சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தூதுக்குழு ஒன்றைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தாம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழரசுக் கட்சி பல தடவைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதன் பின்னரே, ஜனாதிபதி அந்தக் கட்சியின் தூதுக்குழுவை சந்தித்துப் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் என்பதிலிருந்தே, ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்துக்கும் இனப்பிரச்சினைத் தீர்வில் எவ்வளவு தூரம் அக்கறை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே இந்த அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு விடயத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அதாவது, இந்த அரசாங்கம் பெரிய கட்சிகளை மட்டுமின்றி, சிறிய கட்சிகளையோ அல்லது சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையோ, அரசின் பங்காளிக் கட்சிகளாக இணைத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை என்பது ஒருபுறமிருக்க,

அரசாங்கத்துக்கு வெளியில் உள்ளவர்களின் ஆலோசனைகளைக் கூட செவிமடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை என்பதே அது.

தமது கட்சியான ஜே.வி.பியிடம் ஏற்கெனவே உள்ள திட்டங்களின்படியே அரசாங்கம் சகல விடயங்களையும் செய்து வருகிறது. அரசாங்கம் பொதுமக்களிடையே வேகமாகச் செல்வாக்கு இழந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இத்தகைய ஒரு சூழ்நிலையை வைத்தே அரசாங்கத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியையும் நோக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில், இனப்பிரச்சினை சம்பந்தமான ஜே.வி.பியின் நீண்டகால கொள்கை என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதன்படி பார்த்தால் –
ஜே.வி.பி. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டது கிடையாது.

அதன் காரணமாக அவர்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ்விடப் பிரதேசம் உண்டு என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

எனவே, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஜே.வி.பியின் இத்தகைய நிலைப்பாடு காரணமாகத்தான், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசாங்கங்கள் சில நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தன்னும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்ற போதெல்லாம் ஜே.வி.பி. அவற்றுக்கெதிராக தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளது.

இதற்குப் பதிலாக, இனப்பிரச்சினை சம்பந்தமாக ஜே.வி.பியின் நிலைப்பாடென்பது, ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து இனங்களும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்த பின்னரும் இதுவே அதன் நிலைப்பாடாக உள்ளது. இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடிய அனைத்து பேரினவாதக் கட்சிகளினதும் நிலைப்பாடும் இதுதான்.

ரில்வின் சில்வா

அதனால்தான், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், அவரது சில அமைச்சர்களும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சம்பிரதாயபூர்வமாகச் சொல்லி வந்தாலும், அரசாங்கத்தின் சகல விடயங்களையும் தீர்மானிக்கும் சக்தி படைத்த ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும், ஜே.வி.பியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுனில் ஹெந்துநெத்தியும் அரசியல் அமைப்பில் தற்போது இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டம் புதிய அரசியல் அமைப்பின் மூலம் நீக்கப்படும் என்று அடிக்கடி சொல்லி வருகிறார்கள்.

அதாவது, சிறுபான்மை இனங்களுக்கு தற்பொழுது சில உரிமைகளையாவது வழங்கும் மாகாண சபை முறை நீக்கப்படும் என மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

இப்படியான ஒரு சூழலில், தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

ஜனாதிபதி புதிய அரசியல் அமைப்பு மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என தமிழரசுக் கட்சி தூதுக்குழுவிடம் சொன்னாலும், அது ஒரு பொய் வாக்குறுதி என்பது மிகவும் தெளிவானது.

ஏனெனில், அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு ஆரம்பக்கட்ட வேலைகளையும் கூடத் தொடங்கவில்லை.

உண்மையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் நோக்கம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லையென்பதே நன்கு விடயமறிந்த அரசியல் வட்டாரங்களின் கருத்தாகும்.

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கு விரும்பாமைக்கு சில காரணங்கள் இருக்கின்றன. பிரதானமாக இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம்.

முதலாவது காரணம், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய பல முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்பது. ஆனால் இப்போது அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் மனநிலையில் இல்லை.

அதற்குக் காரணம், அரசாங்கம் அன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு இருந்த மனநிலையைப் பயன்படுத்தி, பொய் வாக்குறுதிகள் பலவற்றை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்தாலும், இன்று மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

எனவே, இத்தகைய ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் தான் விரும்பியதைச் செயல்படுத்துவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு எந்தவொரு கருவிகளும் இல்லை.

எனவே, அரசாங்கம் புதியதொரு அரசியல் அமைப்பைக் கொண்டு வந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, தனது தலையில் தானே மண் அள்ளிப்போட ஒருபோதும் விரும்பாது.

நிலைமை இப்படி இருக்கையில், அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றைக் கொண்டு வந்து அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தமிழரசுக் கட்சி தூதுக்குழுவிடம் சொன்னது முற்றுமுழுதான பொய்யாகும்.

இந்த விடயத்தில் மட்டும் அரசாங்கம் பொய்யுரைக்கவில்லை. வேறு விடயங்களிலும் அப்பட்டமான பொய்யுரைத்துள்ளது. உதாரணமாக –

தாம் ஆட்சிக்கு வந்தால் முன்னைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் என்று சொன்னது. ஆனால், அதற்கு மாறாக, ரணில் செய்த அதே ஒப்பந்தத்தை எந்தவிதமான மாற்றமும் இன்றி அனுரகுமார அரசாங்கமும் தொடர்கிறது.

அதேபோல, தாம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றுமுழுதாகவும் உடனடியாகவும் நீக்குவோம் என்றது. ஆனால் பழைய சட்டத்தை நீக்கிவிட்டு, அதைவிட மோசமான புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவை போலத்தான் அரசாங்கத்தின் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, இனப்பிரச்சினை தீர்வு விடயங்களும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே, அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றைக் கொண்டு வந்து, இனப்பிரச்சினைககுத் தீர்வு காணும் என எதிர்பார்ப்பது, ‘இலவு காத்த கிளி’யின் கதை போலாகிவிடும்.

ஆனபடியால், இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வு காண்பதை நோக்கிச் செல்வதானால், அனைத்து தமிழ் தேசியவாத சக்திகளும் கருத்து வேறுபாடுகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு பரந்த முன்னணியாக ஐக்கியப்பட்டுப் போராடுவதே ஒரே வழி.

ஆனால், அது மட்டும் போதாது. தமிழ் மக்களின் நீதியான கோரிக்கையின் பக்கம் நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் சிங்கள மக்களையும், சர்வதேச சக்திகளையும் திருப்பவும் வேண்டும்.

இது மட்டுமே தமிழ் மக்களின் நீதியான கோரிக்கையை வென்றெடுப்பதற்கான ஒரேயொரு வழியாகும்.

Share.
Leave A Reply