நீண்ட காலமாக கொலை செய்து வந்த காதலியை கொலைசெய்துவிட்டு, பயத்தில் காதலியின் ஆவியுடன் பேச முயற்சித்து காதலன் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bizarre Crime News In India: காதலர்களுக்கு இடையே சண்டை என்றால் முன்பெல்லாம் இரண்டு, மூன்று நாள்கள் பேசாமல் இருப்பார்கள், சில வாரங்களுக்கு பார்க்காமல் இருப்பார்கள்,
அதிகபட்சம் காதலை பிரேக்-அப் செய்துவிட்டு செல்வார்கள். ஆனால் சமீப காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் காதலர்கள், நீண்ட நாள்களாக காதலிப்பவர்கள் சிலர் தற்போதொல்லாம் கொலை வரை செல்கிறார்கள்.
நாடு முழுவதும் இதுபோன்ற குற்றங்களை அதிகமாக காணமுடிவது பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தூரில் நடந்த கொலை
அந்த வகையில், மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில், 24 வயது காதலியை, அவளின் காதலன் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்.
கொலை செய்து தப்பிச் சென்றது மட்டுமின்றி, சில நாள்களுக்கு பின் காதலியின் ஆவியுடன் பேசுவதற்கும் அந்த காதலன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த வினோத சம்பவத்தின் முழு பின்னணியையும் இங்கு காணலாம்.
வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்
இந்தூரில் உள்ள துவர்காபுரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்.13ஆம் தேதி அன்று ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து வீட்டை சோதனையிட்டபோது, படுக்கையறையின் மெத்தையில் பெண் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்ட தகவலின்படி, அந்த பெண்ணின் கழுத்தில் தெரிந்த தழும்புகள், காயங்களின்படி அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
மேலும், கொலை செய்யப்பட்டு பல நாள்களாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. கொலையான அந்த பெண் எம்பிஏ மாணவி ஆவார்.
கொலை சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு பியூஷ் தாம்நோடியா என்பவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. பியூஷ் அந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததாகவும் கூறப்படுகிறது.
பிப்.11இல் காணாமல் போன பெண்
இச்சம்பவம் குறித்து போலீசாரின் தகவலின்படி, கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கொலையான மாணவியின் தந்தை போலீசாரிடம், தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனது மகளை பிப். 11ஆம் தேதி காலையில் கலெக்டர் அலுவலகத்தின் பக்கத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும், மாலையில் அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த மாணவியை தேடி உள்ளனர். விசாரணை ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, பிப்.13ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மாணவியின் சடலத்தை போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர். காணாமல் போன அந்த பெண்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
மும்பையில் காதலன் கைது
உடனே இந்த வழக்கின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது பியூஷ் பெயரில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாடகைக்கு எடுக்கப்பட்டதை அறிந்து, பியூஷை தேடி உள்ளனர்.
அப்போது அவர் தலைமறைவாகி மும்பைக்கு தப்பிச் சென்றிருக்கிறார். மும்பையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பியூஷிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் வேறொரு ஆணுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு, தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இதுதான் இருவருக்குள்ளும் பிரச்னை வர காரணம் என கூறப்படுகிறது.
கழுத்தை நெறித்து கொலை
சம்பவம் நடந்த அன்று, பிரச்னையை பேசித் தீர்க்கவே இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு வாக்குவாதம் கைக்கலப்பாக மாறி உள்ளது. கோபத்தில் பியூஷ் அந்த பெண்ணின் காலை கயிற்றால் இறுக்கமாக கட்டிவிட்டு, சத்தம் வராமல் இருக்க வாயில் பிளாஸ்டிக்கை திணித்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
கொலை நடந்த பின் அந்த வீட்டில் பியூஷ் சில மணிநேரம் இருந்துள்ளார். உயிரிழந்த பின், பெண்ணின் உடலுடன் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார், பக்கத்தில் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார், அந்த பெண்ணின் வயிற்றில் கத்தியால் பலமுறை குத்தி உள்ளார். கொலை செய்த பின்னரும் கொடூரமாக நடந்துள்ளார்.
காதலியின் ஆவியுடன் பேச முயற்சி
மகாராஷ்டிராவின் பான்வெல் நகருக்கு சென்றிருக்கிறார், அங்கு ஒரு ஹோட்டல் அறையில் தங்கி உள்ளார். தொடர்ந்து, யூ-ட்யூப் மற்றும் இணையத்தில் ஆவியுடன் பேசுவது எப்படி என்பது குறித்து பியூஷ் தேடியிருக்கிறார்.
தொடர்ந்து, அவர் தங்கிய அந்த அறையில் சில மாந்திரீக சடங்குகளில் ஈடுபட்டிருக்கிறார், அதாவது கொலையான பெண்ணின் ஆவியுடன் பேச பியூஷ் முயற்சி செய்துள்ளார். அந்த பெண்ணை கொலை செய்த பின் மனரீதியாக பியூஷ் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என கூறப்படுகிறது.
சந்தேகத்தால் வந்த விளைவு
அதன்பின் அங்கிருந்து மும்பைக்கு சென்றிருக்கிறார். ஆரம்பத்தில் கொலையான பெண்ணின் மொபைலை பியூஷ் தன்னுடனே கொண்டுசென்றிருக்கிறார்,
மகாராஷ்டிராவில் அதை அழித்திருக்கிறார். அந்த பெண் மொபைல் செயலி ஒன்றில் இன்னொரு ஆணுடன் பேசிப் பழகுவதாக பியூஷிற்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
பியூஷின் சந்தேக புத்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாகவே அவர்களின் உறவுக்குள் பிரச்னையும் வெடித்திருக்கிறது. பியூஷ் கைதாகி தற்போது விசாரணையில் உள்ளார்.
ஆபாச வீடியோவை காட்டி மிரட்டலா?
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது மகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவியதால், தனது மகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரின் தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், கொலை செய்த பியூஷ் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி, அவனது கல்லூரி கட்டணத்தை அவளை கட்டச் சொல்லியதாகவும் பெண்ணின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார். இதில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் நிலையில், போலீசாரின் அடுத்த கட்ட தகவல்களில் கொலைக்கான காரணம் உறுதியாக தெரியவரும் என கூறப்படுகிறது.
கொலையாளி சொன்ன பதில்
தொடர்ந்து கைது செய்யப்பட்ட பின் போலீசார் அழைத்துச் செல்லும்போது, கொலையாளி பியூஷிடம் எதற்கு இந்த கொலையை செய்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு சற்றும் தயங்காமல், “அனைத்தையும் மறந்தவிடுங்கள், என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துவிட்டது. தெரிந்துகொண்டு நீ என்ன செய்யப்போகிறீர்கள்…?” என எதிர்கேள்விக்கேட்டிருக்கிறார்,
பியூஷ். தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்ப, “நேரம் வரும்போது அனைத்தையும் சொல்கிறேன்” என கூறியிருக்கிறார் பியூஷ்.

