முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலை தொடர்பான தொல்லியல் மற்றும் வரலாற்று விவகாரம், வெறும் மத அடையாளமாக மட்டுமன்றி, ஒரு தேசிய இனத்தின் பூர்வீக அடையாளச் சிக்கலாகவும் பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் உள்ளிட்ட ஆய்வாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த ஆய்வை மூன்று முக்கிய கோணங்களில் தொகுக்கலாம்.

• வரலாற்று மற்றும் கலை மரபு பின்னணி

• தொல்லியல் சட்டங்களும் நடைமுறை முரண்பாடுகளும்

• அரசியல் மற்றும் சமூக நோக்கம்

அந்த வகையில் இலங்கை மிகக் கடுமையான வரலாற்றுப் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலிலும், தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்வதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்றத்தின் தடையையும் மீறி, அங்கு பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு ஆகும்.

விகாரை கட்டிமுடிக்கப்பட்டு, அங்கு புத்தர் சிலையை நிறுவி நிலைநாட்ட (பிரதிஷ்டை செய்ய) அனைத்து ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டன. இந்த அநீதிக்கு எதிராகத் தமிழ் மக்கள் திரண்டு நின்று நடத்திய உறுதியான எதிர்ப்புப் போராட்டத்தினால், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரச் சீரழிவை விட, தமிழர்களின் நிலங்களை மத ரீதியாக ஆக்கிரமிப்பதிலேயே அரசு இயந்திரம் குறியாக இருப்பதை குருந்தூர்மலைச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால், மக்களின் ஒருங்கிணைந்த போராட்டம் அந்தச் சட்டவிரோத முயற்சியைத் தற்காலிகமாக முறியடித்துள்ளது.

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சட்டப்பூர்வமான நெறிமுறைகள் மற்றும் தற்போது நடக்கும் மீறல்கள் குறித்த ஒப்பீடு

ஆய்வு மற்றும் பாதுகாப்பு: ஒரு இடத்தில் பண்டைய எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டால், அவற்றை ஆய்வு செய்து, சிதையாமல் பாதுகாத்து, தேசிய மரபுரிமைச் சின்னமாக அறிவிப்பதே முறையான தொல்லியல் நடைமுறையாகும்.அவ்வாறு கண்டெடுக்கப்படும் சிதைவுகளை மீண்டும் ஒரு வழிபாட்டுத் தலமாகவோ அல்லது புதிய கட்டிடமாகவோ மாற்றுவதற்குத் தொல்லியல் சட்டத்தில் இடமில்லை.

அநுராதபுரத்தில் திராவிடக் கலை மரபில் கட்டப்பட்ட இருபதிற்குகும் மேற்பட்ட இந்து (சைவ) ஆலயங்களின் சிதைவுகள் உள்ளன. அவை மரபுரிமைச் சின்னங்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, அங்கு மீண்டும் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாட்டுத் தலங்களாக மாற்றப்படவில்லை. பல இடங்கள் அடையாளம் காண முடியாத நிலையிலேயே இன்றும் உள்ளன.

குருந்தூர்மலை விவகாரத்தில் உள்ள முரண்

குருந்தூர் மலையில் பௌத்த எச்சங்கள் இருப்பதாகக் கருதப்பட்டால், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்திப் பாதுகாக்கலாமே தவிர, அங்கு புதிய விகாரையை அமைப்பது தொல்லியல் சட்டங்களுக்கு முரணானது.

முன்னொரு காலத்தில் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்ற காரணத்தைக் கூறி, சிதைந்த இடங்களை மீண்டும் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஒரு நாட்டின் வரலாறு என்பது தொல்லியல் ரீதியாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதை ஒரு குறிப்பிட்ட இனத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றி ஆக்கிரமிப்பது சர்வதேச மற்றும் உள்ளூர் தொல்லியல் விதிகளுக்கு எதிரானது.

கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் விகாரை அமைக்கும் பணியை அரசு முன்னெடுப்பதன் பின்னால் உள்ள முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கருதலாம் :

மக்கள் போராட்டத்தை மழுங்கடித்தல், ஒன்றுபடுதலைத் தடுத்தல் – பொருளாதாரப் பாதிப்பு இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் பாதித்துள்ளது. இதனால் தென்னிலங்கை மக்களும், தமிழ் மக்களும் இணைந்து அரசுக்கு எதிராகப் போராடும் சூழல் உருவாகலாம்.

திசைதிருப்புதல் – இத்தகைய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தடுத்து, மீண்டும் மத மற்றும் இன ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதன் மூலம் மக்கள் போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்க அரசு முயல்கிறது.

வாக்கு வங்கி அரசியல் (சிங்கள – பௌத்த மேலாதிக்கம்) அரசியல் செய்தி – நாடு பொருளாதார ரீதியாகச் சிதைந்து போயிருந்தாலும், அரசு எப்போதும் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கும் என்பதைத் தீவிரப் போக்குடைய சிங்கள மக்களுக்கு உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் மக்களின் அமைதி குறித்த விமர்சனம்

தென்னிலங்கை மக்கள் காட்டிய எழுச்சியைப் போலத் தமிழ் மக்கள் பொருளாதாரப் போராட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனம் நிலவுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் இத்தகைய ஆக்கிரமிப்புகளைச் செய்வதன் மூலம் அவர்களின் எதிர்வினையை அரசு சோதிக்கிறது.

