சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 5700 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். கைதிகள் ஈராக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த கைதிகள் இடமாற்ற நடவடிக்கை 23 நாட்கள் இடம்பெற்றதாகவும் 5,700 க்கும் மேற்பட்ட வயது வந்த ஆண் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை சிரியாவில் உள்ள தடுப்பு மையங்களிலிருந்து ஈராக்கிய காவலுக்கு கொண்டு வநதுள்ளதாகவும் அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈராக்கின் சர்வதேச நீதித்துறை ஒத்துழைப்புக்கான தேசிய மையம், 61 நாடுகளைச் சேர்ந்த 5,704 ஐ.எஸ்.ஐ.எல் கைதிகள் ஈராக்கிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அவர்களில் 3,543 சிரியர்கள், 467 ஈராக்கியர்கள் மற்றும் பிற அரபு நாடுகளைச் சேர்ந்த 710 கைதிகள் அடங்குவர்.
அத்தோடு ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 980 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் உள்ளனர். ஈராக்கின் நீதித்துறை, கைதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவர்களை விசாரிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

