சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார். வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியிலும், எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவரும் நா.த.க சார்பில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற்றது.

மாநாட்டில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆண் – பெண் சமநிலையைப் பேணும் வகையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

வேட்பாளர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 40 பேர் பொறியாளர்கள், 33 பேர் வழக்கறிஞர்கள், 15 பேர் மருத்துவர்கள் நா.த.க சார்பில் போட்டியிடுகின்றனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நா.த.க 16.81% வாக்குகளைப் பெற்றதுடன், காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 14.80% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த வலுவான வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு சீமான் இம்முறை அங்குக் களமிறங்கியுள்ளார்.

முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்

மாநாட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய வேட்பாளர்கள்;

வித்யாராணி (வீரப்பன் மகள்): மேட்டூர்

இடும்பாவனம் கார்த்திக்: வேதாரண்யம் (நாகை மாவட்டம்)

இயக்குநர் மு. களஞ்சியம்: ஆயிரம் விளக்கு

அம்பேத் ராஜன் (முன்னாள் எம்.பி): திருப்போரூர்

கி.ஆ.பெ. வெற்றிச்செல்வி: காஞ்சிபுரம்

ஜல்லிக்கட்டு ராஜேஷ்: திருவெறும்பூர்

பிரியதர்ஷினி: எடப்பாடி

சென்னை மற்றும் புறநகர் தொகுதிகள்:

கொளத்தூர்: வழக்கறிஞர் சௌந்திரபாண்டியன்

பெரம்பூர்: வெற்றித்தமிழன்

ஆர்.கே. நகர்: வெண்ணிலா தாயுமானவன்

திருவொற்றியூர்: சத்யா பாஸ்கர்

மதுரவாயல்: ரேவதி

அம்பத்தூர்: சிலம்பரசன்

சைதாப்பேட்டை: வித்யா

தி நகர்: அனுஷா விஜயகுமார்

விருகம்பாக்கம்: சந்தோஷ்

அண்ணாநகர்: வழக்கறிஞர் சங்கர்

பிற முக்கியத் தொகுதிகள்

கும்மிடிப்பூண்டியில் வழக்கறிஞர் ஸ்ரீதர், பொன்னேரியில் ராஜாத்தி, திருவள்ளூரில் செந்தில்குமார், பூந்தமல்லியில் மேகலா, ஆவடியில் புனிதா, மாதவரத்தில் கிருத்திகா ஏழுமலை, குடியாத்தத்தில் இமலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து, மாநாட்டில் பேசிய சீமான், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளைச் சாடிப் பேசினார்.

ஆள்மாற்றம் என்பது எங்களது இலக்கல்ல, ஆட்சி முறை மாற்றமே எங்களது இலக்கு. அரசியல் என்பது இங்கு வெறும் விளம்பர அரசியலாகவும், தேர்தல் அரசியலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.

பசி, ஊழல், லஞ்சம் மற்றும் இயற்கை வளக் கொள்ளை இல்லாத ஒரு நல்லாட்சியை வழங்குவதே எங்கள் கனவு.

அ.தி.மு.க – தி.மு.க ஆகிய இரண்டும் தனித்தனி கட்சிகள்என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், எப்படி திருடுவது என்பதை ஒரே இடத்தில் கற்றுக் கொண்டவர்கள் இவர்கள். இவர்களிடம் எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோலத்தான் காங்கிரஸ் – பா.ஜ.கவும். இவர்களின் பொருளாதாரக் கொள்கைகளும், பாதுகாப்புக் கொள்கைகளும் ஒன்றே என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், தமிழ் மொழி சிதைந்து வருவதாகக் கவலை தெரிவித்தார். தமிழன் ஆளும்போதுதான் தமிழுக்கு மீட்சி ஏற்படும். 5,000 ஆண்டு கால அரசியல் வரலாறு நமக்குஉண்டு.

ஆனால் ஈ.வெ.ரா தொடங்கி உதயநிதி வரையிலான 100 ஆண்டு கால வரலாறுதான் நம் வரலாறு என்று நமக்குத் தவறாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வுதான் விடுதலையின் முதல் படி என்றார்.

இலவசங்களுக்காகச் செய்யப்படும் செலவுகள் மக்களின் வரியிலும், மண் வளத்திலும் அடகு வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

சமூக நீதி பேசுபவர்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்காக ஏன் விடுதிகளை அமைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வளர்ந்து வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று குறிப்பிட்ட சீமான், நாம் செத்தாலும் பரவாயில்லை, நம் இனம் வாழ வேண்டும் என்ற பிரபாகரனின் கொள்கையைப் பின்பற்றித்தான் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம் என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.

தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply