”இது ஒப்பந்தமல்ல. சமமானவர்கள் ஒரு மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உருவாக்குவதுதான் ஒப்பந்தம்.
தலையில் துப்பாக்கியைவைத்து ஓர் ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முடியாது… அப்படிச் செய்தால் அது பிளாக்மெயில்… அது சரண்டர்” என அமெரிக்காவுடனான மத்திய அரசின் வர்த்தக ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சிக்கிறது காங்கிரஸ் கட்சி.
மத்திய அமைச்சர்களோ, ``இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனை” என்று மெச்சி, பிரதமர் மோடிக்குப் பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த ஒப்பந்தம் சாதனையா… சரண்டரா?
ஒப்பந்த `முன்வடிவின்’ ஹைலைட்ஸ்!
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் ஏற்றுமதிக்கு 25% வரியை விதித்து, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை இந்தியா ஊக்குவிப்பதாகச் சொல்லி மேலும் 25% வரியை விதித்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த 50% வரி விதிப்பால், இந்திய ஏற்றுமதித்துறை இறக்கம் கண்டது. இந்திய அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளில், கடந்த வாரம்தான் முடிவு எட்டப்பட்டது.
அதன்படி `இடைக்கால’ வர்த்தக ஒப்பந்தத்தின் `முன்வடிவு’ வெளியிடப்பட்டது. இதில், “இந்தியாமீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரியானது, இனி 18%-ஆகக் குறைக்கப்படுகிறது.
பொது மருந்துகள், வைரம், விமான பாகங்கள் உள்ளிட்ட இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விலக்கு அளிக்கும். அமெரிக்காவின் அனைத்துத் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள், வேளாண் பொருள்களுக்கு இந்தியா வரிகளை நீக்கும் அல்லது வெகுவாகக் குறைக்கும்.
அமெரிக்காவிடமிருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்கிக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டி ருக்கிறது.
இது இடைக்கால ஒப்பந்தம்தான். இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக வர்த்தக ஒப்பந்தம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவிடம் இனி அதிக அளவில் எண்ணெய் வாங்கவும் இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப்.
ஆனால், அது பற்றிய எந்தத் தகவலும் இந்தக் கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை.</
கொந்தளிக்கும் காங்கிரஸ்… கொண்டாடும் பா.ஜ.க
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 ட்ரில்லியன் டாலர் (ரூ.2.7 லட்சம் கோடி) மதிப்பிலான சந்தை வாய்ப்பைத் திறக்கும்.
புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்திய விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டமும் ஒப்பந்தத்தில் இடம்பெறாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், விவசாயிகளின் கூட்டமைப்பான `சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக, “அமெரிக்காவின் மானியம் பெற்ற விவசாயப் பொருள்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தால், நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்துவிடும்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்’’ எனக் கொதித்திருக்கிறது.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருள்களுக்கு 0% வரி. ஆனால், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருள்களுக்கு 18% வரி. இது எப்படி கொண்டாட்டத்துக்குரிய வெற்றியாகும்…
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது இந்தியப் பொருள்களுக்கு 3 சதவிகிதத்துக்கும் குறைவான வரியே விதிக்கப்பட்டிருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்
“எப்ஸ்டீன் ஃபைல்ஸுக்கு பயந்து…’
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூரிடம் பேசினோம். “இது Trade Deal அல்ல… Trap Deal. அமெரிக்கா வைத்த பொறியில் சிக்கியதால், பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ட்ரம்ப்பிடம் அப்பட்டமாக சரண்டர் ஆகிவிட்டார் மோடி. `அமெரிக்காவிடமிருந்து என்னென்ன பொருள்களை வாங்க வேண்டும்?’ என்பதை இந்தியாதான் முடிவுசெய்ய வேண்டும்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தின் முன்வடிவில், இந்தியாவுக்கு அமெரிக்கா என்னென்ன பொருள்களெல்லாம் ஏற்றுமதி செய்யும் என்பதை அமெரிக்காவே முடிவுசெய்து சொல்லியிருக்கிறது.
அமெரிக்காவிடமிருந்து இந்தியா தற்போது வரை ஆண்டுக்கு 39 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களையே வாங்கிவருகிறது.
ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டிருக் கிறார்கள்.
அமெரிக்காவுக்கான சந்தையாக இந்தியாவை மாற்றி, இங்கிருக்கும் தொழில்துறைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்த ஒப்புக் கொண்டிருக்கிறது அரசு.
அதேபோல, அமெரிக்காவின் விவசாயப் பொருள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட்டு, இந்திய விவசாயிகளின் முதுகில் குத்தியிருக்கிறது மோடி அரசு.
ட்ரம்ப்பிடம் மோடி சரணடைந்ததற்குக் காரணம் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்தான். பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயர்கள் சர்ச்சைக்குரிய வகையில் அமெரிக்கப் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
`எப்ஸ்டீன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசிவிடுமோ…’ என்ற அச்சத்தில்தான், நாடாளுமன்றத்தைத் திட்டமிட்டே மத்திய அரசு முடக்கிக் கொண்டிருக்கிறது” என்றார் மாணிக்கம் தாகூர்

விக்ரம் மிஸ்ரி
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “சரியான விலையில், நம்பகமான ஆதாரங்களி லிருந்து இந்திய மக்களுக்கு எரிசக்தி கிடைப்பதை உறுதிசெய்வதே அரசின் இலக்கு.
