விளையாட்டுத் துறையை பொறுத்தமட்டில், உலகளவில் புகழ்பெற்ற ஒருவர் தான் மைக் டைசன்.
இவரின் வேகமும், கோடிக்கணக்கான டொலர் சொத்துக்களும் மற்றும் உலகத்தையே அஞ்ச வைத்த குத்துச்சண்டை உத்திகளும் பல பாடங்களை நமக்குக் கற்றுத் தரவல்லவை. இவை அனைத்தையும் ஆண்டு அனுபவித்த அந்த மனிதன் செய்த சிறு தவறு, நொடியில் அனைத்தையும் இழக்கச் செய்தது.
அந்தவகையில், மைக் டைசனின் வாழ்க்கை, இன்று பலருக்கு ஒரு வாழ்க்கை பாடமாகவே மாறியிருக்கிறது.
1986ஆம் ஆண்டு, குத்துச்சண்டை உலகத்தையே வியக்கச் செய்த 20 வயதே நிரம்பிய ஒரு இளைஞன், உலகின் ஆகச்சிறந்த குத்துச் சண்டை வீரனாக உருவெடுத்தான். அவர்தான் மைக் டைசன்.
எதிராளியைப் பார்த்த மாத்திரத்திலேயே நிலைகுலையச் செய்யும் அவரது ‘நொக்-அவுட்’ (Knockout) தாக்குதல்கள், அவரை உலகப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.
அன்றைய காலகட்டத்தில் டைசன் என்றால் பயம், வேகம், வெற்றி இவைதான் அடையாளம்.
அவரை தோல்வியடைச் செய்ய முடியாது என்ற ஒரு கருத்து குத்துச் சண்டை உலகில் அப்போது நிலவியது.புகழ் வரும்போது கூடவே பெரும் பணமும் வருவது சாதாரணம்.
பல மில்லியன் டொலர் சொத்துக்களைத் தன் கையில் வைத்திருந்த அவர், அனைத்தையும் இழந்து நிர்கதியானார்.
நிதியியல் அறிவு (Financial Literacy) இல்லாததே அதற்குக் காரணம். வீட்டில் செல்லப் பிராணிகளாக ‘வங்காள புலிகளை’ வளர்ப்பது, வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் எனத் தனது வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்தார் டைசன்.
அதேசமயம், அவரைச் சுற்றியிருந்த பணியாளர்களும், நண்பர்களும் அவரது அப்பாவியான குணத்தைப் பயன்படுத்திப் பணத்தைச் சுரண்டினர்.
இதற்கிடையே, 1992இல் ஒரு வழக்கில் சிக்கிய டைசன், சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். சில நாட்களில் சிறையில் இருந்து மீண்டு வந்த டைசன், மீண்டும் களமிறங்கினார்.
ஆனால் 1997ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியின்போது, ஆத்திரத்தில் போட்டியாளரின் காதைக் கடித்த சம்பவம், டைசனை ஒரு ‘வில்லனாக’ உலகிற்குச் சித்தரித்தது.
இதன் தொடர் விளைவாக 2003இல், கையில் ஒரு டொலர் கூட இல்லாமல் தான் அனைத்தையும் இழந்துவிட்டதாக டைசன் அறிவிக்கவேண்டியதாயிற்று.
அதன்பின்னர், தனது முந்தைய தவறுகளை ஒப்புக்கொண்ட டைசன், கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மாற்றிக்கொண்டார். காலம் கடந்த ஞானம்.
தற்போது, சினிமா மற்றும் புதிய தொழில்கள் மூலம் தனது பொருளாதார நிலையைச் சீரமைக்க ஆரம்பித்துள்ளார்.
போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ள மைக் டைசன், மீண்டுமொருமுறை தன்னை குத்துச்சண்டை வீர்ராக நிரூபிக்க போராடி வருகின்றார். மீண்டும் எழுந்து வந்தாலும், அவருடன், அவருடைய பழைய பழக்க வழக்கங்களும் எழுந்து வருமானால் அவர் நீடித்து நிற்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.
சுபா

