கம்பளை – நாகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் ஒன்று மோதிய விபத்தில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மூன்று வயது மகள் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஸங்க நந்தன குலதுங்கவின் மகளான நிசாரா கெனுலி குலதுங்க என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது முன்பள்ளி ஆசிரியரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காகத் தனது தாய் மற்றும் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் மாவதுர நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நோக்கி முன்னால் வந்த கார் ஒன்று, பேருந்து ஒன்றை முந்துவதற்கு முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அங்கு சிறுமிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த 20 ஆம் திகதி மாலை 5 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுமி பலமான தாக்குதலுக்கு உள்ளாகியதில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உட்புற இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என கம்பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சசிந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாயாருக்கு கை எலும்பு முறிவடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அலட்சியமாக காரைச் செலுத்திய நாவலப்பிட்டி அம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதவான் சரசி பரணமானவின் உத்தரவின் பேரில் நேற்று திங்கட்கிழமை (23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply