அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை (Anti-ship cruise missiles) வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் இறுதி செய்ய நெருங்கியுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவால் தயாரிக்கப்படும் இந்த அதிநவீன ஏவுகணைகள் ஒலியை விட அதிவேகத்தில் (Supersonic) செல்லக்கூடியவையாகும்.
சுமார் 290 கிலோமீற்ற தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய இவை, கடற்படை பாதுகாப்பு வளையங்களை ஏமாற்றித் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த 12 நாள் போருக்குப் பின், இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
இதற்காக ஈரானின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மசூத் ஒரே (Massoud Oraei) சீனாவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் ஆயுத களஞ்சியத்தின் இந்த ஏவுகணைகள் சேர்வது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இவை அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்களையே மூழ்கடிக்கும் வல்லமை கொண்டவை என்று ஆயுத வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எனினும். இந்த ஏவுகணை விற்பனை குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றித் தங்களுக்குத் தெரியாது என சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஈரானின் இறையாண்மைக்குத் தங்களது ஆதரவு தொடரும் என சீனா முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து உடன்பாடு எட்டப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார்.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் மற்றும் USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு உள்ளிட்ட கடற்படைக் கப்பல்கள் ஈரான் கடற்கரைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட ஆயுதத் தடைகள் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.
இந்த நிலையில் சீனா ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்குவது சர்வதேசத் தடைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்த முனையும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இது பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

