத்தியில் அமைதியற்ற நிலை காணப்பட்டதாகவும் பார்த்தோம்.
அரசியல் தலைமைகள் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுமாறு ராணுவத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகித்த நிலையில் பாரிய தாக்குதலைத் தொடுப்பதே முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
ஆனால் அதற்கான பலமான நம்பிக்கை குறைவாகவே இருந்தது. யாழ். நகரைக் கைப்பற்றுவது என்பது மிகவும் திட்டமிட்டுச் செயற்பட வேண்டிய செயலாகும்.
ஆனால் அவ்வாறான மிகவும் சிக்கல் நிறைந்த செயலை நிறைவேற்றும் நிலையில் ராணுவம் இருக்கவில்லை. அவ் வேளையில் ராணுவத்தின் பலம் கிட்டத்தட்ட 2௦,௦௦௦ ஆயிரத்தை கொண்டிருந்;தது.
அவற்றில் 5 பட்டாலியன்களே போருக்குத் தயார் நிலையிலிருந்தன.
ராணுவம் இவ்வாறான நெருக்கடிக்குள் இருக்கையில் பிரபாகரன் யாழ். நகரைத் தன் கிடுக்குப் பிடியில் வைத்திருப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
அது அவருக்கு பல விதங்களில் தந்திரோபாய செயற்பாடுகளுக்கு உதவுவதாக அமைந்தது. ராணுவத்தினர் யாழ். குடா நாட்டின் வட கிழக்குப் பகுதியை இலக்கு வைத்தே தமது நகர்வுகளைத் திட்டமிட்டனர்.
அதாவது வடமராட்சிப் பகுதி என்பது குடா நாட்டின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. இத் தாக்குதலுக்கு “விடுதலைக்கான செயற்பாடு” (Operation Liberation ) பெயரிடப்பட்டது. இருப்பினும் காலப் போக்கில் “ வடமராட்சியின் விடுதலை” என அழைக்கப்பட்டது.
இப் போர்த் திட்டம் அரசியல் தலைமைகளுக்குத் தவறாக புரியப்பட்டிருந்தது. அதாவது பிரபாகரன் வடமராட்சியில் பதுங்கி இருப்பதாகவும், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கான பெரும் தாக்குதல் எனவும், இதனை மையமாக வைத்து பெரும் ஊடகவழிப் பிரச்சாரங்கள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் சரத் பொன்சேகாவின் கருத்துப்படி அங்கு 50 இற்குக் குறைவான போராளிகளே அப் பகுதியிலிருப்பதாக கருதினார். அங்கு சிறிய ரக ஆயுதங்களும், நிலக் கண்ணி வெடிகளுமே அவர்களிடம் இருந்தன.

வடமராட்சித் தாக்குதல்கள் (1987 ஆம் ஆண்டு மே 26 1987 – ஜூன் 1987) நடைபெற்றது.
இத் தாக்குதலுக்கான திட்டங்கள் கொழும்புத் தலைமையகத்தில் உள்ள மிக உயர்ந்த தரத்திலுள்ள ராணுவ அதிகாரிகளாலேயே திட்டமிடப்பட்டது.
கிட்டத்தட்ட 6௦௦ ராணுவத்தினரைக் கொண்ட இரண்டு பட்டாலியன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இன்னொரு மூன்றாவது பட்டாலியன் ஒரு வகை ஏமாற்றும் படைப்பிரிவாக தோற்றுவிக்கப்பட்டது.
தொண்டமனாற்றின் மேற்குப் புறமாக பலாலி படைத் தளத்திலிருந்து இரண்டு படைப் பிரிவுகளும் வடமராட்சியை நோக்கிப் புறப்பட்டன. எதிரிகளை ஏமாற்றும் பிரிவு யாழ். நகரத்தை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டது.
இந்த இரு படைப் பிரிவுகளுக்கும் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவ அதிகாரிகளே தலைமை தாங்கினர்.
இந்த இரு ராணுவ அதிகாரிகளும் பின்னாளில் சுமார் 5 ஆண்டுகளின் பின்னர் ஊர்காவற்றுறையில் நிலக் கண்ணி வெடியில் அகப்பட்டு இறந்தனர்.
இந்த இரு அதிகாரிகளின் கீழ் சரத் பொன்சேகா பல தாக்குதல்களின் போது பணி புரிந்துள்ளார்.
வடமராட்சி தாக்குதலுக்கான தினத்தன்று அதிகாலைக்கு முன்னதாகவே இரண்டு படைப் பிரிவுகளும் தொண்டமனாறு ஏரியைக் கடந்து மேற்கு முனையைச் சென்றடைந்தன.
இருட்டு வேளையில் படைகளை நகர்த்தியதால் அதிகளவு எதிர்ப்புகள் இருக்கவில்லை.
விடிந்த வேளையில் முன்னேறிச் செல்லும் போது ராணுவம் பல நிலக் கண்ணிவெடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
அவற்றை ராணுவம் கடந்து செல்லும் வேளையில் விடுதலைப் புலிகள் சரமாரியான தாக்குதலை நடத்தி பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார்கள்.
