,1977 மக்களவைத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்ததால், மகிழ்ச்சிக் கடலில் நீந்திக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
தி.மு.க-வுக்குள் கலகம் வெடித்து, நெடுஞ்செழியன், சி.பா.ஆதித்தனார், செ.மாதவன், க.ராசாராம், ப.உ.சண்முகம் உள்ளிட்டோர் புதுக்கட்சி தொடங்கியதும் எம்.ஜி.ஆருக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது!
அதிரடி அணி மாற்றங்கள்
அடுத்த மூன்று மாதங்களில், தமிழக சட்டமன்றத் தேர்தலும் வந்து சேர்ந்தது. ஜூன் 12, 14 தேதிகளில் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தத் தேர்தல்தான், தமிழ்நாட்டின் புதிய அரசியல் வரலாற்றையே எழுதியது. முந்தைய நான்கு சட்டமன்றத் தேர்தல்களில், ‘காங்கிரஸ் Vs தி.மு.க’ என்றுதான் களம் இருந்தது.
இந்தத் தேர்தலில், ‘அ.தி.மு.க Vs தி.மு.க’ எனக் களம் மாறியது ‘நாம்தான் அடுத்த முதல்வர்’ என்ற கனவுடன் எம்.ஜி.ஆர் களமிறங்கினார்.
மக்களவைத் தேர்தலைப்போலவே, சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க இந்திரா காந்தி விரும்பினார்.
ஆனால், ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்று எம்.ஜி.ஆர் முடிவெடுத்தார். காரணம் மத்தியில் காங்கிரஸ், ஆட்சியை இழந்திருந்தது. மேலும், அதிகமான இடங்களை அது எதிர்பார்த்தது.
அந்த நேரத்தில், அணி மாற்றம் குறித்த யோசனையில் சி.பி.எம் இருந்தது. ‘1967-க்குப் பிறகு, தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த `கீழ்வெண்மணி’ சம்பவம்… அதில் தி.மு.க அரசின் அணுகுமுறை, விம்கோ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் எழுந்த பிரச்னைகள்… அவற்றில் தி.மு.க அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகள்… தொழிலாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு, அடக்குமுறை என்ற சூழலில் கடுமையான தி.மு.க எதிர்ப்பு நிலையை சி.பி.எம் கையாண்டது.
ஆனால், அவசரநிலைக் கொடுமைகள் சி.பி.எம் கட்சியையும், தி.மு.க-வையும் இணைத்தன. அவசரநிலைக்குப் பிறகு வந்த மக்களவைத் தேர்தல், ‘ஜனநாயகமா… சர்வாதிகாரமா?’ என்ற கேள்வியை முன்வைத்தது.
ஆகவே, அவசரநிலையை எதிர்த்த தி.மு.க-வுடன் சி.பி.எம் கூட்டணிவைத்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் என்பது மாநிலப் பிரச்னைகளை முன்வைத்து நடைபெறுவது.
அதைக் கணக்கில்கொள்ள வேண்டும் என்று சி.பி.எம் நினைத்தது. மேலும், மக்களவைத் தேர்தலில் இரு இடங்களை மட்டுமே தி.மு.க ஒதுக்கியது என்ற கசப்பும் மார்க்சிஸ்ட்டுகளிடம் இருந்தது. எனவே, ‘தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம்’ என்ற முடிவை சி.பி.எம் எடுத்தது.
அ.தி.மு.க., சி.பி.எம் இடையே கூட்டணி உருவானது.
மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சிக்கு, தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க விருப்பமில்லை. தனித்துப் போட்டியிட்டது ஜனதா கட்சி.
அதனால் மணலி கந்தசாமி தலைமையிலான ‘தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி’யுடன் தி.மு.க கூட்டணிவைத்தது.
இந்திரா காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஆக, நான்குமுனைப் போட்டி நிலவியது.
