1977 மக்களவைத் தேர்தலில்… மிகப்பெரிய வெற்றியை ஜனதா கட்சி பெற்றபோது, அதை ‘ஜனதா அலை’, ‘புரட்சி’ என்றெல்லாம் விமர்சகர்கள் விதந்தோதினர்.

ஆனால், பிரதமர் நாற்காலிக்காக அவர்களுக்குள் கடும் போட்டி எழுந்தபோது, அது ஓர் ‘அவியல் கூட்டணி’ என்பது வெளிப்பட்டது.

‘வடஇந்தியாவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதற்கு சரண் சிங்தான் காரணம். அவரைப் பிரதமராக்க வேண்டும்’ என்று கிளம்பினார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

‘ஜெகஜீவன் ராம் வந்ததுதான் ஜனதா வெற்றிக்குக் காரணம். அவர் பிரதமராக வேண்டும்’ என்று விரும்பினார்கள் அவருடைய ஆதரவாளர்கள். `

மொரார்ஜி தேசாயைத்தான் பிரதமராக்க வேண்டும்’ என்று குரல் கொடுத்தனர் அவருடைய ஆதரவாளர்கள்!

Finance Minister Charan Singh (c), Prime Minister Morarji Desai (l) and Deputy Prime Minister Jagjivan Ram attend a swearing-in ceremony at Rashtrapati Bhavan in Delhi on January 26, 1979

காங்கிரஸ் அரசுகள் கலைப்பு!

பிரதமர் நாற்காலிப் பஞ்சாயத்து, சோசலிஸ்ட் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்யா கிருபளானி ஆகியோரிடம் போனது.

அதன் பிறகு, மொரார்ஜி தேசாய்தான் பிரதமர் என்று முடிவானது. பாபு ஜெகஜீவன் ராமுக்குப் பாதுகாப்புத்துறை, சரண் சிங்குக்கு உள்துறை, அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வெளியுறவுத்துறை என ஒதுக்கீடுகள் நடைபெற்றன.

பொருளாதாரக் கொள்கை உட்பட பல விவகாரங்களில் அவர்களுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும், இந்திரா காந்தியைத் தண்டிக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருந்தனர்.

அவசரநிலைக் கால அராஜகங்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் கமிஷன் அமைத்தது ஜனதா ஆட்சி. அரசு அதிகாரிகள், காவல்துறையினர்,

முன்னாள் அமைச்சர்கள் எனப் பல தரப்பினரும் விசாரிக்கப்பட்டனர். மூன்று முறை சாட்சிக் கூண்டுக்கு வரவழைக்கப்பட்ட இந்திரா காந்தி, கமிஷனின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கலைப்பதற்கு, `பிரிவு 356’ என்ற ஆயுதத்தை, காங்கிரஸைப்போலவே ஜனதா அரசும் கையிலெடுத்தது.

ஜோதிபாசு

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டன.

பிறகு அங்கு தேர்தல் நடைபெற்று ஜனதா அரசுகள் அமைந்தன. அவசரநிலையை அறிவிக்குமாறு இந்திராவுக்கு ஆலோசனை கொடுத்த மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான அரசும் கலைக்கப்பட்டது.

அங்கு நடந்த தேர்தலில், 178 இடங்களை சி.பி.எம் கைப்பற்றியது. ஜோதிபாசு முதல்வரானார்.

பீகாரில் ஒரு கீழ்வெண்மணி!

மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸிடமிருந்து அதிகாரம் பறிபோன பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுக்குள் முடங்கினார் இந்திரா காந்தி.

அந்த நேரத்தில், கீழ்வெண்மணியைப் போன்ற ஒரு பெருங்கொடுமை பீகாரில் நிகழ்ந்தது. பாட்னா மாவட்டத்திலுள்ள ‘பெல்ச்சி’ கிராமத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் 11 பேரைத் துப்பாக்கியால் சுட்டுச் சாய்த்து, அவர்களை உயிருடன் தீயில் போட்டு எரித்தனர் அந்தக் கிராமத்தின் ‘பண்ணையார்கள்.’

