முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி இன்று ராமநாதபுரம் கமுதியில் உள்ள கோட்டைமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலை ஆனார்.
அப்போது அரசியலில் ஈடுபடுவது பற்றி பேசி வந்த அவர் தேர்தலுக்கு முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசியல் மற்றும் தேர்தல் போட்டியிலிருந்து ஒதுங்கினார். அதன் பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்தப் பின்னணியில் இன்றைய நிகழ்வில் பேசிய அவர், “அதிமுக கட்சி கீழே சரிந்து சென்று கொண்டிருக்கிறது.
இது தான் உண்மை. இந்த உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது. 10 முறை தேர்தலில் தோல்வியை மட்டுமே பார்த்துள்ளோம். வெற்றி பெறவே இல்லை. எதிர்க்கட்சிகள் மோசமாக உள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் தொடர்ந்து பேசாமல் இருந்தால் ஜெயலலிதா வழி வந்த கழகத் தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் ஆகும்.
என்னைப் பொருத்தவரை தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்காக புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகிறோம். திராவிட கட்சியை ஆரம்பிக்கப்போகிறோம்.” என்த் தெரிவித்தார்
என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது, தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை. 5 நாளுக்கு மேல் எனக்கு பரோல் தரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி” எனக் கூறியிருக்கிறார்.
கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியவர் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களை தாங்கி இருக்கும் என்றார். கட்சியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