இவ்விவகாரம் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் தொடர்பானது மட்டுமல்ல, அது பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக எழும் மக்கள் கோபத்தை, மீண்டும் இனவாதப் பாதைக்கு திசைதிருப்பும் ஒரு திட்டமிட்ட அரசியல் தந்திரமாகும்.

ஈழத்தில் பௌத்தம் என்பது சிங்களவர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகப் பார்க்கப்படுவது வரலாற்றுத் தவறு என்பதை ஆதாரபூர்வமாக பார்ப்போம்.

பூர்வீகத் தொடர்பு – குருந்தூர் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள், தென்னிந்தியாவின் ஆதி மனித நாகரிகத்தோடு (கந்தரோடை போன்ற) நெருங்கிய தொடர்புடையவை.

கல்வெட்டு ஆதாரங்கள் – 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பௌத்தத் துறவிகளுக்குக் குகைகளையும், கற்படுக்கைகளையும் தானமாக வழங்கியுள்ளனர். சங்க காலக் குறுநிலத் தலைவர்களின் ஆட்சிமுறை இலங்கையிலும் இருந்ததற்கு இவை சான்றாகும்.

தமிழ் மன்னர்களின் பௌத்தத் தொண்டு – 1,500 ஆண்டுகளுக்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட பரிந்த உத்தமர் போன்ற தமிழ் மன்னர்கள் பௌத்த மதத்தைப் போற்றி வளர்த்தனர். இதனாலேயே அவர்கள் புத்த தேசர் என அழைக்கப்பட்டனர். இதற்குச் சான்றாக வெல்கம் விகாரை போன்ற இடங்களில் தமிழ் கல்வெட்டுகள் இன்றும் உள்ளன.

இலக்கியச்சான்றுகள் – சிங்கள மொழியின் பாளி இலக்கியங்கள் கூட தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததையும், அம்மதத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளன.

பௌத்தம் என்பது தமிழர்களுக்கும், இந்து மதத்திற்கும் அந்நியமானதல்ல. எனவே, பௌத்தச் சின்னங்கள் இருப்பதாலேயே ஒரு பகுதியை சிங்களவருக்கு மட்டுமேயான நிலமாக உரிமை கோருவது வரலாற்று யதார்த்தத்திற்குப் புறம்பானது. பௌத்த சின்னங்கள் கண்டெடுக்கப்படுவதாலேயே குருந்தூர் மலை சிங்களவர்களுக்குரியது என முடிவெடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை நோக்கின் :

பௌத்தம் என்பது தமிழர்களுக்கோ அல்லது இந்து சமயத்திற்கோ அந்நியமான ஒன்றல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ‘இந்து மதம்’ என்ற சொல்லாடலுக்குள் பௌத்தம், சமணம் போன்ற சமயங்களும் உள்ளடங்கியே இருந்தன.

கட்டடக்கலை ஆதாரம் – இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களின் கருத்துப்படி, வட இலங்கையில் காணப்படும் பௌத்த எச்சங்கள் தென்னிந்தியாவிற்கே உரித்தான தனித்துவமான ‘மகாயான’ கட்டடக்கலை மரபைச் சேர்ந்தவை.

கல்வெட்டுச் சான்றுகள் – குருந்தூர் மலைக்கு அருகிலுள்ள கோயில் அத்திவாரத்தில் தமிழர்கள் செதுக்கிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

இவை தமிழர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பெரும் தொண்டுகளைப் பறைசாற்றுகின்றன. குருந்தூர் மலை பௌத்த சின்னங்கள் யாருக்குரியவை என்பது இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

வரலாற்றுச் சின்னங்கள் என்பவை ஒரு நாட்டின் தேசிய மரபுரிமைகளாகும்.அவற்றை அதன் தொன்மை மாறாமல் பாதுகாப்பதே முறைமையாகும். அதைவிடுத்து, பௌத்தச் சின்னங்களை மட்டும் முன்னிறுத்தி அங்கு புதிய வழிபாட்டுத் தலங்களை அமைத்து ஆக்கிரமிப்பது சட்டத்திற்கும் வரலாற்று உண்மைக்கும் முரணானது.

குருந்தூர் மலை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமான இடமல்ல. அது ஒரு தேசிய மரபுரிமைச் சின்னமாகும். இதனை முறையாக ஆய்வு செய்தால், தமிழர்களுக்கும் பௌத்த மதத்திற்குமான வரலாற்றுத் தொடர்புகள் வெளிவரும்.

ஆனால், அதனை ஒரு வழிபாட்டுத் தலமாக மாற்றுவது என்பது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாகவும், ஈழத் தமிழர்களின் தாயக நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசியல் உத்தியாகவும் அமைகிறது.

(மோகனதாரணி மகேந்திரநாதன், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

Share.
Leave A Reply