இந்தியா எண்ணெய் தேவைக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை. எதிர்காலத்திலும் அப்படிச் செய்யாது” எனக் குழப்பியடித்தார்.
`காங்கிரஸ் கருத்தைப் புறந்தள்ளுங்கள்..!’
பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, “பொருளாதார விமர்சகர்கள், தொழில் முனைவோர் என அனைவருமே இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் எப்போதும்போல அரசியல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறது. அவர்களது கருத்தைப் புறந்தள்ளுங்கள்” என்றவரிடம், “இந்தியப் பொருள்களுக்கு 18% வரி, அமெரிக்கப் பொருள்களுக்கு 0்% வரி அல்லது மிகக் குறைந்த வரி என்பது எப்படிச் சரியாக இருக்கும்?”என்ற கேள்வியை முன்வைத்தோம்.
அதற்கு, “இதற்கு முன்பாக வரி எப்படி இருந்தது… இப்போது எப்படி இருக்கிறது… என்பதையெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக விமர்சனம் வைப்பது தவறு.
அமெரிக்காவின் பரஸ்பர வரியால் பாதிக்கப்பட்டவர்களே, இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார்.
இந்தியாவுக்குத் தளர்வு… வங்கதேசத்துக்குச் சலுகை
`இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. வளர்ந்த வல்லரசான அமெரிக்கா, வல்லரசை நோக்கிப் பயணிக்கும் இந்தியாவை வஞ்சிக்கும் வகையிலான ஒப்பந்தம் இது’ என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி விவசாய சங்கத்தினரும், அரசியல் விமர்சகர்களும் முன்வைத்தனர்.
கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இடைக்கால ஒப்பந்த அறிவிப்பில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது அமெரிக்கா.
அதன்படி, `அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் பொருள்களுக்கு இந்தியா வரித் தளர்வு அளிக்கும்’ என்ற அம்சம் நீக்கப்பட்டிருக்கிறது.
மேலும், `அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை இந்தியா வாங்கவிருக்கிறது’ எனத் திட்டவட்டமாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது, தற்போது `அமெரிக்காவிடமிருந்து இந்தியா பொருள்களை வாங்க உத்தேசித்திருக்கிறது’ என்று மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய அறிவிப்பு சற்று ஆறுதலாக அமைந்திருக்கும் நிலையில், வங்கதேசத்துக்கான பரஸ்பர வரியைக் குறைத்து, இந்தியாவுக்கு மேலும் தலைவலியை அதிகரித்திருக்கிறது
அமெரிக்கா. முதலில், வங்கதேசத்துக்கு 37% வரியை பரஸ்பர வரியாக விதித்திருந்த ட்ரம்ப், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 20%-ஆகக் குறைத்தார்.
தற்போது அந்த வரி 19%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், `அமெரிக்காவின் பருத்தி, நூல்கள் உள்ளிட்ட மூலப்பொருள்களைக் கொண்டு வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருள்களுக்கு அமெரிக்காவில் 0% வரி’ என்றும் வங்கதேசத்துடனான ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உலகச் சந்தையில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இந்திய ஐவுளித்துறை உற்பத்தியாளர்களுக்குக் கடும் போட்டியாக இருந்தது வங்கதேசம்தான்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்திருக்கிறது.
அமெரிக்கச் சந்தையில் வங்கதேச ஐவுளிப் பொருள்களே இனி ஆதிக்கம் செலுத்தும் என்பது ஓர் இடி என்றால், மூலப்பொருள்களை அமெரிக்காவிடமிருந்தே வாங்க வேண்டும் என்பது மற்றொரு பேரிடி.
ஆடை உற்பத்திக்காக நூல் தேவையில், சுமார் 80 சதவிகிதத்தை இந்தியா வசமிருந்தே இறக்குமதி செய்துகொண்டிருந்தது வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியானவுடனேயே, இந்திய ஆடை, பருத்தி உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் வெகுவாகச் சரிந்தன.
மீண்டும், இந்திய ஜவுளித்துறையிலிருந்து கோரிக்கைகள் குவிய, மத்திய அரசோ, என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கிறது.
இந்தியாவுடனான ஒப்பந்தம் பற்றி ட்ரம்ப் அறிவித்தவுடன், அவருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமை மிகவும் முக்கியமானது.
அமைதிக்கான அவரது முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
`பிரதமர் மோடி, தனது `விஸ்வகுரு’ பட்டத்தை ட்ரம்ப்பிடம் கொடுத்துவிட்டாரோ?!’ என்ற சந்தேகத்தைத்தான் அவரது பதிவும், இந்த இடைக்கால ஒப்பந்தமும் கிளப்புகின்றன.