ஐந்தாண்டுகளில் ஆட்சி
மொத்தம் 234 தொகுதிகள். 200 இடங்களில் அ.தி.மு.க., 20 இடங்களில் சி.பி.எம் போட்டியிட்டன. உசிலம்பட்டியில் ஃபார்வர்டு பிளாக் வேட்பாளர் மூக்கையா தேவர்,
வாணியம்பாடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் லத்தீப், சாத்தான்குளத்தில் சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட சிலருக்கு அ.தி.மு.க ஆதரவளித்தது.
தி.மு.க 230 இடங்களில் போட்டியிட்டது. ஜனதா கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திரா காங்கிரஸ் 198 இடங்களிலும், சி.பி.ஐ 32 இடங்களிலும் போட்டியிட்டன.
‘அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு’ என்கிற முடிவை நெடுஞ்செழியனைப் பொதுச்செயலாளராகக் கொண்டிருந்த ‘மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்’ எடுத்தது.
கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பிரசாரத்தில் இறங்கியதும், களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. தி.மு.க-வுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் அடுக்கினார்.
எமர்ஜென்சி கொடுமைகளைப் பட்டியலிட்ட கருணாநிதி, தி.மு.க அரசின் ஒன்பதாண்டுக்காலச் சாதனைகளை முன்வைத்தார்.
வாக்குப் பதிவு முடிந்து, ஜூன் 15-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. 130 இடங்களில் அ.தி.மு.க ஜெயித்தது. கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றினார் எம்.ஜி.ஆர்.
தி.மு.க தோற்றது என்றாலும், அது ஒரு ‘வெற்றிகரமான தோல்வி’ என்றே தி.மு.க-வினர் கருதினர். ஏனெனில், எமர்ஜென்சி பாதிப்புகள், சர்க்காரியா கமிஷனின் அழுத்தங்கள், கட்சியில் உடைப்பு என நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருந்த வேளையில், 48 இடங்களை தி.மு.க வென்றது எளிதானதல்ல.
குறிப்பாக, தலைநகர் சென்னையை தி.மு.க கைப்பற்றியது. ராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளை தி.மு.க பிடித்தது.
ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.க வசப்படுத்தியது.
அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆரும், அண்ணாநகரில் கருணாநிதியும் வெற்றிபெற்றனர். சி.பி.ஐ 5 இடங்களிலும், சி.பி.எம் 12 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 27 இடங்களிலும், ஜனதா கட்சி 10 இடங்களிலும் ஜெயித்தன.
காத்திருந்த எம்.என்.நம்பியார்

அ.தி.மு.க ஜெயித்தவுடன், ‘சினிமா கவர்ச்சிக்கு மக்கள் ஏமாந்துவிட்டனர்’ என்று தி.மு.க விமர்சித்தது. ஜூன் 15-ம் தேதி முதல்வர் நாற்காலி எம்.ஜி.ஆருக்குத் தயாராகிவிட்டது.
ஆனால், உடனடியாக அவரால் பதவியேற்க இயலவில்லை. காரணம், வாஹினி ஸ்டுடியோவில் ‘மீனவ நண்பன்’ செட் தயாராக இருந்தது.
மழையில் நனைந்தபடி எம்.ஜி.ஆருடன் சண்டை போடுவதற்கு எம்.என்.நம்பியார் காத்துக்கொண்டிருந்தார்.
‘அண்ணே… மழை சீன் வேண்டாம். நீங்க பதவியேற்கணும். ஜலதோஷம், காய்ச்சல் வந்துடப்போகுது’ என்று பயந்தார் இயக்குநர் தர். ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்தவாறு நம்பியாருடன் உற்சாகமாகச் சண்டை போட்டார் எம்.ஜி.ஆர்.
ஒருவழியாக `மீனவ நண்பனை’ முடித்துக்கொடுத்தார். அடுத்ததாக, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்துக்கான வேலைகள் பாக்கியிருந்தன. அதுதான் எம்.ஜி.ஆரின் கடைசிப் படம்.