1977, மே 27-ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம், நாட்டையே உலுக்கியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 13-ம் தேதி பீகாருக்குப் புறப்பட்டார் இந்திரா காந்தி. கடுமையான மழை வெள்ளம். சாலைகள் உருக்குலைந்தன. பெல்ச்சிக்குச் செல்வது பெரும் சவாலாக இருந்தது.

ஜீப், டிராக்டர் என மாறி மாறிப் பயணித்து, கடைசியில் ஒரு யானைமீது சவாரி செய்து அந்தக் கிராமத்தை அடைந்தார் இந்திரா காந்தி.

ஒரு முன்னாள் பிரதமர், பல இடர்ப்பாடுகளைக் கடந்து பாதிக்கப்பட்ட சமூகத்தினரைச் சந்தித்தார் என்ற செய்தி நாடு முழுவதும் வியப்பை ஏற்படுத்தியது.

சரிந்து கிடந்த இந்திராவின் இமேஜ் உயரத் தொடங்கியது. அதன் பிறகுதான், அக்டோபர் 29-ம் தேதி அவர் தமிழகத்துக்கு வருகிறார்.

மதுரையில் கறுப்புக்கொடிகளுடன் தி.மு.க-வினர் காத்திருந்தனர். மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திரா காந்தி திறந்தவெளி காரில் வந்தபோது, அவரது கார்மீது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன.

கட்டைகளைக்கொண்டு கார் தாக்கப்பட்டது. ஜி.கே.மூப்பனார் காயமடைந்தார். இந்திரா காந்தியைப் பாதுகாக்க, கார் சீட்டுக்கு அடியில் அவரைத் தள்ளினார் பழ.நெடுமாறன்.

முன்னாள் பிரதமரின் மீது நடைபெற்ற அந்தத் தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தி.மு.க-வுக்கு அடி மேல் அடி

‘இந்திரா காந்தியைக் கொலைசெய்ய முயன்றதாக’ தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டு, 40 நாள்களுக்கு மேல் அவர்கள் சிறையில் இருந்தனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு, அவசரநிலைக் கால அடக்குமுறைகள், மக்களவைத் தேர்தல் தோல்வி, சட்டமன்றத் தேர்தல் தோல்வி, சர்க்காரியா கமிஷன் விசாரணை எனக் கடும் நெருக்கடிகளுக்கு தி.மு.க ஆளானது.

கட்சியைக் காப்பாற்ற கருணாநிதி கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அந்தச் சூழலில், 1978 பிப்ரவரியில், சர்க்காரியா கமிஷன் தனது இறுதி அறிக்கையை அளித்தது.அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, ஒரு ரீவைண்ட்.

‘முதல்வர் கருணாநிதி, தி.மு.க அமைச்சர்கள், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர்மீது ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க கமிஷன் அமைக்குமாறு’ 1972-ம் ஆண்டு, நவம்பர் மாதம் குடியரசுத் தலைவரிடம் எம்.ஜி.ஆர் மனு அளித்தார்.

அதே போன்ற ஒரு புகார் மனுவை எம்.கல்யாணசுந்தரம் எம்.பி உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவரிடம் அளித்தனர். நாஞ்சில் மனோகரனும் ஜி.விசுவநாதனும் தனியாகப் புகார் மனு அளித்தனர்.

‘எஸ்கேப்’ ஆன எம்.ஜி.ஆர்

புகார் மனுக்கள் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அது குறித்து விளக்கம் கேட்டு முதல்வர் கருணாநிதிக்கு 1972, நவம்பர் 15-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார் பிரதமர் இந்திரா காந்தி.

குற்றச்சாட்டுகளை மறுத்து பிரதமருக்கு விளக்கம் அனுப்பினார் கருணாநிதி. தனது விளக்கத்தைப் பிரசுரங்களாக அச்சடித்து அவற்றை சட்டமன்றத்தில் அவர் வெளியிட்டார்.

‘அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை. விசாரணை கமிஷன் அமைத்தால்தான் உண்மை வெளிவரும்’ என்று அ.தி.மு.க-வினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதினர்.

விளக்கம் கேட்டு கருணாநிதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார் பிரதமர். அதற்கு, 1973, மே 28-ம் தேதி விளக்கம் அனுப்பினார் கருணாநிதி.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், கருணாநிதி அரசு 1976, ஜனவரி 31-ம் தேதி கலைக்கப்பட்டது.