சுமார் 30 நிமிட நேர தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகள் பின்வாங்கினார்கள். நமது தரப்பில் 30 வீரர்கள் மரணமடைந்ததோடு, 60 பேர் படுகாயமடைந்தனர்.
இது போரின் ஆரம்பக் கட்டமாக இருந்த நிலையில் இவ்வளவு பெருந் தொகையான இழப்பு ராணுவத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால் ஏற்பட்ட தாக்கங்களே ராணுவத்தினரை ஈழப் போர் 4 வரை தொடர்ந்து போரிடும் ஆற்றலைக் கொடுத்தது.
இந்த இழப்பினைத் தொடர்ந்து அடுத்த 72 மணி நேரங்கள் வடமராட்சியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
அப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர்.
ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த உளவுத் தகவல்கள் ராணுவத்திற்கு அதிகளவில் கிடைத்தன.
சில தகவல்கள் பொய்யானவையாக இருந்த போதிலும் தவிர்க்க முடியாமல் பரிசோதிக்க வேண்டியிருந்தது.
சில வீடுகளுக்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்கள் காரணமாக சிலரின் வீடுகள் முற்றாகவே அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இத் தாக்குதலுக்கான விலையை அப் பகுதி மக்களே கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இக் காலப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் மிகவும் தவறானவை அவை ராணுவ தேவை என்பதை விட அரசியல் தேவை கருதி மேற்கொள்ளப்பட்டது என்பது சரத் பொன்சேகாவின் கருத்தாகும்.
அதாவது இத் தாக்குதலுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தேசிய தலைமைகளைத் தவறாக வழி நடத்தியது.
இது தேவையற்ற அளவிற்கு பொது மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தது. இதில் மிகவும் பிரச்சனையாக அமைந்த விடயம் எதுவெனில் பாக்குநீரிணைக்கு அப்பால் தமிழ் நாட்டில் தோற்றம் பெற்ற அழுத்தங்கள் இந்திய அரசைத் தலையீடு செய்யும் நிலைக்குத் தள்ளியமையாகும்.

பூமாலை நடவடிக்கை
இந்திய அரசு மிகவும் காத்திரமான விதத்தில் தலையிட்டது. இந்திய விமானம் இலங்கை விமான எல்லைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளை போட்டதாகும்.
நியூ டெல்கி தாக்குதல்களை நிறுத்தும்படி எச்சரித்தது. வேறு ராஜதந்திர வழிமுறைகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு தாக்குதல்களை( Operation Liberation ) நிறுத்தியது.
இந்த நிலமைகளை சரத் பொன்சேகா பின்னாளில் ராஜதந்திரத் தோல்வி என வர்ணித்தார்.
இந்திய அழுத்தங்கள் இலங்கையின் இறைமையை விட்டுக் கொடுத்ததாக அமைந்தது. இது ஈழப் போரின் 1 இன் முடிவை அடையாளப்படுத்தியது.
இதன் விளைவாக இந்தியாவுடன் பிரச்சனைக்குரிய “புரிந்துணர்வு ஒப்பந்தம்” ஒன்றில் கைச்சாத்திடுவதற்குத் தள்ளப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம்
சில வாரங்களுக்குள்ளாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியப் படைகள் வடக்கிலும், கிழக்கிலும் தரையிறங்கின. சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் வந்த அப் பயணம் மிக விரைவாகவே முறுகல் நிலைக்குச் சென்றது.
இம் மாற்றங்கள் தெற்கில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பொது மக்கள் மத்தியில் பொங்கிய கோப உணர்வுகள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஜனாதிபதி மாளிகை வருகைச் சம்பவங்கள் நன்கு உணர்த்தின.
வழமை போலவே ராணுவ அணிவகுப்பைப் பார்வையிடச் சென்ற போது எதிர்பாராத விதமாக இலங்கை கடற்படைப் பிரிவின் படைவீரர் தனது துப்பாக்கி முனையினால் அவரைத் தாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இது மக்கள் மத்தியில் காணப்பட்ட வெறுப்புப் போலவே ஆயுதப் படைகளிலும் காணப்பட்ட வெறுப்பினை அடையாளப்படுத்தியது.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை – இந்திய அமுலாக்கம் தொடர்ந்தது. இந்திய சமாதானப் படைகள் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டன.
இந்த நடவடிக்கை என்பது இம் முரண்பாட்டினை இன்னொரு நிலைக்கு அதாவது பயங்காரவாத எதிர்ப்பு என்ற பரிமாண கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
ஆரம்பத்தில் இந்திய சமாதானப் படைகளின் வருகை என்பது சமாதானத்தை உறுதி செய்யும் நோக்கைக் கொண்டிருந்தது. ஆனால் அவை பின்னால் முற்றிலும் வேறு திசையை நோக்கிச் சென்றது.
வாசகர்களே!
எமது அடுத்த பகுதியில் இந்திய சமாதானப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றிய வரலாற்றினைப் பார்க்கலாம்.
தொடரும்…..
தொடரும்……….‘இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்
மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்;
தொடர்புடைய செய்திகள்


