“சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார்.
இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறை உத்தரவுப்படி இந்த லட்சக்கணக்கான கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன.
அண்மையில் வெளியான கோப்புகளில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷிய பெண்களுடன் பாலியல் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி, அதற்கு ரகசியமாக மருந்து எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, சமீபத்தில் தனது தொண்டு நிறுவனமான கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்கள் மத்தியில் பேசிய பில் கேட்ஸ், தான் ரஷிய பெண்கள் இருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும் எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த செய்தியை பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் “டெஸ்லா பங்குகளை வீழ்த்த நினைப்பவர்கள் நல்ல மனது உள்ளவர்கள் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவன தலைவர் மஸ்க் “கர்மா உண்மையானது” என்று பதிவிட்டுள்ளார்.
Bill Gates admits he had 2 affairs with Russian women, apologizes to staff over Jeffrey Epstein ties https://t.co/4tuP1qRpBm pic.twitter.com/Rok1KUqTK4
— New York Post (@nypost) February 25, 2026
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் என சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) தொகையை Short Selling முறையில் பில் கேட்ஸ் முன்பொருமுறை பந்தயம் கட்டியிருந்தார்.
இதுவே மஸ்க், தற்போது ‘கர்மா உண்மையானது’ என பதிலளிக்க காரணமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக பில் கேட்ஸ் இந்த ஷார்ட் பொசிஷனை தொடர்ந்து வைத்திருப்பதாக மஸ்க் முன்பு கூறியிருந்தார்.
ஒருவேளை டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால், இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி என்று மஸ்க் எச்சரித்திருந்தார்.
தற்போது உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க் இருக்க, முதல் 10 இடங்களில் கூட பில் கேட்ஸ் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது
.Short Selling என்பது பங்குச்சந்தையில் பங்குகள் விலை குறையும் போது லாபம் ஈட்டும் ஒரு உத்தியாகும்.
இதில், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை வருங்காலத்தில் குறையும் என்று கணித்து கடன் வாங்கி அந்த பங்குகளை வாங்குவார்கள்.
அதை அதிக விலைக்கு விற்பார்கள். கணித்தபடி, அந்த பங்குகளின் விலை குறையும்போது அவற்றை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தி லாபம் பார்ப்பார்கள். “,