அதே ஆண்டு, பிப்ரவரி 3-ம் தேதி சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

அவற்றில், 28 குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு சர்க்காரியா கமிஷன் விசாரணையைத் தொடங்கியது.

‘புகார்கள் தொடர்பாக எம்.ஜி.ஆரைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்’ என்று தி.மு.க தரப்பு வழக்கறிஞர் சாந்தி பூஷன் கேட்டார்.

அதற்கு, ‘இந்தப் புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சேலம் கண்ணன் என்ற வழக்கறிஞர் குறிப்பிட்ட புகார்களைத்தான் அளித்தேன்’ என்று சொல்லி, ஆணையத்தை அதிரவைத்தார் எம்.ஜி.ஆர்.

‘விஞ்ஞான ஊழல்’ உண்மையா?

இந்த நிலையில்தான், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, அவருடைய அமைச்சரவை சகாக்கள் அன்பில் தர்மலிங்கம், செ.மாதவன், நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், எஸ்.ஜே.சாதிக் பாட்சா, ஓ.பி.ராமன், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து தனது இறுதி அறிக்கையை சர்க்காரியா கமிஷன் தாக்கல் செய்தது.

அதில், ‘அஞ்சுகம் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு, சந்தேகப்படும்படியாக நிறைய கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கருணாநிதியின் மகன் மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற படத்தை, முதல்வரின் மகன் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

ஆனால் அதை உறுதிசெய்ய முடியவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘முரசொலி’ பத்திரிகை அதிக லாபம் சம்பாதித்தது. `முரசொலி’ அலுவலகத்தின் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டன. அவையெல்லாம் ஊழல் பணம்’ என்பது குற்றச்சாட்டு. `அந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்ய முடியவில்லை’ என்றும் கூறியிருந்தது.

அதேநேரத்தில், வீராணம் திட்டத்தில் குழாய் அமைப்பதற்கான டெண்டரில் முறைகேடு நடைபெற்றது நிரூபிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கமிஷன் தெரிவித்தது.

அதைப்போலவே, மதுபான ஆலை அமைப்பதற்கு அனுமதி அளித்ததிலும், சமயநல்லூரில் மின் நிலையம் தொடர்பான திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என்றும் கமிஷன் கூறியது.

ஓ.பி.ராமன், அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறிய கமிஷன், `அவற்றில் முதல்வருக்குத் தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை’ என்று கைவிரித்தது.

‘விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் கருணாநிதி கில்லாடி’ என்று எதிர்க்கட்சியினர் இன்றளவும் விமர்சிக்கிறார்கள்.

அதற்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவது சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத்தான். ஆனால், ‘விஞ்ஞானரீதியான ஊழல்’ என்ற சொல்லாடல் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெறவில்லை.

அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த ஒரு மாற்றம் சற்று வித்தியாசமானது. தி.மு.க அரசைக் கலைத்தவர் இந்திரா. அவசரநிலைக் காலத்தில் தி.மு.க-வினர் கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டதற்குக் காரணமானவர் இந்திரா. தி.மு.க-வுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்திய சர்க்காரியா கமிஷனை அமைத்தவர் இந்திரா. அப்படிப்பட்ட இந்திரா காந்தியுடன், ஒரே மேடையில் தோன்றினார் கருணாநிதி.

அந்த மேடையில், இந்திரா காந்தியை வரவேற்க கருணாநிதி பயன்படுத்திய ஒரு சொல்லாடல், தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்த சொல்லாடல்களில் ஒன்றாக மாறிப்போனது. அது என்ன சொல்லாடல்?

(இன்னும் அறிவோம்

ஆ.பழனியப்பன்
கருணாநிதியை எதிர்த்து… கழகத்துக்குள் கலகம்! (தமிழக தேர்தல் வரலாறு-14)

கைக்கு வந்த முதல்வர் பதவி… காக்கவைத்த ‘மீனவ நண்பன்’! (தமிழக தேர்தல் வரலாறு-15)

 

Share.
Leave A Reply