அந்த வேலைகளில் அவர் பிஸியாகிவிட்டார். பட வேலைகள் முடிந்து, ஜூன் 30-ம் தேதி பதவியேற்புக்கு எம்.ஜி.ஆர் தயாரானார். அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி மண்டபத்தில் பதவியேற்பு விழா. அண்ணா சாலையிலும், வாலாஜா சாலையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள்.
முதல்வராகப் பதவியேற்றவுடன், மக்களைச் சந்திக்க அண்ணா சிலைக்கு வந்தார் எம்.ஜி.ஆர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, ‘இந்த வெற்றி என் வெற்றி அல்ல. இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன். உங்களுக்காகவே பாடுபடுவேன்.
இது உங்கள் ஆட்சி’ என்று முழங்கினார்.
நாஞ்சில் மனோகரன் (நிதி), பண்ருட்டி ராமச்சந்திரன் (பொதுப்பணி), ஆர்.எம்.வீரப்பன் (செய்தி, பொதுமக்கள் தொடர்பு), அரங்கநாயகம் (கல்வி), கா.காளிமுத்து (உள்ளாட்சி), ராகவானந்தம் (தொழிலாளர் நலம்), பொன்னையன் (போக்குவரத்து) உட்பட 14 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
கருணாநிதி தர மறுத்த ‘மெடிக்கல் மினிஸ்டர்’ (சுகாதாரத்துறை) பதவியைத் தன் வசமே வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.
இலங்கைப் பிரச்னை தீவிரம்
எம்.ஜி.ஆர் ஆட்சி தொடங்கியது. இன்னொரு புறம், 48 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட தி.மு.க-வின் தலைவரான கருணாநிதி, மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்வது,
கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவது என்று தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. அது, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இலங்கைத் தமிழர் விவகாரத்தைக் கையிலெடுத்தார் கருணாநிதி.
‘இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும், சென்னையில் கடையடைப்பு நடைபெறும்’ என்று தி.மு.க அறிவித்தது.
தி.மு.க நடத்திய பேரணியில் தி.க-வினரும் கலந்துகொண்டனர். பேரணியும் கடையடைப்பும் வெற்றிகரமாக நடைபெற்றன.
அத்துடன், ‘இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும்’ என்று பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார் கருணாநிதி.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க-வும் நினைத்தது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திரா வருகை… தி.மு.க ‘சம்பவம்’
‘காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி, அக்டோபரில் தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்ற அறிவிப்பு வந்தது. மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
அவசரநிலைக் காலத்தில் தாங்கள் அனுபவித்த சிறைக் கொடுமைகளுக்கு எதிர்வினையாற்ற தி.மு.க-வினர் தயாராயினர்.
‘இந்திரா காந்தி எங்கு சென்றாலும் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும்’ என்று தி.மு.க தலைமை அறிவித்தது. அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
அக்டோபர் 29-ம் தேதி. சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் இந்திரா காந்தி. வெளியே கறுப்புக்கொடிகளுடன் தி.மு.க-வினர் திரண்டிருந்தனர்.
போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். ஆனாலும், இந்திரா காந்தியின் முகத்துக்கு நேராகக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டார் இந்திரா காந்தி. அங்கும், தி.மு.க-வினர் கறுப்புக்கொடிகளுடன் காத்திருந்தனர். போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக, காவல்துறை தெரிவித்தது.
‘தடையை மீறுவோம்’ என்று தி.மு.க-வினர் முன்னேறினர். பகல் ஒரு மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து திறந்தவெளி வாகனத்தில் புறப்பட்டார் இந்திரா காந்தி. அப்போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த அந்த ‘சம்பவ’த்தை தி.மு.க-வினர் நிகழ்த்தினர்!
(இன்னும் அறிவோம்)
கருணாநிதியை எதிர்த்து… கழகத்துக்குள் கலகம்! (தமிழக தேர்தல் வரலாறு-14)

