ஈரான் மீதான அமெரிக்கப் போருக்கான ஏற்பாடுகளும், சமாதானப் பேச்சுக்கான முயற்சிகளும் ஏககாலத்தில் நகருகின்றன. அவை இரண்டுமே பிராந்தியத்தில் நிலவுகின்ற நெருக்கடியின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

நெருக்கடியான சூழலை வலியுறுத்துகின்ற நாடாக இஸ்ரேல் உள்ளது. இஸ்ரேல் பிரதமரின் வெள்ளை மாளிகைக்கான பயணம் அதிகமான குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றது.

அத்தகைய குழப்பம் அமெரிக்காவின் போருக்கான அடிப்படையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அமெரிக்கா ஈரான் மீது நிகழ்த்தும் போருக்கான ஏற்பாடுகளின் பின்னணியில் இஸ்ரேலின் நலன் அடிப்படையாக உள்ளது.

போரை நகர்த்துகின்ற தேசமாக அமெரிக்கா விளங்குகிறது. ஆனால் இஸ்ரேல் பிரதான பங்கை வகிக்கின்றது என்பது தெரிகின்றது.

2024ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரமாக நிகழ்த்தியதோடு, பிராந்தியமும் இஸ்ரேல் நிலப்பரப்பும் அதீத அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தன.

அத்தகைய தாக்குதல் யூதர்களை அச்சத்துக்கு உள்ளாக்கியதோடு, அயல் நாடுகளுடன் நட்புறவை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளும் தள்ளி இருந்தது.

ஈரானின் தாக்குதலை இஸ்ரேலின் இராணுவ வல்லமையால் மற்றும் புலனாய்வு புத்திகளால் எதிர்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.

இதன் விளைவு அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குக் காரணமாக அமைந்தது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் இஸ்ரேலின் நிலப்பரப்பை முற்றாகவே தகர்க்கும் அளவுக்கு வலிமை பெற்றதாகக் காணப்படுகிறது.

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரானின் கடல் பரப்பில் நிறுத்திவிட்டு சமாதான உரையாடலை முன்னெடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் அணு ஆயுதம் மட்டுமின்றி, ஏவுகணை தொழில்நுட்பத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது.

ஈரானின் ஏவுகணைகளும் ஆளில்லாத விமானங்களும் இஸ்ரேலின் இராணுவ பலத்தைத் தகர்க்கக் கூடியதாக இருப்பதோடு, அதுவே போருக்கான முக்கிய காரணம் எனவும் தெரிகின்றது.

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டின் பிரதிபலிப்பு அதுவாகவே காணப்படுகிறது. போரின் மூலமும் சமாதானத்தின் மூலமும் அமெரிக்க தரப்பு ஈரானிடம் எதிர்பார்ப்பது அணு ஆயுதத்தை மட்டுமல்ல என்பதையே நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் வெளிப்படுத்துகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியுடனும், வெளிவிவகார அமைச்சுடனும் இஸ்ரேலிய பிரதமர் உரையாடுகின்ற போது ஈரானுடன் மேற்கொள்ள இருக்கும் சமாதான உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை அதிகம் வலியுறுத்துவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தகைய உள்ளடக்கம் ஈரானின் அணு ஆயுதத்தை விட ஏனைய தொழில்நுட்ப ஆயுதங்களின் பிரயோகம் சார்ந்ததாகவே காணப்படுகிறது.

ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத விமானங்களால் இஸ்ரேல் அழிவடையாமல் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகின்றது.

இஸ்ரேலிய பிரதமர் போருக்குரிய நகர்வு ஒன்றையும் திட்டமிடுகிறார் என்பது தெளிவாகவே தெரிகின்றது. ஈரான் மீதான போரை நிகழ்த்துவதற்கான திட்டம் இஸ்ரேல் தரப்பிடமே காணப்படுகிறது.

ஒரு வகையில் ஈரான் மீதான போரை அல்லது சமாதானத்தை அமெரிக்கா நிகழ்த்துகின்ற போதும் இஸ்ரேலுக்காகவே அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்க திட்டமிடுகின்றது.

அத்தகைய திட்டமிடலின் விளைவுகள் உடனடியாக யூதர்களுக்கும் எதிர்கால விளைவுகள் அமெரிக்கர்களுக்கும் ஏற்படலாம் என்பதை இஸ்ரேலிய பிரதமரது அமெரிக்க பயணம் உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்காவை உலகில் பல நாடுகளை முன்னிறுத்தி ஆள் யுத்தங்களை நிகழ்த்தி வந்தன. தற்போதும் அமெரிக்காவை அத்தகைய ஆள் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

இஸ்ரேல் அமெரிக்காவை வழி நடத்தும் பிரதான சக்தியாக மாறி இருக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலப் பகுதி இஸ்ரேலின் நலன்களுக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும் நாடாக அமெரிக்காவை மாற்றி உள்ளது.

எனவே, உலகம் ஒரு குழப்ப சூழலுக்குள்ளு தள்ளப்பட்டுள்ளது. புதிய உலக ஒழுங்கை அடையாளம் காண்பதற்கு முயற்சிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில், ஈரான் மீதான போரையும் சமாதானத்தையும் அமெரிக்க – இஸ்ரேல் தரப்பு திட்டமிட்டு இருக்கின்றது.

இப்போரின் அல்லது சமாதானத்தின் விளைவு பிராந்திய அரசியலை மட்டுமன்றி உலக அரசியலையும் புதிய வடிவத்துக்குள் நகர்த்துவதற்கு திட்டமிடுகிறது என்பது தெளிவாகின்றது.

அத்தகைய உத்திகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்தார். ஒரு நீண்ட ஆள் யுத்தத்தை நிகழ்த்திய அமெரிக்காவை அத்தகைய ஆள் யுத்தத்துக்குள் ஈடுபடுத்துகின்ற நிலையை உலக அரசியல் தந்துள்ளது.

ரீ.கணேசலிங்கம்-

Share.
Leave A Reply